(3198)

(3198)

முடியானே மூவுலகும் தொழுதேத் தும்சீர்

அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய் புள்ளூர்

கொடியானே, கொண்டல்வண் ணா அண்டத் தும்பரில்

நெடியானே, என்று கிடக்குமென் நெஞ்சமே.

 

பதவுரை

என் நெஞ்சம்

எனது மனமானது

முடியானே

(உபய விபூதி நாயகத்வ லக்ஷணமான) திருவபிஷேகத்தை யுடையவனே!

மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே

மூவுலகத்தவர்களும் வணங்கித் துதிக்கப் பெற்ற சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே!

ஆழ் கடலை கடைந்தாய்

(தேவர்களுக்கு அமுதமளிப்பதற்காக) அழமான கடலைக் கடைந்தவனே!

புள் ஊர் கொடியானே

கருடப்பறவையை ஊர்தியாகவும், கொடியாகவுமுடையவனே!

கொண்டல் வண்ணா

நீலமேகம் போலும் நிறத்தையுடையவனே!

அண்டத்து உம்பரின் நெடியானே

பரமபதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு மஹாபருஷனே!

என்று கிடக்கும்

என்று அநுஸந்தித்து உருகிக் கிடக்கின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானைக்காண வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிர்வேதம் கொண்டு கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார். “என்று” என்பதை முடியானே! இத்யாதியான ஒவ்வொரு விளியோடும் கூட்டுக: என்னெஞ்சம் முடியானே யென்று கிடக்கும்’ -மூவுலகும் தொழுதேத்தும் சீரடியானே என்று கிடக்கும் என்றிங்ஙனே தனித் தனி வாக்யமாக யோஜிப்பது, ஏழுலகுக்கும் தனிக்கோல் செலுத்துமவன் என்பதைக் கோடசொல்லித் தரக்கடவதான திருவபிஷேகமும் தானுமான வழகை யநுபவிக்க நெஞ்சு பாரித்திருக்கின்றமையை முடியானே! என்பதனால் தெரிவிக்கிறார்.

மூவுலகும் தொழுதேத்தும் சீரடியானே! என்று கிடக்கும் என்னெஞ்சம் = ‘குணமுள்ளவர்களைக் கைப்பற்றுவது, தோஷமுள்ளவர்களைக் கைவிடுவது’ என்கிற கொள்கை கொளாமையில்லாதவனாதலால் குணவான்களோடு துஷ்டர்களோடு வாசியற அனைவரும் வந்துபணிந்து ஏத்தப்பெற்ற திருடிகளை யுடையவன் எம்பெருமான், அந்த நிலைமையிலே தமது திருவுள்ளம் ஈடுபட்டிருக்கும்படியைக் கூறினாராயிற்று. “முடியானே – சீரடியானே” என்ற சோத்தி யழகு நோக்கத்தக்க. பொந்கோதஞ்சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதுஞ் சோராமே ஆளுகின்றமைக்கு ஸக்ஷணமாகக் கவித்த திருவபிஷேகத்திலே கண்ணைச் செலுத்தினால் உடனே திருவடிகளிலே விழும்படியாயன்றோ விருப்பது.

அங்ஙனம் திருவடிகளிலே விழுமவர்களுக்குத் தன் திருமேனி நோவவும் ஆனைத் தொழில் செய்து உதவிபுரியும்பெருங்குணம் காட்டப்படுகின்றன ஆழ்கடலைக் கடைந்தாய்! என்று, திருவடிகளின் போக்யதையிலேயே நெஞ்சு ஆழங்காற்பட்டுக் கிடக்க வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் அங்ஙனன்னிற்கே அதை மறந்து ப்ரயோஜநாந்தரத்திலே நெஞ்சு சென்றார்க்கும் உடம்பு நோவக் காரியம் செய்து தரும் பெருங்குணத்திலே தமது திருவுள்ளம் ஈடுபட்டிருக்கும்படியைக் கூறியவாறு.

புள்ளூர் கொடியானே!= திருவடிவாரத்திலே வந்து தொழமாட்டாதவர்கள் இருக்குமிடங்களிலே யெழுந்தருளிக் காட்சி தருவதற்குப் பாங்காகப் பெரிய திருவடியைக் கையாளாக வுடையவனாயிருக்கும் பெருமையிலே யீடுபட்டபடி. “அருளாழிப் புட்கடவீர் அவர் வீதியொருகாள்” என்று விரும்புவார் விருப்பத்தின்படியே நிறைவேற்றுவதற்குப் பாங்காக வேதாத்மாவான விஹகேச்வரனை வரஹனமாகவும் த்வஜமாகவும் உடையவனே! என்று என் நெஞ்சு கிடக்குமென்கிறார். ஊர்தி என்கிற சொல் ஊர் என்று கடைக் குறைந்தனாய்க் கிடக்கிறதென்னலாம். (ஊர்தி – வாஹனம்)

கொண்டல்வண்ணா! = பெரிய திருவடியை நினைத்தவாறே அவன் மது எம்பெருமான் எழுத்தருளியிருக்கும்படியும் நினைவுக்கு வந்து தீருமே; பொன்னிறவண்ணனான புள்ளரையன்மீது கார்முகில்வண்ணனான பெருமான் காட்சி தரும்போதைப் பரபாகசோபையிலே நெஞ்சைப் பறிகொடாதிருக்க முடியாதே. “காய் சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்” என்று அநுபவிப்பவரிறே இவ்வாழ்வார்.

அண்டத்தும்பரில் நெடியானே!  = பறவையரையன்மீது பொலியும் பெருமானைச் சேவித்தவாறே ‘இவனே பராத்பரன்’ என்று அறுதியிட வேண்டும்படி யன்றோ இருக்கும்; “பறவையேறு பரம்புருடா” என்பரே பெரியாழ்வாரும். இவ்விடத்தில் “கேசித் தத்வளிசோததே பசுபதௌ பாரம்யமாஹூ பரே வ்யாஜஹ்ரு: கமலாஸதே நயவிதா மந்யே ஹரௌ ஸாதரம், இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே: தத்வம் தர்சயதீவ ஸம்ப்ரதி ந்ருணாம் தார்க்ஷ்ய: ச்ரூதீராம் நிதி:” என்று திருக்கடிகை, ஸ்ரீதொட்டையாசார்ய ஸ்வாமியருளிய ச்லோகரத்னம் நினைக்கத் தகும். (இதன் கருத்தாவது:- பெரிய திருவடி தனது இரண்டு கைகளிலும் எம்பெருமானது திருவடிகளை ஏந்திக் கொண்டு காட்சி தருவது எங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாம்படியிராநின்றதென்னில்; பரதத்துவம் எது என்பதை நிஷ்கர்ஷிக்கப் புகுந்தவர்களில் சிலர் பரமசிவனையும், சிலர் நான்முகனையும், சிலர் மந்நாராயணனையும் பரபுருடனாகச் சொல்லுகையாலே ஒருவகையான நிஷ்கர்ஷமில்லமல் தடுமாற வேண்டியிருக்கன்றதே! என்று நிலை தளும்பி யிருக்குமவர்கள் திண்ணிய தெளிவு பெறுமாறு வேதஸ்வரூபியான விஹகராஜன் ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே பரதத்துவம் என்று உணர்த்துவான் போன்று அப்பெருமானது திருவடிகளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டிருந்து காட்டுகின்றான் என்னலாம்படியுள்ளது என்கை.)

என்று கிடக்கும் என்னெஞ்சமே = எம்பெருமானது படிகளை இங்ஙனம் ஒவ்வொன்றாகச் சொல்லி என்னெஞ்சம் அலமருகின்றது;  இதற்கு என் செய்வேன்! என்கிறார். அப்பெருமான்றானே வந்து காட்சி தந்தாருலன்றி அவனைக் காணமுடியாதென்று அறிந்து வைத்தும் அந்தோ! நெஞ்சு அலைபாயாநின்றதீ! என்கிறார்.

 

English Translation

O Lord higher than the celestials, you churned the ocean!  Lord of mountain hue, you bear the Garuda banner.  Your feet are worshipped in the three worlds. O My heart lies yearning for you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top