(2857)
சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு
அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?
(2858)
ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லில் மாயனன் றைவர்த்தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்
பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.
(2859)
சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து
எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே.
(2860)
என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை
தன்னையென் பார்ப்பர் இராமா னுச! உன்னைச் சார்ந்தவரே?
(2861)
சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமா னுச! எம் பெருந்தகையே.
(2862)
கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என்றுன்னியுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே
வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே.
(2863)
வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்
தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்
உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மையல் லாலெனக் கில்லை, மற்றோர்நிலை தேர்ந்திடிலே.
(2864)
தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை
ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தைசெய்தே.
(2865)
செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச! என்னை முற்றுநின்றே.
(2866)
நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்
என்றனக் கும்அது,இராமா னுச! இவை யீந்தருளே.
(2867)
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல்பொருளால்,இப்படிய னைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?