(3532)
நுங்கட்கி யானுரைக்கேன் வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,
வெங்கட்புள் ளூர்ந்துவந்து வினையேனைநெஞ் சம்கவர்ந்த,
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச்சென் றாகிலும்கண் டிதுவோதக்க வாறென்மினே.
பதவுரை
| யான் வளர்த்த கிளிகாள் |
– |
நான் வளர்க்க வளர்ந்த கிளிகளே! |
| வம்மின் |
– |
இப்படி வாருங்கள் |
| நுங்கட்கு யான் உரைக்கேன் |
– |
உங்களுக்கு நான் ஒன்றுசொல்லுகிறேன். |
| வெம் கண் புள் |
– |
வெவ்விய கண்ணையுடைய பெரிய திருவடியை |
| ஊர்ந்து வந்து |
– |
நடத்திக்கொண்டு என் பக்கலிலே வந்து |
| வினையேனை நெஞ்சம் கவர்ந்த |
– |
பரவியான என்னுடைய உள்ளத்தைக கொள்ளைகொண்ட |
| செம் கண் |
– |
புண்டரீகாஷனும் |
| கரு முகிலை |
– |
காளமேகச்யாமனும் |
| செய்யவாய் |
– |
சிவந்த அதரத்தை வுடையவனும் |
| செழு கற்பகத்தை |
– |
விலக்ஷண கல்பவ்க்ஷம்போன்ற வனுமான எம்பிரானை |
| எங்கு ஆகிலும் சென்று கண்டு |
– |
எவ்விடத்திலாவது சென்று சேவித்து |
| இதுவோ தக்க ஆறு என்மின் |
– |
இதுதானோதகுதியென்று சொல்லுங்கோள். |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நுங்கட்கு யான்) மீண்டும் கிளிகளை விளித்துச் சொல்லுகிறாள். எங்கேனும் போயாகிலும் அவனைக் கண்டு “உம்முடைய தக்கவாறு இதுவோ“ வென்னுங் கோளென்கிறாள். சொல்ல நினைத்த வார்த்தையை ஆரம்பித்துச் சொல்லலாமே, “நுங்கட்கு யானுரைக்கேன் விம்மின்“ என்றவிது அவசியமோ? என்று சங்கை தோன்றக்கூடும், இதற்குப் பரிஹாரமாக நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர், “தனக்கு முன்னே ஆற்றாம்மையோடேயிறே அவையிருக்கிறது, ஆருக்குச் செல்லும் வார்த்தையை ஆருக்குச் சொல்லுகிறது, ஆற்றாமை சொல்லுவியாத்தில்லையிறே.“ என்று (இதன் கருத்தாவது) எனது நிலைமையை நான் வாய்விட்டுச் சொல்லாமலே நீங்கள் தாமாகவே அறிந்துகொள்ள வல்லி கோள், தூதுபோக வேண்டுந்தசை இவளுக்குள்ளதென்று நீங்களே உணர்ந்து தூதுபோகக் கடமைப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு நான் சொல்ல வேண்டிதேயில்லை, ஆனாலும் என்னாற்றமையாலே சொல்லா திருக்கமுடியவில்லை, சொல்லுகிறேன் வாருங்கள் என்கிறாள் என்பதாம்.
தூதுபோகைக்காகவன்றோ உங்களை நான் வளர்த்தது என்கிற கருத்துத்தோன்ற யான் வளர்த்த கிளிகாள்! என்கிறாள். * வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே * என்கிறாள் எங்கள் தோழிமார்களிலே பொருத்தி, அப்படியே நானும் கைகூப்பி வணங்குபடியாகக் காரியம் செய்யுங்கோளென்கிறாள்.
நாங்கள் யாரிடம் செல்லவேணும்? எங்கே செல்லவேணும்? யாது சொல்லவேணும்? என்று கிளிகள் கேட்க, மூன்றுக்கும் விடை கூறுகின்றாள் பின்னடிகளால். * அருளாழிப்புள் * என்று முன்பு சொன்ன வாயாலே இப்போது “வெங்கட்புள்“ என்கிறாள், என் பக்கலிலேயே தங்கியிருக்க வேண்டிய தலைவனை கண்பாராதே பிரித்துக்கொண்டுபோன புண்ணியனன்றோ அப்புள்ளரையன் என்று வயிறெரிந்து சொல்லுகிறபடி. அப்பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வந்து என்னுடைய நெஞ்சைக் கவர்ந்துசென்றவன் இன்னானென்று உங்களுகுத் தெரியுமே அவனைத்தான் காளமேகமென்றும் கற்பகமென்றும் கவி பாடித்திரிவர்கன், அவன் என்னைப் போலே இன்னும் பலரையும் துடிக்கவிட்டு ஒருவர்க்கும் அகப்படாமே எங்கேனு மிருப்பன், எங்கிருந்தாலும் கண்டுபிடிக்க உங்களால் முடியுமே, எங்குச் சென்றாகிலும் காணங்கோள், கண்டு அதிகமான பேச்சுக்கள் பேசவேண்டா, “இதுவோதக்கவாறு“ என்றிவ்வளவே சொன்னாற் போதுமானது என்கிறாள்.
இப்பாட்டில் “எங்குச்சென்றாகிலுங்கண்டு“ என்றதை உயிராகக்கொண்டு இத்திருவாய்மொழி அந்தர்யாமித்வத்திலும் தூதுவிடுகிறதாக நிர்வஹிப்பர்கள். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி “என்றொளித்திருக்குமிடமெங்கும் புக்கு.“ என்றாம்.
English Translation
O Parrots, I brought you up; now let me teach you something. The Lord came riding on his Garuda and stole my wicked heart. He has red eyes and lips, a dark hue and rises like a Kalipa trees. Go seek him wherever he is, then say to him, “This is the proper way”.
