(627)
கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டுஎன்னை வாட்டம் தணிய வீசீரே
(628)
பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே
(629)
கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்
நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே
(630)
ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கீரே
(631)
அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே
(632)
நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே
(633)
வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே
(634)
உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே
(635)
கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே
(636)
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே
