(3419)
எம்மா னே!என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே,
எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே,
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை,
அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே.
பதவுரை
|
எம்மானே |
– |
எல்லாவிதத்திலும் மஹானானவனே! |
|
என் வெள்ளை மூர்த்தி |
– |
என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே! |
|
என்னை ஆள்வானே |
– |
என்னை அடிமை கொள்பவனே! |
|
வேண்டும் ஆற்றால் |
– |
திருவுள்ளமானபடியே |
|
எம் மா உருவும் ஆவாய் |
– |
எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே! |
|
மா செம் கமலம் |
– |
பெரிய செந்தாமரைகள் |
|
செழுநீர் மிசை |
– |
அழகிய நீரினிடத்து |
|
கண் |
– |
கண்டவிடமெங்கும் |
|
மலரும் |
– |
மலரப்பெற்ற |
|
திருகுடந்தை |
– |
திருக்குடந்தையிலே |
|
அ மா மலர் |
– |
அப்படிப்பட்ட சிந்த மலர்போன்ற திருக்கண்கள் துயில்பவனே! |
|
தான் என் செய்கேன் |
– |
நான் என்ன பண்ணுலேன்! (இவ்வழகு கண்டு என்னால் தரிக்கப்போகிறதில்லையே’) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (எம்மானே!) கீழ்ப்பாட்டில் “கண்டேனெம்மானை!” என்ற ஆழ்வாருடைய கருத்து- பிரானே! உன்னை உலகத்தார் காண்கிற ரீதியிலே நானும் காணுமித்தனையேயோ? எனக்காக எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், குசலப்ரச்னம் பண்ணியருளுதல், அணைத்தல் தெய்தருள வேண்டாவோ? என்று கேட்பதாம். அங்ஙனே கருத்துத் தொளிக்கக் கூப்பிடச் செய்தோம் ஆராவமுதன் அசையாதேயிருக்க, மீண்டுமொருபடி கூப்பிடுகிறார்.
எனக்கு ஸ்வாமியானவனே! அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே! அப்படிப்பட்ட திவ்யமங்கள விக்ரஹத்தின் அழகைக்காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவனே!, என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றவாறு பலவகைப்பட்ட சரீரங்களை பரீக்ரஹிக்குமாபோலே, நீர்ஹேதுக கருணையினாலும் திவ்யஸங்கல்பத்தாலும் வேண்டினபடியெல்லாம் அவதார ரூபங்களைப் பரிக்ரஹித்துப் பொருள் செய்பவனே!, இங்ஙனே உபகாரமே வடிவாயிருக்கின்ற நீ இன்னமும் எனக்குச் செய்யவேண்டிய உபகாரங்களைச் செய்யத்தவரலாமோ? ஒன்றும் செய்ய வேண்டா; திருக்கண்களைத் திறந்து கடாக்ஷித்தருளுமித்னை போராதே அடியேனுக்கு. இத்திருக்கண்களுக்கும் போலியான கமலங்களெல்லாம் நீரிலே மலர்ந்திருக்கும்படியைக் காணாநின்ற நான் வன்காற்றாறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்கால் கமலத்தடம்போற் பொலிந்த எம்பிரான் தடங்கண்கள் இப்படி மலரவேண்டாவோ என்று துடிக்கின்றேனே, இந்தத் துடிப்பைத் தவிர்க்க வேண்டாவோ வென்கிறார்.
என்வெள்ளைமூர்த்தி- தன்னுடைய ஸ்வரூபல்வபாவங்களில் ஒன்று தப்பாமல் அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக எனக்குக் காட்டித் தந்தவனே! என்றபடி.
என்னையாள்வானே! = அஞ்சிறைய மடநாரை தொடங்கிப் பல பல பதிகங்களிலேயுண்டான ஆற்றாமைகளைப்போக்கி முகங்காட்டி அடிமைகொண்டவனே! என்றவாறு.
வேண்டுமென்றால் எம்மாவுருவும் ஆவாய் = இச்சாக்ருஹீதாபிமதோருதேஹ: * என்றகிறபடியே திருவுள்ளானபடியெல்லாம் திருமேனிகளைப் பரிக்ரஹித்து ஸாதுபரித்ராணம் பண்ணுமவனே! என்றபடி. (எழிலேறே) நம்மைப்போலே கருமமடியாகப் பிறக்கையன்றிக்கே கருணையடியாகப் பிற்கையாலே நிறக்கேடுதானில்லாமே ஒளிமல்லப் பெறுமாயிற்று.
செம்மாகமலம் செழுநீர்மிகை கண்மலரும் = திருக்குடந்தை வயல்களிலே தாமரைமலரக் காண்கிறேன்; எம்பெருமானுடைய தீருக்கண்தாமரை அந்தோ! மலரக் காண்கின்றிலேனே! என்று தளர்கின்றார்.
என்னான் செய்கேனே?= திருக்கண்கள் மலர்ந்தாலன்றித் தரிக்ககில்லாத அடியேன் இப்படியே பட்டினி கிடந்து போக வேண்டியதுதானோ என்கிறார்.
English Translation
My Lord, My Ruler, my pure icon, my beautiful black Bull you take any form at will. You recline amid tirukkudandai waters filled with large lotuses, your dreamy eyes liken those flowers! O what can I do?
