(3354)
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து,
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில்வண்ண னெம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
இரியப் புகுந்திசை பாடி எங்கும் இடங்கொண் டனவே.
பதவுரை
|
திரியும் |
– |
தருமங்கள் தலைகீழாக ஆகும்படியான |
|
கலியுகம் |
– |
கலியுகமானது |
|
நீங்கி |
– |
தொலையப்பெற்று |
|
பெரிய |
– |
தருமந் சிறந்த |
|
கிதயுகம் |
– |
கிருதயுகமானது |
|
பற்றி |
– |
வந்து புகுந்து |
|
தேவர்கள் தாமும் புகுந்து |
– |
தேவப் பிரகிருதிகளும் தாமாகவே நெருங்கி |
|
பேர் இன்பம் வெள்ளம் பெருக |
– |
மஹத்தான ஆனந்த வெள்ளம் பெருகும்படியாக |
|
கரிய முகில் வண்ணன் |
– |
காளமேகவண்ணனாயும் |
|
கடல் வண்ணன் |
– |
கடல்வண்ணனாயுமுள்ள |
|
எம்மான் |
– |
எம்பெருமானுடைய |
|
பூதங்கள் |
– |
பக்தர்கள் |
|
மண் மேல் |
– |
இவ்விபூதியிலே |
|
இரிய புகுந்து |
– |
மிக்க கோலாஹலங்களுடன் வந்து |
|
இசை பாடி |
– |
கீதங்களைப் பாடிக் கொண்டு |
|
எக்கும் |
– |
எல்லாவிடங்களிலும் |
|
இடம் கொண்டன |
– |
வியாபித்துவிட்டார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (திரியும் கலியுகம்) நித்யஸூரிகளும் இந்நிலத்திலே அடியிட்டு வந்து சேர்ந்து ஒன்றுகூடிப் பரிமாறலாம்படி ஸம்ஸாரமண்டலம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ மயமாயிற்றென்கிறார்.
திரியுங் கலியுகம் நீங்கி = கலிபிறந்த நாற்பத்துமூன்றாநாளிலே ஆழ்வார் அவதாரித்தாரென்று பெரியார் கூறுவர்; இன்னமும் நெடுங்காலம் தான் செங்கோல் செலுத்துவதாக வந்துபுகுந்த கலிபுருஷன் சிதையும்படியாயிற்று ஆழ்வாருடைய பெருமை. திரியுங் கலியுகமென்றது தருமமார்க்கம் ருஜுவாக இருக்கையன்றிக்கே தலைகீழாக இருக்கும்படியான கலியுகமென்றபடி. மஹாபாரதத்தில் மோக்ஷதர்மத்தில் – “*** = ந ச்ருண் வந்தி பிது; புத்ரா ந ஸ்நுஷா ந ஸஹோதரர்ந ப்ருத்யா ந கலத்தராணி பவிஷ் யத்யதரோத்தரம்.” என்று சொல்லிற்று; கலியுகத்தில் தகப்பன் பேச்சை மகன் கேளான்; மாமியார் பேச்சை மாட்டுப்பெண் கேளாள்; தமையன் பேச்சைத் தம்பி கேளான்; ஸ்வாமியின் பேச்சை வேலைக்காரன் கேளான்; கணவன் பேச்சை மனைவி கேளாள்; எல்லாம் தலைகீழாகவே ஆகப்போகிறது என்பது அந்த சுலோகத்தின் பொருள். ஆழ்வார் அதைத் திருவுள்ளம்பற்றித் திரியுங் கலியுக மென்கிறார்.
தேவர்கள் தாமும் புகுந்து – இங்குத் தேவர்கள் என்பது இந்திரன் முதலிய தேவர்களையன்று; அனந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான ந்தியஸூரிகளைச் சொல்லுகிறது. இந்தக் கொடுவுலகத்திலலே அவர்கள் அடியிடுதற்கே ப்ரஸக்தியில்லை; அப்படியிருந்தும், அவர்கள் இங்கே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியைக் கண்டு இத்திரளிலே நாமுங்கலந்து பரிமாறி ஸத்தை பெறவேணுமென நினைத்து அங்கே புகுந்தார்களாயிற்று.
பெரியகிதயுகம்பற்றி = பெரிய க்ருதயுகமென்றால் சிறிய க்ருதயுகமும் ஒன்றுண்டோவென்று சங்கிக்கவேண்டா; த்ரோதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்றிப்படி வேறு யுகங்களாலே விச்சேதமின்றிக்கே ஒரு போகியான வளர்ந்த கிருதயுக மென்றபடி. ஆதி ஸ்ருஷ்டியில் கிருதயுகத்தைச் சொல்லுகிறது என்பாருமுண்டு.
பேரின்பவெள்ளம் பெருக = ‘பரமபதத்தில் ஆனந்தமும் சிற்றின்பம்“’ என்று சொல்லும்படியாக, பகவதநுபவ ஆனந்தம் இந்நிலத்திலே அதிசயித்ததாயிற்று. எதனாலே யென்ன;
(கரியமுகில் வண்ணனித்யாதி.) இராமபிரான் சித்திரகூடத்தில் எழுந்தருளியிருக்கும்போது அவனைக் காணப் புறப்பட்ட அயோத்யாவாஸிகள்************* = மோகக்யாமம் மஹாபாஹும் ஸ்திரஸத்வம் த்ருடவ்ரதம், கதா த்ரக்ஷ்பாமஹே ராமம் ஜகதச் சோகநாசகம்” என்று எழில் மேகவண்ணனான இராமபிரானை என்று காண்போம்! என்று காண்போம்!! என்று வாய் வெருவிக்கொண்டே வந்ததுபோல் எம்பெருமானுடைய வடிவழகு தன்னிலேயே சபலர்களான பாகவதர்கள் இந்நிலத்திலே நிரம்பிவிட்டார்கள்.
இரிய – ப்ரீதிகோலாஹலம் பிறக்கும்படியென்கை இரிதலாவது – இருந்தவிடத்தில்லாமை.
English Translation
The rolling age of Kali is ending, the gods have also entered. The golden age of Krita is beginning, and joy is flooding the land. The spirits of my ocean-hued Lord have come singing songs. They cramp the Earth and occupy every nook.
