(3551)
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம்
சீறா எறியும் திருநேமி வலவா. தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடி யேனுன் அடிசேர் வண்ணம் அருளாயே.
பதவுரை
|
கொடு வல அசுரர் குலம் எல்லாம் |
– |
மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம் |
|
கூறு ஆய் |
– |
பலபல கண்டங்களாகி |
|
நீறு ஆய் |
– |
சாம்பலாகி |
|
நிலன் ஆகி |
– |
தரைப்பட்டிருக்கச் செய்தேயும் |
|
சீறா |
– |
பின்னையும் சீறி |
|
எறியும் |
– |
ஜ்வலியா நிற்கிற |
|
திரு நேமி வலவா |
– |
திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே! |
|
தெய்வம் கோமானே நித்ய ஸூரிநாதனே! |
||
|
சேறு ஆர் சுனை |
– |
சேறு நிரம்பிய கனைகளிலே |
|
தாமரை |
– |
செந்தாமரை மலர்கள் |
|
செம் தீ மலரும் |
– |
சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள |
|
திருவேங்கடத்தானே |
– |
அளவுபடாத அன்பையுடையேனான நான் |
|
உன் அடி சேர் வண்ணம் |
– |
உன் திருவடிகளைச் சேறும்படி |
|
அருளாய் |
– |
அருள்புரிய வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கூறாய் நீறாய்) விரோதிகளையெல்லாம் கிழங்கெடுக்கவல்ல திவ்யாயுதத்தினால் ஒளி பெற்றிருக்கிற நீ எனது விரோதிகளையும் போக்கி, நான் உன் திருவடிகளைச் சேருமபடி க்ருபைபண்ண வேணுமென்கிறார். “கொடுவல்லசுரர் குலமெல்லாம் கூறாய் நீறாய நிலனாகி“ என்று அந்வயிப்பது. சத்ருக்களை முதலில் இருதுண்டமாக்கிப் பிறகு நீறாக்கிப் பின்பு அதுவுங்காண வொண்ணாதபடி வெறுந்தாரையாக்குமென்று திருவாழியாழ்வானுடைய விக்கிரமம் சொல்லுகிறது. மூலத்தில் ஆகி என்றிருந்தாலும் “ஆக்கி“ என்று பிறவினையாகவுங் கொள்ளலாம். “சீறா“ என்பது செய்யாவென்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம், சீறியென்றபடி. வலவா – வல்லவன் என்ற சொல் வலவன் என்று தொகுத்தலாய் விளியுருபு ஏற்றதாகக் கொண்டால் “திருவாழியை அடக்கியாள வல்லவனே!“ என்று பொருளாம்.
தெய்வக் கோமானே! – “யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ யென்றால் அஃதுனக்கு வியப்பாமோ“ (திருவரங்கக் கலம்பகம் –க) என்று ஐயங்கார் பணித்தபடியே ஸகல தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம் நானே யென்பதைத் திருமலையில் விளங்கக் காட்டிக்கொண்டு நிற்பவனே! என்றபடி.
(சேறார் சுனைத்தாமரை யித்யாதி) தாமரைக்கு பங்கஜ மென்று பெயராதலால் சேறு நிரம்பிய சுனைகளில் அவை சிவந்த தீப்போலே தோன்றி மலர்கின்றனவாம் திருமலையில் இங்கே ஈட்டில் ரஸோக்தி காண்மின், – “எண்ணெயாலே எரியும் விளக்கொழிய நீராலே யெரியும் விளக்கு கண்டு அநுபவிக்கக்காணும் இவராசைப் படுகிறது, நீரிலே நெருப்பெழுந்தாற்போலேயிறேயிருக்கிறது.“
ஆறாவன்பிலடியேன் –ஆழ்வார்க்கு இதுவொரு நிரூபகமான திருநாமம் போலும் “ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்“ என்றாப்போலே ஆறாதவன்பையே நிரூபகமாகவுடைய அடியேன் என்கிறார். கீழ் மூன்றாமடியில் சுனைகளைப்பற்றி ப்ரஸ்தாவம் செய்தாரே, அந்தச் சுனைகளில் நீர்வற்றினாலும் வற்றும், தம்முடைய அன்பு வற்றாதென்கிறார் போலும். இப்படிப்பட்ட அடியேன் உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே க்ருபை பண்ணியருளவேணும், நீ திருமலையிலே நிற்கிறநிலைக்குப் பயன்பெறவேணும், எனது அன்புக்கு இரையிடவேணும் என்கிறாராயிற்று.
English Translation
O Lord of celestials bearing a fierce discus in hand that cuts, pulverises and grinds to dust the wicked Asura-clans! O Lord of Venkatam with water-tanks that brim with lotuses like fire! Grace that this love-brimming servant joins you lotus test.
