(172)
வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற்பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப்பின் போவாற்குஓர் கோல்கொண்டுவா கடல்நற வண்ணற்குஓர் கோல்கொண்டுவா.
(173)
கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்கநில்
அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவாi
(174)
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்கமுன் னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்குஓர் கோல்கொண்டுவா தேவ பிரானுக்குஓர் கோல்கொண்டுவா
(175)
ஒன்றே யுரைப்பான் ஒருசொல்லே சொல்லுவன்
துன்று முடியான் துரியோ தனன்பக்கல்
சென்றுஅங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா கடல்நிற வண்ணர்க்குஓர் கோல்கொண்டுவா.
(176)
சீரொன்று தூதாய்த் துரியோ தனன்பக்கல்
ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பாரொன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்குஓர் கோல்கொண்டுவா தேவ பிரானுக்குஓர் கோல்கொண்டுவா.
(177)
ஆலத் திலையான் அரவி னணைமேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா
(178)
பொன்திகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒருகண்ணும் கொண்டஅக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்துஉன்னை
மற்றைக்கண் கொள்ளாமே கோல்கொண்டுவா மணிவண்ண நம்பிக்குஓர் கோல்கொண்டுவா.
(179)
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன்வீழ
தன்னிகரொன் றில்லாச்சிலைகால் வளைத்திட்ட
மின்னு முடியற்குஓர் கோல்கொண்டுவா வேலை யடைத்தாற்குஓர் கோல்கொண்டுவா.
(180)
தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து
மின்னிலங் குபூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்த ளவும் அரசென்ற
மின்னிலங் காரற்குஓர் கோல்கொண்டுவா வேங்கட வாணர்க்குஓர் கோல்கொண்டுவா.
(181)
அக்காக்காய் நிம்பிக்குக் கோல்கொண்டு வாவென்று
மிக்கா ளுரைத்தசொல் வில்லிபுத் தூர்ப்பட்டன்
ஒக்க வுரைத்த தமிழ்பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர்இவ் வையத்தே.
