(3420)

(3420)

என்நான் செய்கேன்? யாரே களைகண்? என்னையென் செய்கின்றாய்?

உன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன்,

கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்ணாள்,

சென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே.

 

பதவுரை

நான் என் செய்கேன்

அடியேன் என்ன செய்வேன்!

களைகண் யாரே

ரக்ஷகராவார் யாவர்!

என்னை என் செய்கின்றாய்

என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்?

உன்னால் அல்லால்

உன்னைத் தவிர்த்து

யாவராலும்

வேறு ஒருவிதமான உபாயத்தாலும்

குறை ஒன்றும் வேண்டேன்

சிறிதும் அபேக்ஷையடையேனல்லேன்

கன் ஆர் மதில் சூழ் குடந்தை கிடந்தாய்

வேலைப்பாடு பொருந்திய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!

அடியேன்

அடியேனுடைய

அரு

ஆத்மாவானது

வாழ்நாள்

வாழும் காலத்தில்

செல் நாள் எ நாள்

கழிகின்ற நாள்கள் எத்தனைநாளோ

அ நான்

அந்த நாள்களெல்லாம்

உன் தாய் பிடித்தே

உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டே

செல

நடக்கும்படி

காண்

நடாக்ஷித்தருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (என்னால் செய்கேள்.) இப்படி துடித்துக் கூப்பிட்ட விடத்திலும் குளிர நோக்குதல் குசலப்ரச்னம் பண்ணுதல் ஒன்றும் செய்யாமையாலே, ‘நாம் பேற்றுக்கு ஏதேனும் உபாயம் அனுட்டிக்கவேணும் என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருக்கிறான்போலும்’ என்று கொண்டு ‘பிரானே! நான் என் காரியம் செய்கையென்று ஒன்றுண்டோ? நீயேசென்று தலைக்கட்டித் தரவேணும்’ என்கிறார்.

முதலடியில் மூன்றுவகையான கேள்விகள் அடங்கியிருக்கின்றன; என் தலையிலே ஏதேனும் காரியம் ஏறிடுவதாக எண்ணியிருக்கிறாயோ? பிறரை ரக்ஷகராகத் தேடியோடும்படி செய்ய நினைத்திருக்கிறாயோ? நீயே செய்வதாக நினைத்திருக்கிறாயோ? என்று கேள்விகள். உன் திருவடிகளைப் பெறுகைக்கு என்னால் செய்யலாவ தில்லாமையாலே என் தலையிலே ஒன்று ஏறிடவேண்டா; நீ உன்னைத் தரப்பார்த்தாயோ? உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயோ? “என்னான் செய்தேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி.

ஸ்ரீவசனபூஷணத்தில் “என்னான் செய்கேனென்கிற விடத்திலே இம்மூன்றுமுண்டு” என்ற ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்தேயம். அவ்விடத்து மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்; – “எம்பெருமான் தம்முடைய ஆர்த்திகண்டு இரங்கக் – காணாமையாலே தன்னைப் பெறுமிடத்தில் சில ஸாதநாநுஷ்டானம் பண்ணவேணுமென்று இருந்தானாகக்கொண்டு உபாயாந்தரானுஷ்டானத்துக்கு யோக்யதையில்லாதபடி அஜ்ஞானான நான் என்செய்வேன்? ஜ்ஞானம் தந்தோமே யென்னில், நீதந்த ஜ்ஞானத்தாலே ஸ்வரூப பாரதந்த்ரியத்தை யுணர்ந்து ஸாதநாநுஷ்டானம் அப்ராப்தம் என்றிருக்கிற நான் என் செய்கேன்? ஸ்வரூபத்துக்குச் சேராதாகிலும் உன்னைப் பெறலாமாகில் அது தன்னையனுஷ்டிக்கலாமிறேஜ்ஞானமாத்ரத்தைத் தந்தாயாகில்; பக்தி ரூபாபந்நஜ்ஞானத்தைத் தருகையாலே ஒன்றையும் அடைவுபட அநுஷ்டிக்க க்ஷமனமல்லாதபடி பக்தி பரவசனான நான் என் செய்கேன் என்று இம்மூன்றும் ஆழ்வார்க்கு விவக்ஷிதம்”

உன்னாலல்லால் யாவராலுமொன்றும் குறைவேண்டேன் = உன்னுடைய க்ருபையாலே உன் திருவடிகளைப் பெறுகையொழிய வேறொருபாயத்தால் பெறுவதானாலும் வேண்டா என்றபடி. உபேயமும் உபாயமும் ஒன்றேயாயிருக்கவேணுமென்கை. ‘யாவராலும்’ என்று உயர்திணையாயிருந்தாலும் அஃறிணையாகவே பொருள் விவக்ஷிதம். எந்தக்ரியா கலாபமும் உபாயமாக வேண்டிற்றில்லை என்றபடி. இங்கே ஈடு:- “யாவையாறு மென்னாதே யாவராலு மென்கிறது- உபாயபாவம் ஒரு சேதநனாலே யென்றிருக்கையாலே” என்று.

(கன்னார்மதிள் இத்யாதி.) பரிவுடையார்க்கு அஞ்சவேண்டாதபடி திடமான மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே திருக்கண் வளர்ந்தருள்பவனே! என்னுடைய ஆத்மவஸ்து உள்ளவளவும் உன் திருவடிகளை அவலம்பித்துக்கொண்டே கடக்கும்படி பார்த்தருளவேணும்.

அடியேன் அரு = அரூபியான வஸ்துவுக்கு அருவென்று பெயர்; உருவமுடைத்தல்லாமையாலே ஆத்மாவை அரு வென்கிறது. ‘அடியேனுடைய ஆத்மவஸ்து’ என்றால் அடியேனிற் காட்டிலும் வேறான ஆத்மவஸ்து இருப்பதாகத் தோற்றுகின்றதே, இது பொருந்துமோ? என்று சங்கிக்க வேண்டா; அடியோனாகிய ஆத்மவஸ்து என்றபடியாமத்தனை. “சென்னாளெந்நாளந்தாள்” என்றது யாவதாத்மபாவி என்றபடி. ஆத்மாவுக்கு ஒருநாளும் அழிவில்லாமையாலே சாச்வதகாலமும் என்றதாயிற்று.

 

English Translation

What can I do? What are you doing to me? Who else can protect me? O Lord reclining in Kudandai surrounded by stone walls, I seek no redress with anyone save you; pray see that I lead the remaining days of my life holding on to your feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top