ஒன்பதாந் திருமொழி
(2987)
இவையும் அவையும உவையம் இவரும் அவரும் உவரும்
எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியுமாக்கியுங்காக்கும்
அவையுள் தனிமுதலெம்மான் கண்ணபிரானென்னமுதம்
சுவையன் திருவின்மணாளன் என்னுடைச் சூழலுளானே.
(2988)
சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை
கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,
வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவனென னருகலி லானே.
(2989)
அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,
கருகிய நீலநன் மேனி வண்ணன்செந தாமரைக் கண்ணன்,
பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்,
ஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே.
(2990)
உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்
மடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே,
உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்,
கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே.
(2991)
ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி,
செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்,
நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக,
ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே.
(2992)
மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அஃதே,
காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே,
சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்,
தூயன் துயக் கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.
(2993)
தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்,
தாளிணைமேலும்பு னைந்த தண்ணந்துழாயுடையம்மான்
கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி,
நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே.
(2994)
நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்,
ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே,
பூவியல் நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்,
காவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே.
(2995)
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான் காண்பன்அவன் கண்களாலே,
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி
அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே.
(2996)
நெற்றியுள்நின்றென் னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே.
(2997)
உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு,
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்,
இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு,
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபெருமே.
