(3553)
ஆவா வென்னா துலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திருமா மகள்கேள்வா,
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே.
பதவுரை
|
ஆ ஆ என்னாது |
– |
இரக்கமில்லாமல் |
|
உலகத்தை அலைக்கும் |
– |
உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான |
|
அசுரர் |
– |
ஆஸுரப்ரக்ருதிகளினுடைய |
|
வாழ்நாள் மேல் |
– |
ஆயுளை முடிப்பதற்காக |
|
தீ வாய் வாளி |
– |
நெருப்பை உமிழ்கிற அம்புகளை |
|
மழை பொழிந்த சிலையா |
– |
மழைபோலே வர்ஷித்த சார்ங்க வில்லையுடையவனே! |
|
திரு மா மகள் கேள்வா |
– |
திருமகள் கொழுநனே! |
|
தேவா |
– |
தேவனே! |
|
சுரர்கள் முனிகணங்கள் விரும்பும் |
– |
தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக ஆதரிக்கும் படியான |
|
திரு வேங்கடத்தானே |
– |
திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! |
|
பூ ஆர் கழல்கள் |
– |
(உனது) புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை |
|
அரு வினையேன் |
– |
மஹாபாபியான நான் |
|
பொருந்தும் ஆறு |
– |
கிட்டும்படி |
|
புணராய் |
– |
கற்பித்தருளவேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (ஆவா வென்னாது) பிரானே! உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ சாஸ்த்ரங்களில் காட்டிக்கொடுத்த ஸாதனங்களொன்றும் எனக்கு உபயோகப்படவில்லை, ஆனபின்பு எனக்கென்று தனியேயொரு ஸாதனம் கண்டு தரவேணுமென்கிறார். இக்கருத்துக்கொண்ட அவதாரிகை நம்பிள்ளை இட்டருளுகிறார், எனக்கென்று தனியேயொரு ஸாதனம் கண்டு தரவேணுமென்று பிரார்த்திக்கிறவிதற்குக் கருத்து என்ன? என்று ஆராயவேண்டும். “நான் பண்ணின பாவங்களுக்கு நீ ஸ்ருஷ்டித்திருக்கிற நரகங்கள் போராது, எனக்கென்ன ஒரு நரகம் கல்பிக்க வேணும்“ என்று ஒருவ் சொன்னால், நரகம் கல்பிக்க வேணுமென்பது இங்கு விவக்ஷிதமன்றே, பரமதயாளுவாய் சக்திமானான நீ அத்தைப் போக்கியருளவேணும் என்பதே கருத்தாகும், அதுபோலே இங்கும் வித்தோபாயமான நீயே ரக்ஷித்தருள வேணுமென்பதுதான் தாற்பரியமாகத் தேறி நிற்கும்.
இந்த ப்ரஸங்கத்திலே ஈட்டில் ஒரு ஐதிஹ்யம் அருளிச் செய்யப்படுகிறது, “நம்பிள்ளை ஜீயரை ஒருநாள், பஞ்சமோபாயமென்றுகொண்டு ஒன்றுண்டு என்று சொல்லாநின்றார்கள், நாட்டிலேயும் அங்ஙனேயிருப்பதொன்றுண்டோ? என்று கேட்டருள, நான் அறிகிலேன், இனி சதுர்த்தோபாய்ந்தான் பகவானேயாயிருக்க, வ்யோமாதீதம் சொல்லுவாரைப்போலே அவனுக்குமவ்வருகே யொன்றுண்டு என்கையை நான் கேட்டறியேன் என்றருளிச் செய்தார்“ என்று. இந்த ஸ்ரீஸூக்திகளைக் காணுமவர்களுக்கு ஒரு சங்கை தோன்றும், ஆசார்யாபிமாநம் ஐந்தாவத உபாயமென்று ஸ்ரீவசநபூஷணாதிகளில் ப்ரஸித்தமாயிருக்க, அதற்கு மாறாக நஞ்சீயர் அருளிச் செய்தாப்போலே தெரியவருகின்றதே, இது என்ன? என்று. (இதற்கு ஸமாதானம்) ஆசார்யாபிமாநம் ஸ்வதந்த்ரோபாயமானாலும் அது ஸித்தோபாயத்திற்குள்ளேயே அந்தர்ப்பூதமாக நினைக்கத்தக்கது. “ஈச்வரனைப் பற்றுகை கையைபிடித்துக் கார்யங்கொள்ளுமோ பாதி, ஆசார்யனைப் பற்றுகை காலைப்பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி“ என்கிற ஸ்ரீவசநபூஷண திவ்யஸூக்தியை நன்கு நோக்குமளவில் இவ்விஷயம் அவகாஹிக்கும். ஆகவே ஆசார்யாபிமாந மென்பது ஸித்தோபாயத்திலேயே சொருகி நிற்கும். இதை ஐந்தாவது உபாயமென்று சொல்லியிருந்தாலும் “காரியஞ் செய்யும் விஷயத்தில் இது அமோகமானது“ என்பதைத் தெரிவிப்பதிலேயே அது பர்யவஸித்து நிற்குமத்தனை.
மேலே சொன்னவிதமாக நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச் செய்தபோது பின்னையும் நம்பிள்ளை கேட்டாராம் “இப்படியானால் * ஆவா வென்னாதென்கிற பாட்டு அருளிச் செய்யும் போது “எனக்குத் தனியேயொரு ஸாதனங்கண்டு தரவேணுமென்கிறார்“ என்று தேவரீர் அருளிச் செய்வதுண்டே, அது எங்ஙனம்“ என்று. அதற்கு நஞ்சீயர் உத்தரமருளிச் செய்ததாவது – நான் அங்ஙனே சொன்னதற்குத் தாற்பரியம் கேளாய், எம்பெருமானே! நீ இருக்கும் போது நான் இங்ஙனே இழக்கலாகுமோ? ஸித்தோபாயமும் தட்டுப்படலாகுமோ? என்று வெறுத்துச் சொல்வது மாத்திரமே தாற்பரியம் – என்று.
ஆவா வென்னாது உலகத்தையலைக்குமசுரர் – உலகில் யாரேனும் வருத்தப்படுவாருண்டாகில் அவர்களைக்கண்டு ஹா ஹா! (ஐயோ ஐயா) என்று இரங்க ப்ராப்தம், அதற்குமாறாக உலகத்தைக் கொடிதாக வதை செய்யுமவர்கள் ஆஸுப்ரக்ருதிகள், அப்படிப்பட்டவர்களுடைய வாழ்நாளைத் தொலைக்கவேண்டி நெருப்பையுமிழ்கின்ற மிகக்கொடிய அம்புகைளப் பிரயோகித்த கோதண்டராமா! என்றவாறே ஆழ்வார்க்குக் கரதூஷணாதிவத் ப்ரகரணம் நினைவுக்கு வந்த்து, அப்போதைய வெற்றியைக் கண்ட பிராட்டி * தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம், பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே * என்கிறபடியே அன்றுதான் பெருமானை பார்த்தாவாக நினைத்து அணைத்துக்கொண்டாள் எனகிற இதிஹாஸத்திற்கு ப்ரத்யபிஜ்யாபகமாக “திருமாமகள் கேள்வா!“ என்று விளிக்கிறார். “தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமாமகள் கேள்வா“ என்கிற சேர்த்தியழகு மிகவும் ரஸிக்கத் தக்கது.
தேவா! – “திருமாமகள் கேள்வா தேவா!“ என்கிற சேர்த்தயை நோக்குங்கால் * ச்ரத்தயாதேவா தேவத்வமச்நுதே * ச்ருதியின் பொருள் நன்கு பொருந்தும். ச்ரத்தா என்று பிராட்டியின் திருநாமம், பிராட்டியோட்டைச் சேர்த்தியினால்தான் எம்பெருமான் வேனாகிறனென்றபடி. இங்கே நம்பிள்ளையீடு, (தேவா!) இவள் அணைத்தபின்பு திருமேனியிற் பிறந்த புகர். அன்றியே, விரோதிகளைப் போக்குகையாலே வடிவிலே பிறந்த காந்தியைச் சொல்லவுமாம்.“ இதில் “அன்றியே“ என்கிற இரண்டாவது நிர்வாஹம் “தீவாய்வாளி மழை பொழிந்த சிலையாதேவா“ என்று யோஜித்து அருளிச்செய்தபடி.
(சுரர்களித்யாதி) பிரமன் சிவனிந்திரன் முதலான தேவர்களும் ஸநக ஸந்நதநாதி மஹர்ஷிகளும் இதுவே நமக்குப்ராப்யஸ்தானமென்று விரும்பி யிறைஞ்சியேத்துமிடமான திருமலைக்கு இறைவனே! கிட்டி யநுபவிக்கப்பெறாத பாபத்தைப் பண்ணின நான் உன்னுடைய பூவார்கழல்களைப் பொருந்தும்படியான ஒரு உபாயத்தைக் கல்பித்தருளவேணுமென்றாராயிற்று. பூ ஆர் கழல் – புஷ்பங்களை நிரம்பிய திருவடி, அல்லது பூப்போன்ற திருவடி. திருவேங்கடமுடையானுடைய திருவடிக்குப் பூவார் கழல்களென்றும், அழகியமணவாளனுடைய திருவடிக்குத் திருப்பொலிந்த சேவடியென்றும், கச்சிநகர்த் தேவப்பெருமாளுடைய திருவடிக்குத் துயரறுசுடரடியென்றும் ஸம்பிரதாயத் திருநாம்மென வழங்குவர் பெரியோர்.
English Translation
O Lord of lotus-dame Lakshmi, you rained fire-arrows ending the days of the heartless. Asuras who troubled the Earth! O Lord of Venkatam adored by gods, Asuras and Munis! Pray show this lowly self the way to your lotus feet.
