திருவாசிரியம்

(2578)

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,

பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய், திகழ்பசுஞ்சோதி மரகதக் குன்றம்,

கடலோன் கைமிசைக் கண்வளர்வதுபோல், பீதகஆடை முடிபூண் முதலா

மேதகு பல்கலன் அணிந்து, சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்

பச்சைமேனி மிகப்பகைப்ப, நச்சுவினைக் கவர்தலை அரவி னமளியேறி,

எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவனிய னிந்திரன் இவர்முதலனைத்தோர்

தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக

மூவுலகளந்த சேவடி யோயே.

விளக்க உரை

(2579)

உலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு,

அவாவா ருயிருகி யுக்க,நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல்,

அமுத வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு

அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்

மூன்றி னொடுநல்வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

விளக்க உரை

(2580)

குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை

மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து

வரைபுரை திரைபொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர

வரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே

இசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே?

விளக்க உரை

(2581)

ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,

யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்

கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை

ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,

மாயக் கடவுள் மாமுத லடியே.

விளக்க உரை

(2582)

மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது

ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை

வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க்கண் ணோடு கனிவா யுடையது

மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன

முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே

விளக்க உரை

(2583)

ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்

தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி

தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,

கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி

தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.

விளக்க உரை

(2584)

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,

யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்

மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்

அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்

பெருமா மாயனை யல்லது, ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top