(3935)
கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் நாரணம் ஏ திண்ணம்.
(3936)
நாரணன் எம்மான் பாரணங்காளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே.
(3937)
தானே உலகெலாம் தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே.
(3938)
ஆள்வான் ஆழிநீர் கோள்வாய அரவணையான்
தாள்வாய் மலரிட்டு நாள்வய் நாடீரே.
(3939)
நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.
(3940)
மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன்
பேயார் முலையுண்ட வாயான் மாதவனே.
(3941)
மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்
தீதொன்று மடையா ஏதம் சாராவே.
(3942)
சாரா ஏதங்கள் நீரார் முகில்வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே.
(3943)
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே.
(3944)
வினைவல் இருளென்னும் முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே.
(3945)
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே.