(3868)
வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை
திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்
பண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார்
மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே.
பதவுரை
|
வண்ணம் மணி மாடம் |
– |
அழகிய மணி மாடங்களை யுடைத்தான |
|
நல் நாவாய் உள்ளானை |
– |
விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து |
|
திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன் |
– |
திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய் |
|
பண் ஆர் தமிழ் |
– |
பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து |
|
இப்பத்தும் வல்லார் |
– |
இப்பத்தையும் ஒதவல்லவர்கள் |
|
மண் ஆண்டு |
– |
இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு |
|
மல்லிகை மணம் கமழ்வர் |
– |
“ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். மண்ணாண்டு என்பதனால் ஐஹிகபோகம் புஜிக்கப் பெறுகை சொல்விற்று. மல்லிகை மணங்கமழ்வர் என்பதனால் ஆமுஷ்மிகபோகம் புஜிக்கப்பெறுகை எங்ஙனே சொல்லிற்றாகிறதென்னில்; மல்லிகை மணமென்று ஒரு பரிமளத்தை மாத்திரம் சொன்னபடியன்று; இது உபலக்ஷணமாய் ஸகல பரிமளங்களையும் சொன்னபடியாகி, வேதாந்தங்களிலே ஸர்வ கந்த* என்று ஸகல பரிமளங்களும் வடிவெடுத்தவனாகக்ச சொல்லப்படுகிற எம்பெருமானாகப் பெறுவர்–எம்பெருமானோடு ஸாம்பாந்நராவர் என்றபடியாம் *தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்வர் * என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத் தக்கது. “மல்லிகை மணங்கமழ்வர்” என்பதற்குப் பன்னீராயிரவுரைகாரர் “மல்லிகைபோலே பசுத்தமான யகஸ்ஸெளரப்யவிகாஸத்தை யுடையவராவர்” என்றுரைத்தார். அவ்வுரை ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களுக்குப் பொருந்தியதன்று.
English Translation
This decad of the thousand Pann-based songs, by walled kurugur’s Satakopan on the lord Tirunavai residing amid painted mansions, -those who master it will rule Earth and exude the fragrance of Jasmine
