(3530)

(3530)

ஓடிவந் தென்குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ,

கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்

ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறெழ செற்றபிரான்,

சூடிய தண்டுளவ முண்டதூமது வாய்கள்கொண்டே?

பதவுரை

கூடிய வண்டு இனங்காள்

கூடிக் களித்திருக்கின்ற வண்டுத்திரள்களே!
குருநாடு உடைய ஜவர்கட்கு ஆய்

குருக்ஷேத்திரத் தலைவர்களான பஞ்சபாண்டவர்களுக்காக
ஆடிய மா நெடு தேர்படை

ஆடலில் சிறந்த குதிரைகளையும்பெரிய தேர்களையும் மற்றுமுள்ள சேனைகளையும்
நீறு எழ சென்ற

பொடியாம்படி முடித்த
பிரான்

எம்பெருமான்
சூடிய

திருக்குழலில் அணிந்துகொண்டிருக்கிற
தண் துளபம் உண்ட

குளிர்ந்த திருத்துழாயிலேயிருந்து மதுபானம் பண்ணின
தூ மது வாய்கள் கொண்டு

தெளிந்த மதுவையுடைத்தான வாயையுடையீர்களாய்க் கொண்டு
ஓடி வந்து

விரைந்து வந்துசேர்ந்து
என் குழல் மேல்

என் கூந்தலிலுள்ள
ஒளி மர் மலர்

ஒளி பொருந்திய சிறந்த பூவிலே
ஊதீர்

உங்களுடைய உத்ஸாஹச் செயல்களைச் செய்யுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஓடிவந்து) எம்பெருமான் பக்கலிற்சென்று என் நிலைமையை அறிவித்து வந்து என் தலைமேலே வ்த்தியுங்கோளென்று சில வண்டுகளைக் குறித்துச் சொல்லுகிறாள். நீங்கள் தூது சென்றால் உங்களைத் தலைமேலே வைத்துக் கொண்டாடுவேனென்கை. கூடிய வண்டினங்காள் எம்பெருமான் பக்கலிலே ஒருவரிருவராய்ச் சென்று தூது சொன்னால் அவன் செவிகொடுத்துக் கேளான், ஒரு கூட்டமாகச் சென்று சொல்லவேணும், அதற்கு, இனிமேல் கூட்டம் திரட்டவேண்டாமல் ஏற்கனவே திரண்டிருக்கின்றீர்களே, இது என்னுடைய பாக்கியம் என்கிறாள் போலும். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “மஹாராஜரைப் போலே படைதிரட்ட வேண்டாவிறே உங்களுக்கு, என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டிருக்கப் பெற்றதீரே இளையபெருமாள் கிஷ்கிந்தாத்வாரத்திலே சென்று குணகீர்த்தநம் பண்ணின பின்பிறே படை திரட்டிற்று.

இப்பாட்டின் ஆறாயிரப்படி யருளிச்செயல் பரமபோக்யதையே வடிவெடுத்ததாயிருக்கும். “ராஜ்யப்ராப்தராய் ஸமாச்ரிதருமான பாண்டவர்கள் பக்கலுள்ள வாத்ஸல்யத்தாலே த்ரைலோக்ய விஜயோபகரண பூதமாய் அத்யுந்நதமாயிருந்த திருத்தேரிலே நின்று அவர்களுக்கு ஸாரத்யம் பண்ணித் தத்விரோதிகளை நிரஸித்தருளின மையத்திலே பமபக்தியுக்தரான திவ்ய ஜனங்கள் சிசிரோபசாரமாகச்சாத்தியருளப் பண்ணின திவ்யகந்தமான திருத்துழாய் மதுவை பானம்பண்ணி அத் தூமதுவாய்களைக் கொண்டு ஓடிவந்து அம்மதுவையும் அதிசீதளமான திவ்யகந்தத்தையும் என் குழல்மேல் ஒளிமாமல்களிலே வர்ஷிக்கவேணும் வர்ஷிக்கவே அம்மலர்களு மலர்ந்து புதுக்கணிக்கும், என்னிறம் பண்டு பண்டுபோலொக்கும், கெண்டை யொண்கணும் துயிலுமென்று வண்டுகளை நோக்கிச் சொல்லுகிறாள் “ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.

பரமபுருஷனிடம் நாங்கள் செல்லக்கூடுமோ! ஒருவாறு சென்று விண்ணப்பஞ் செய்தாலும் முகங்கொடுத்துக் கேட்கும்படியாயிருக்குமோ? காரியம் செய்யப் பெறுமோ? என்று வண்டுகட்கு நினைவாக, அவன் பரமஸுலபனாயிற்றே. * பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான் * என்கிறபடியே ஒருத்தி விரித்த கூந்தலை முடிப்பிக்கப் பாண்டவர்ளுக்குப் பக்ஷபதியாயிருந்து கழுத்திலே ஓலைகட்டித் தூது சென்று விரோதிகளைப் பிணம் படுத்த பெருமானன்றோ வென்று ப்ரக்ருதத்திற்கு உபயுக்தமான குணங்களை விளக்கினபடி.

ஸாரக்ராஹிகளான ஆசார்யர்களையோ சிஷ்யர்களையோ வண்டென்கிறது. தேனையே தாரகமாகக்கொண்டிருக்கும் வண்டு, * உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளுக்கிறதேன். * என்னப்பட்ட பகவத் விஷயமாகிற தேனையே தாரகமாகக் கொண்டிருப்பர்கள் இவர்கள்.

English Translation

O Gregarious bees, go drink the nectar from the Tulasi flowers worn by the Lord, -he steered the chariot for the Pandavas against the great army in war, -come back quickly and blow his fragrance over my coiffure flowers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top