எட்டாந் திருமொழி
(3308)
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்,
கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை,
நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட,
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே.
(3309)
மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்,
அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்,
பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட,
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே.
(3310)
மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி,
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி,
படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்,
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே.
(3311)
நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை,
பொறையினால் முலையணைவான் பொருவிடைஏழ் அடர்த்துகந்த,
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழிகோல்கை,
சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே.
(3312)
தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற,
கிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த,
களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து,
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே.
(3313)
அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய,
நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி,
குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட,
கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே.
(3314)
கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,
கிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த,
வளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல,
வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே.
(3315)
வரிவளையால் குறைவில்லாப் பெருமுழக்கால் அடங்காரை,
எரியழலம் புகவூதி யிருநிலமுன் துயர்தவிர்த்த,
தெரிவரிய சிவன்பிரமன் அமரர் கோன் பணிந்தேத்தும்,
விரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே.
(3316)
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல்,
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து,
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க,
யோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே.
(3317)
உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்,
கிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த,
தடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும்,
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.
(3318)
உயிரினால் குறைவில்லா உலகேழ்தன் உள்ளொடுக்கி,
தயிர்வெண்ணெ யுண்டானைத், தடங்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து ளிப்பத்தால்
வயிரம்சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே.
