(3946)
அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே.
(3947)
வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே! கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே.
(3948)
நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக் க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே
(3949)
என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே.
(3950)
வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறு கின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே.
(3951)
தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித் தான் குரைகழல்தள் குறுகினமே.
(3952)
குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே.
(3953)
மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே?
(3954)
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே.
(3955)
பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே.
(3956)
காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே.