(2585)
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்
(2586)
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.
(2587)
இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்?
(2588)
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று.
(2589)
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ!
மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி.
(2590)
நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோம் யாம்?
(2591)
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
அம்மா!நின் பாதத் தருகு.
(2592)
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண்காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு.
(2593)
நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் – எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.
(2594)
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்.