(3552)
வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ண லே!உன் அடிசேர அடியேற் காவா வென்னாயே.
பதவுரை
|
வண்ணம் அருள் கொள் |
– |
அருளே வடிவெடுத்த வண்ணமாய் |
|
அணி பேகம் வண்ணா |
– |
அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே! |
|
மாயம் அம்மானே |
– |
ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! |
|
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே |
– |
நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே! |
|
இமையோர் அதிபதியே |
– |
தேவாதிதேவனே! |
|
தெள் நல் அருவி |
– |
தெளிந்தழகிய அருவிகள் |
|
மணி பொன் முத்து |
– |
மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் |
|
அலைக்கும் |
– |
கொழிக்குமிடமான |
|
திருவேங்கடத்தானே |
– |
திருமலையிலே விளங்குபவனே! |
|
அண்ணலே |
– |
ஸ்வாமியே! |
|
உன் அடி சோ |
– |
உன் திருவடிகளில் வந்து சேரும்படி |
|
அடியேற்கு |
– |
அடியேன் விஷயத்திலே |
|
ஆ ஆ என்னாய் |
– |
ஐயோ வென்றிரங்கியருள வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (வண்ணமருள் கொள்) கீழ்ப்பாட்டில் “உன்னடிசேர் வண்ணமருளாய்“ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! நீர் கேட்டபோதே நாம் அருளமுடியுமோ? அதற்கு ஸமயமில்லையோ? என்ன, இதர விஷயங்களில் போகாதபடியான ஜ்ஞான லாபத்தைப்பண்ணித்தந்தவுனக்கு ப்ராப்தி பண்ணித்தருகை அரிய பெரிய காரியமோ வென்கிறார். வண்ணமருள்கொள் அணிமேகவண்ணா! – அருள் வண்ணங்கொள், அணிமேகவண்ணா என்று அந்வயிக்கலாம். அருள் வண்ணங்கொள் – அருள் தானே வடிவெடுத்த என்றபடி. அருளே திருவேங்கடமுடையானாக மூர்த்திகரித்த தென்றவாறு. அருள் என்னாமல் “மருள்“ என்றும் சொல் பிரிக்கலாம். வண்ணம்-வடிவானது, மருள்கொள் – கண்டார் நெஞ்சை இருளப்பண்ணக் கடவதாயிருக்கிற என்றபடி. மாயவம்மானே! வெறும் வடிவழகு மாத்திரமேயல்லாமல் ஆச்சரியமான குணசேஷ்டிதங்களாலும் பெரியனானவனெ! எண்ணம்புகுந்து தித்துக்குமமுதே-தேவர்களுடைய அம்ருதத்திற்காட்டில் விலக்ஷணமான அம்ருதமென்கிறது. அவ்வமுகத்தைப் புஜிக்கவேணுமானால் தேவயோநியிலே பிறக்கவேணும், பிறந்தாலும் அமிருதத்தை புஜிக்குங்காலத்திலே ஸாதநாநுஷ்டாநங்களுக்கு யோக்யதையுண்டாம்படி ஆகாச கங்கையிலே ஸ்நானம்பண்ணி ஜபம் முதலியன செய்து வருந்தவேணும், இவ்வமுதம் அப்படியன்றே இன்னாரினையாரென்கிற அதிகாரிநியதயில்லை, சிந்தித்தமாத்திரத்திலே எண்ணம் புகுந்து “ஆராவமுதாயடியேனாவியகமே தித்திப்பாய்“ என்று தித்திக்கும். * உளங்கனிந்திருக்குமடியவர்தங்களுள்ளத்துளூறிய தேனாகையாலே எண்ணம்புகுந்து திக்திக்கச் சொல்லவேணுமோ?
இமையோரதிபதியே! மது தவிர வேறொன்றைக் கண்ணெடுத்தும் பாராத வண்டுக்கு “மதுவ்ரத“ மென்று பெயர், அப்படியே எம்பெருமானை இமை கொட்டாமல் * ஸதாபச்யந்தி * என்கிறபடியே இடைவீடின்றி ஸேவித்துக்கொண்டிருக்கும் நித்ய முக்தர்களுக்கு இமையோரென்று பெயர், அவர்களுக்கு அதிபதியே!.
அந்த இமையவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிற விருப்பு மீனுக்குத் தண்ணீர் வார்க்குமாபோலே யிருப்பதொன்று என்று கருதி எம்போலியர்க்குக் காட்சி தருதற்கென்றே வந்து நிற்கிற விடமன்றோ திருமலை. அவ்விடத்து அருவிகளுக்குள்ள ஔதார்யமும் உனக்கு அருமைப்படவேணுமோ? அவை மணிகளையும் பொன்களையும் ஸர்வஸ்வதானம் பண்ணுகிறபடி கண்டால் நாமும் அங்ஙனே ஸர்வஸ்வதானம் பண்ணவேணுமென்றிருக்க வேண்டாவோ நீ? எனக்கு நீ ஒன்றும் கொடுக்க வேண்டா, திருவுள்ளத்திலே என்னைப்பற்றி ஐயோவென்று சிறிது இரங்கியருளவமையும் என்கிறார். ஹா ஹா என்கிற வடசொற்கள் ஆவ்வெனத் திரியும், இரக்கக் குறிப்பிடைச்சொல்.
English Translation
O Lord of celestials, beautiful cloud-hued natural grace, O Ambrosia! Wonder-Lord, entering sweetly into feeling! O Lord of Venkatam where rivulets wash gems, pearls and gold! My Lord, inquire of me and grant me your lotus feet.
