(3531)

(3531)

தூமது வாய்கள்கொண்டு வந்தென்முல்லைகள் மேல்தும்பி காள்,

பூமது வுண்ணச்செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற,

மாமது வார்தண்டுழாய் முடிவானவர் கோனைக்கண்டு,

யாமிது வோதக்கவா றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே.

பதவுரை

முல்லைகள் மேல்

முல்லைப்பூக்களிலே வாழ்கிற
என் தும்பிகாள்

எனக்கு இனிய தும்பிகளே!
தூ மது வாய்கள்

தூய மதுவிலே படியவேண்டிய வாயைக்கொண்டுவந்து
பூ மது உண்ண செல்லில்

அந்த முல்லைப்பூக்களில் மதுவை யுண்ணச் செல்ல நினைத்திர்களாகில் (அதற்காக நீங்கள் செய்யவேண்டியதொன்றுண்டு அது என்னென்னில்)
வினையெனை

பிரிந்து வருந்தவேண்டிய பாவத்தைப் பண்ணின என்னோடே
பொய் செய்து

க்ருத்ரிமமான கலவியைப்பண்ணி
அகன்ற

பிரிந்துபோன
மா மது வார் தண் துழாய் முடி

பெருவெள்ளமான மது ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை முடியிலணிந்துள்ள
வானவர்கொனை

நித்யஸூரிநாதனை
கண்டு

நேரில் ஸேவித்து
யாம் இதுவோ தக்க ஆறு என்ன வேண்டும் நுங்கட்கு

“நாம் இப்படி மேன்மை கொண்டாடியிருப்பதோ தகுதி?“ என்று நீங்கள் சொல்லவேண்டும்.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தூமதுவாய்கள்) என்னை நோவுபடுத்திப்போய் எட்டாநிலத்திலே ஒலக்கமிரூக்கை தான் ஒரு ஸ்ரீமத் காமபீர்யமோவேன்று கேளுங்கோளென்று திருநாட்டிலே சில தும்பிகளைத் தூது விடுகிறாள். பூமதுவுண்ணச் செல்லில் தும்பிகள் எங்கேனும் தேடிப்பருகுவதற்கு ஆசையோடே எங்கும் திரியும், பரமபதாநாதனுடைய திருமுடியிலே மதுநிரம்பிய செவ்வியதுழயா மலர் மிகமிகவுள்ளதென்று தெரிந்துகொண்டு அங்கும் செல்லக் கூடுமென்றெண்ணிச் சொல்லுகிற வார்த்தை இது.

வினையேனைப் பொய் செய்து அகன்ற – “பரக்யஹீநையான வெனக்கு ஸம்ச்லேஷமென்று ஓர் இந்த்ரஜாலத்தைக்காட்டி“ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். மாமதுவார் தண்டுழாய் முடிவானவர்கோனைக் கண்டு – இது பரிதாபம் தோற்றச் சொல்லுகிற வார்த்தை. என் தலையிற் பூ சருகாய் வாடியுலர்ந்து கிடக்க, அவர் மாமதுவார் தண்டுழாய் முடியராய் விளங்கா நின்றார் பிரிவாற்றாமையாலே நான் ஒரு மூலையிலே முகத்தை மூடிக்கொண்டு உறாவிக்கிடக்க, அவர் நித்யஸூரிகளுக்கு ஒலக்கங கொடுத்துக்கொண்டு வானவர்கோனாக வீற்றிராநின்றார்! என்று காட்டுகிறபடி. அன்னவரைக்கண்டு “யாமிதுவோ தக்கவாறு“ என்னுமிவ்வளவே நீங்கள் சொல்லகிறபடி. அன்னவரைக்கண்டு“ யாமிதுவோ தக்கவாறு“ என்னுமவ்வளவே நீங்ள் சொல்ல வேண்டிய வார்த்தை. இங்கு யாம் என்றது நீர் என்றபடி, எம்பெருமானே! நீர் பராங்குசநாகியின் துடிப்பறியாதே இங்ஙனே போது போக்குகை தகுதியோ? என்ன வேண்டுமென்றபடி.

இப்பாட்டில் * வானவர் கோனைக்கொண்டு * என்றபடி உயிராகக்கொண்டு இது பரத்வத்தில் விடுகிற தூது என்பர்.

English Translation

O Bumble-bees! Take note, if you wish to sip the nectar from my Mullai flowers, go seek the Lord who played false and deserted me.  He wears the fragrant Tulasi on his crown, Tell him, this is no way to treat a lover.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top