(782)
காலநேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலமேழு முண்டுபண்டோர் பாலனாய பண்பனே
வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீரநின்
பாலராய பத்தர்சித்தம் முத்திசெய்யும் மூர்த்தியே.
(783)
குரக்கினப்ப டைகொடுகு ரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்ச ரந்துரந்த வாதிநீ
இரக்கமண்கொ டுத்தவற்கி ரக்கமொன்று மின்றியே
பரக்கவைத்த ளந்துகொண்ட பற்பபாத னல்லையே.
(784)
மின்னிறத்தெ யிற்றரக்கன் வீழவெஞ்ச ரம்துரந்து
பின்னவற்க ருள்புரிந்த ரசளித்த பெற்றியோய்
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை பின்னைகேள்வ மன்னுசீர்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீக னல்லையே.
(785)
ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்
சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே.
(786)
அம்புலாவு மீனுமாகி யாமையாகி ஆழியார்
தம்பிரானு மாகிமிக்க தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்கு லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண மென்கொலோவெம் மீசனே.
(787)
ஆடகத்த பூண்முலைய சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி கள்ளதாய பேய்மகள்
வீடவைத்த வெய்யகொங்கை ஐயபால முதுசெய்து
ஆடகக்கை மாதர்வா யமுதமுண்ட தென்கொலோ.
(788)
காய்த்தநீள்வி ளங்கனியு திர்த்தெதிர்ந்த பூங்குருந்த
சாய்த்துமாபி ளந்தகைத்த லத்தகண்ண னென்பரால்
ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை யுண்டுவெண்ணெ யுண்டுபின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ ரேனமாய வாமனா.
(789)
கடங்கலந்த வன்கரிம ருப்பொசித்துஓர் பொய்கைவாய்
விடங்கலந்த பாம்பின்மேல்ந டம்பயின்ற நாதனே
குடங்கலந்த கூத்தனாய கொண்டல்வண்ண தண்டுழாய்
வடங்கலந்த மாலைமார்ப காலநேமி காலனே.
(790)
வெற்பெடுத்து வேலைநீர்க லக்கினாய்அ தன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர்வ ரம்புகட்டி வேலைசூழ்
வெற்பெடுத்த இஞ்சிசூழி லங்கைகட்ட ழித்தநீ
வெற்பெடுத்து மாரிகாத்த மேகவண்ண னல்லையே.
(791)
ஆனைகாத்தொ ரானைகொன்ற தன்றியாயர் பிள்ளையாய்
ஆனைமேய்த்தி யானெயுண்டி அன்றுகுன்ற மொன்றினால்
ஆனைகாத்து மையரிக்கண் மாதரார்தி றத்துமுன்
ஆனையன்று சென்றடர்த்த மாயமென்ன மாயமே.