(2993)

(2993)

தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்,

தாளிணைமேலும்பு னைந்த தண்ணந்துழாயுடையம்மான்

கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி,

நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே.

 

பதவுரை

தோள் இணைமேலும்

இரண்டு திருத்தோள்களிலும்

நல் மார்பின் மேலும்

விலக்ஷணமான திருமார்பிலும்

சுடர் முடிமேலும்

ஒளிபொருந்திய திருமுடியிலும்

தாள் இணைமேலும்

இரண்டு திருவடிகளிலும்

புனைந்த

அணியப்பட்ட

தண் அம் துழாய் அடை அம்மான்

குளிர்ந்தழகிய திருத்துழாயையுடைய ஸங்வாமியாய்

கேள் இணை ஒன்றும் இலாதான்

பொருத்தமான உபமானமொன்று மில்லாதவனாய்

கிளரும் சுடர் ஒளி மூர்த்தி

மென்மேலும் கிளர்கின்ற சிவந்தவொளியே வடிவெடுத்தவனான எம்பெருமான்

நாள்

நாடோறும்

அணைந்து

கிட்டி

ஒன்றும் அகலான்

சிறிதும் விலகாதவானய்க்கொண்டு

என்னுடைய

என்னுடைய

நாவின் உளான்

நாவிலுள்ளவனாக ஆனான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகில் நாயகியோடு கலவி செய்யவரும் நாயகன் அவள் உகக்குமாறு தன்னை அலங்கரித்துக்கொண்டு வருமாபோலே எம்பெருமானும் என்னோடு கலக்க விரும்பித் திருத்துழாய்; மாலையாலே மிகவும் அழகு பெறுவித்துக் கொண்டு வந்து எனது நாவிலே கலந்தானென்கிறார் இப்பாட்டில். முதல் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில் ஆழ்வார் பலகாலும் தண்ணந்துழாய் தண்ணந்துழா யென்றே வாய்வெருவினராதலால் இவராசைதீரத் தண்ணந்துழாய் மாலைகளோடே அழகியவனாக வந்து சேர்ந்தானாயிற்று

அடியார்களைக் கண்டவாறே முந்துற முன்னம் தோள்களாலே அழுந்தக் கட்டியணைப்பனாதலால் முன்னே தோளிணைமேல் திருந்துழாய் சாத்தினான்; தோள்களாலே தழுவி மார்பிலே அணைத்துக்கொள்ளவேண்டுதலால் பிறகு திருமார்புக்குத் திருத்துழாய் சாத்தினான்; இப்படி நம்மை அணைத்துக் கொள்பவன் *கதிராயிரமிரவி கலந்தெறித்தாலொத்த நீணமுடியனன்றோ?* என்று ஸாம்ராஜ்யஸூசகமான திருவபிஷேகத்தின்மீது கண் ஓடுமாதலால், அதன் பிறகு சுடர் முடி மீது சாத்தினான்; அவன் வாரியணைத்துக் கொண்டாலும் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சுவதே நமது ஸ்வரூபமென்று முடிவாகத் திருவடிவாரத்திலே விழவேண்டியிருத்தலால் அதன்பிறகு தாளிணைமேற்புனைந்தான் என்று கொள்க.

அடியார்களைச் சேர்விக்கும் புருஷகாரபூதையான பிராட்டியிருக்கும் இடமாதல்பற்றி ‘நன்மார்பு’ எனப்பட்டது. முடியென்று சிரஸ்ஸுக்கும் கிரீடத்திற்கும் பெயர்.

இங்கே பட்டருடைய ஒரு ரஸோகதி காண்மின்:- உலகில் வீரராயிருப்பவர்கள் முன்னே ஆயுதத்திற்கு அலங்காரம் செய்யுங் கணக்கிலே திவ்யாயுதங்களுக்கு உறைவிடமான தோளிணைமேல் முன்னம் புனைந்தான்; ப்ரணயிகளாயிருப்பவர்கள் அபிமத விஷயத்திற்க அலங்காரஞ் செய்யுங் கணக்கிலே பின்னை மங்கையுறைமார்புக்குப் புனைந்தான்; ஆயுதத்திற்கும் அபிமத வியத்திற்கும் இட்டுப் பிறகு தாங்கள் விநியோகங் கொள்ளும் இத்தனையாகையாலே தன்முடிமீது சூட்டிக் கொண்டான்; சேஷம் அடியார் கைக் கொள்வாராகையாலே திருவடிகளுக்குச் சாத்தினான்- என்று.

கேள் இணை ஒன்று மிலாதான் = கேள் என்பதைக் கேழ் எனக்கொண்டு, உவமையென்று பொருள் கொள்ளலாம்; இணை யென்றாலும் உவமை; ஆக இரண்டு வகையான உவமையுமில்லாதவ னென்றவாறு. தனித்தனியே ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒப்பில்லை, சமுதாயத்திற்கும் ஒப்பில்லை என்றபடி. சந்திரன், மேகம், தாமரை, மலை முதலியவற்றை ஒப்பாகச் சொல்லுகின்றோமேயென்னில்; ஏதேனுமொரு உபமானம் சொல்லித் தீரவேணு மென்பதற்காகச் சொல்லுகிறதத்தனையொழிய, உண்மையில் ஒப்பாவதொன்றில்லை யென்க. “கட்டுரைக்கில் தாமரை நின் கண்பாதங் கை யொவ்வா, சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி யொளியெவ்வாது, ஒட்டுரைத்திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரை யாய்ப்புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி!” என்று ஆழ்வார்த்தாமே அருளிச்செய்வர் மூன்றாம் பத்தில். (கேள் என்றே கொண்டு. பொருத்தமான உவமையில்லாதவன் என்று முரைக்கலாம்; கேள்- உறவு; அதாவது பொருத்தம்!

 

English Translation

He is an icon of radiant light, brilliance beyond comparison. On his shoulders, over his chest, on his crown and his radiant feet, he wears a garland of woven Tulasi flowers, My Lord. becoming dearer day by day, is on my tongue now.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top