(3418)

(3418)

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,

நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,

சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!

 

பதவுரை

ஆரா அமுதே

எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய

எம்மானே

எம்பெருமானே!

அடியேன் உடலம்

என்னுடைய சரீரமானது

நின்பால்

உன் திறத்தில்

அன்பு ஆய் ஏ

அன்புதானே வடிவெடுத்ததாகி

நீர் ஆய் அலைந்து

நீர்ப்பண்டமாக உருகி வியாகுலப்பட்டு

கரைய

கரையும்படியாக

உருக்குகின்ற நெடுமாலே

உருகப்பண்ணாநிற்கிற ஸர்வேச்வரனே!

சீர் ஆர் செந்நெல்

சீர்மைமிக்க செந்நெற்பயிர்கள்

சவரி வீசும்

சாமரம்போல் வீசப்பெற்று

செழுநீர்

செழுமைதங்கிய தீர்த்தங்களையுடைத்தான

திருகுடந்தை

திருக்குடந்தையிலே

ஏர் ஆர் கோலம் திகழ

அழகு பொருந்திய திருமேனி விளங்க

கிடந்தாய்

சாய்ந்தருளினாய் (அவ்வழகை)

கண்டேன்

ஸேவிக்கப் பெற்றேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆராவமுதே.) இத்திருவாய்மொழியிலே நம் பூருவர்கள் பொரவும் ஈடுபட்டிருப்பர்களாயிற்று. இங்கு ஈட்டில் நம்பிள்ளை அருளிச் செய்வது பாரீர்;- “உத்தரபூமியிலே லோகஸாரங்க மஹாமுனிகள் வர்த்திவாநிற்க, இங்குத்தையானொருவன் அங்கேறச்செல்ல, ‘பிள்ளாய் தக்ஷிணபூமியில் விசேஷமென்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி யென்றொரு பிரபந்தமவதரித்து சிஷ்டர்கள் பரிக்ரஹித்துப் போரக் கொண்டாடிக்கொடு போராநின்றார்கள்’ என்ன, ‘அதிலே உனக்குப் போவதொரு சந்தை சொல்லிக்காணாய்’ என்ன, “ஆராவமுதே என்கிற வித்தனையும் எனக்குப்போம்’ என்ன, ‘நாராயணாதி நாமங்கவ் கிடக்க இங்ஙனேயொரு நிர்த்தேச முண்டாவதே! இச்சொல் கடையாடுகிற தேசத்தேறப் போவோம்’ என்று அப்போதே புறப்பட்டுப்போந்தார்.”

அடியேனுடலம் நின்பாலன்பாயே- ஆழ்வார் இப்போது அடியெனென்கிறது தம்முடைய ஸ்வரூப முள்ளபடியை நினைத்துச் சொல்லுகிறதன்று; ஆராவமுதே என்று பேசியநுபவித்த போய்யதைக்குத் தோற்று அடிமைபுக்கு அடியேனென்கிறார். (உடலம் அன்பாய்) அசேதநமான சரீரமானது பகவத் விஷயத்திலே அன்புதானே ஒருவடிவு கொண்டாற் போலேயாயிற்று. அன்பு ஆத்மாவினுடைய தருமமே யல்லது சரீரத்தினுடைய தருமமன்; அப்படியிருந்தும் விஷயடிவரக்ஷண்யமானது அசேதநமான உடலும் ஆத்மதர்மம் கொள்ளும்படி செய்ததாயிற்று. ஆசார்யஹ்ருதயத்தில் “உடலம் ஆத்மதர்மம் கொள்ள” என்றருளிச் செய்தது இப்பாசுரம் நோக்கியேநாணும்.

நீராய் அலைந்து = உடலம் அன்பாகி, அன்புதான் நீராய்க்கொண்டு அலையாநின்றது. இங்ஙனே கரைந்து உருகும்படி செய்பவன் எம்பெருமானேயாயிற்று. அவனுடைய நிலைமைதான் என்னென்னில்; (நெடுமாலே) ஆழ்வாருக்கு எம்பெருமானளவிலே யுண்டான வியாமோஹம் அற்பமென்னும்படியாய் எம்பெருமானுக்கு ஆழ்வாரளவிலே யுண்டான வியாமோஹம் நெடிதாயிருந்தது. ‘பெரிய பித்துக்கொள்ள’ என்றும் பாடினான் அவன்.

ஆழ்வார் இங்ஙனே உருகிப் பேசும்படி எந்த திருவுருவத்தைக் கண்டாரென்னில், அது சொல்லுகிறது பின்னடிகளில், மிகவும் கனத்து அசைந்து வருகிற செந்நெற்கதிர்கள் சாமரை வீசுமாபோலேவீச, செல்வம்மல்கு தென்திருக்குடந்தையில் திருமேனியழகு நிறம் பெறும்படி திருக்கண்வளர்ந்தருளும் பெருமானே! உன்து கிடையழகுகண்டு இப்பாடு படுகின்றே வென்றாராயிற்று.

(சீரார் செந்நெல்) “செந்நெலுக்குச் சீர்மையாவது- ஆராவமுதாழ்வார்க்கு அமுதுபடியாகிற சீர்மை” என்பர் உம்பிள்ளை. அர்ச்சாவராரத்திலே எம்பெருமானுடைய திருப்பவனத்துக்குப் பாங்காக நிவேதனமாகப் பெறுகிற சீர்மை செங்நெற்பயிர்களுக்காம்.

ஏரார்கோலம் திகழ = “நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்று போலேயிருக்கும்; ஓரிடத்திலே இருத்தல் கிடத்தல் செய்தவாறே வைரூப்பம் தோற்றிக் கண்கொண்டு பார்க்க வொண்ணாதபடி யிருப்பார்கள்; இங்கு அங்ஙனன்றிக்கே கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படியிருக்கை. இவனுணரின் செய்வதென்! என்று வயிறு பிடிக்கவேண்டும்படியிருக்கை” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

 

English Translation

Insatiable ambrosia! First Lord! My body melts in love for you.  You make me weep and toss like restless water. I see your resplendent form in Tirukkudandal, reclining amid fertile waters, fanned by whisks of golden paddy.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top