(3533)

(3533)

என்மின்னு நூல்மார்வ னென்கரும்பெரு மானென்கண்ணன்,

தன்மன்னு நீள்கழல்மேல் தண்டுழாய்நமக் கன்றிநல்கான்,

கன்மின்க ளென்றும்மையான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,

சென்மின்கள் தீவினையேன் வளர்த்தசிறு பூவைகளே.

பதவுரை

தீ வினையேன் வளர்த்த

கொடிய பாவியான நான் வளர்க்க வளர்ந்த
சிறு பூவைகளே

சிறு பூவைப்பறவைகளே!
என் மின்னு நூல் மார்வன்

மின்போலே விளங்குகின்ற யஜ்ஞோபவீ தமணிந்த்திருமார்பை எனக்கு அநுபவிப்பித்தவனும்
என் கரும் பெருமான்

தன் திருமேனி நிறத்தை எனக்கு அநுபவித்த பெருமானும்.
என் கண்ணன்

எனக்கு ஸர்வாத்மநா விதேயனுமான எம்பெருமான்
தன் நீற் கழல் மேல் மன்னு தண் துழாய்

தனது நெடிய திருவடிகளின்மீது பொருந்தியுள்ள திருத்துழாயை
நமக்கு அன்றி நல்கான்

நமக்குத் தவிர வேறொருவர்க்கும் கொடுக்ககில்லான்,
கன்மின்கள் என்று

“நான் சொல்லிக்கொடுப்பதை அப்யஸியுங்கோள்“ என்று சொல்லி
யான் உம்மை கற்பியா வைத்த

நான் உங்களுக்குக் கற்பித்து வைத்த
மாற்றம் சொல்லி

பாசுரங்களைச் சொல்லிக்கொண்டு
சென்மின்கள்

அப்பெருமானிடம செல்லுங்கோள்

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (என்மின்னுநூல்) சில பூவைகளைத் தூது விடுகிறாள். பூவைகளை இவள் அழைக்கும்போதே அவை சிறிது பராமுகமாயிருந்தன, பராத்பரனிடத்தில் நம்மை இவன் தூது போகச்சொல்லுவன், அவன் நம் வார்த்தையைக் கவனிப்பானோ? ஒன்று கொடுப்பானோ? இதெல்லாம் வீண் ப்ரயாஸந்தானே என்றிருந்தனவாகக் கொண்டு அவற்றுக்கு உத்ஸாஹம பிறக்குமாறு உரைக்கின்றாள். இப்பாட்டில் இரண்டாமடி உயிரானது. அலங்காரத்தாலும் வடிவழகாலும் ஸௌலப்த்தாலும் என்னை யீடுபடுத்திக்கொண்டவன், தன்மன்னுநீள்கழல்மேல் தண்டுழாய் நமக்கன்றி நல்கான் – * தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடல்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான் * என்னும்படி திருத்தோள் முதலான பல அவ்யங்களில் அவர் திருத்துழாய் அணிந்துகொள்வர், எதை ஆர்க்குக் கொடுத்தாலும் அடிமேல் புனையுமது அடியார்களுக்கே யாகையாலே திருவடிகளில் சாத்தின திருத்துழாயை நமக்கன்றி மற்றையோர்க்குத் தந்திடமாட்டார், ஆகையாலே நீங்கள் சங்கையின்றிச் செல்லலாம் என்றவாறு.

நெடுந்தூரம் செல்லவேணுமே, பரதேயம் (வழிச்சாதம்) ஏதேனுமுண்டோவென்று கேட்க, * பாதேயம் புண்டரீகாக்ஷநாமஸங்கீர்த்தநாம்ருதம் என்பது உங்களுக்குத் தெரியாமையில்லையே, உங்களுக்கு நான் கற்பித்துவைத்த வார்த்தைகள் பலவுமுண்டே, * தயிர்ப்பழஞ் சோற்றொடு பாலடிசிலும் தந்து பயிற்றிய சொற்கள் இல்லையோ? அவற்றைச் சொல்லிக் கொண்டே செல்லுங்கோளென்கிறாள். த்வயாநுஸந்தானம் பண்ணிக்கொண்டே செல்லுங்கோளென்பது கற்பியா – செய்யாவென்னும் வாய்ப்பாட்டிறந்து காலை வினையெச்சம். கற்பித்து என்றபடி.

தீவினையேன்வளர்த்த என்பதற்கு மர்மஸ்பர்சியான பொருளை நம்பிள்ளை வெளியிட்டருளுகிறார், “என்னுடைய பாபமிருந்தபடி பாருங்கோள், அவனும் நானும் கூடவிருந்து உங்களைக் கொண்டாடுகையன்றிக்கே உங்களைக்கொண்டு காரியங் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். வயிற்றில் பிறந்தாரையிடுவித்து அபிமதனை அழைத்துக்கொள்ளுகையோபாதி புன்மையில்லயே”

English Translation

O Little mynahs, this wicked self brought you up. My radiant-chested dark Lord Krishna will not deny you the Tulasi on his radiant lotus feet. Go to him and speak the worlds I taught, repeating them all the way.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top