(3137)
கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,
அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொற்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?
பதவுரை
|
முனம் நாளால் |
– |
முற்காலமெல்லாம் |
|
கிற்பன் என்றிலன் |
– |
நன்மைகளைச் செய்யவல்லேனென்கிற இசையும் கொத்ணண்ணிடிலேன் |
|
கில்லேன் என்றிலன் |
– |
தீமைகளைச் செய்யமாட்டேனென்கிற தவிர்தலும் கொண்டிலேன்: (ஸுக்ருதங்களைச் செய்யாதவனாயும் துஷ்க்ருதங்களையே செய்யவனாயும்) |
|
அற்பம் சாரங்கள் அவை |
– |
க்ஷுத்ர விஷயங்களையே |
|
அற்பம் சாரங்கள் அவை |
– |
க்ஷுத்ர விஷயங்களையே |
|
சுவைத்து |
– |
அநுபவித்து |
|
அகன்று ஒழித்தேன் |
– |
உன்னைவிட்டு நீங்கிக் கிடந்தேன். |
|
பல்பல் ஆயிரம் உயிர் |
– |
எண்ணிறந்த ஜீவராசிகளை |
|
செய்த |
– |
நினைத்தபடி உண்டாக்கவல்ல |
|
பரமா |
– |
ஸமர்த்தனே! |
|
நின் |
– |
உன்னுடைய |
|
நல் பொன்சோதி தாள் |
– |
விலக்ஷணமாய் அழகிய ஒளியுருவாய் திருவடிகளை |
|
நணுகுவது |
– |
நான் கிட்டுவது |
|
எஞ்ஞான்று |
– |
என்றைக்கு. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரானே! இதற்கு முன்புள்ள காலமெல்லாம் உன் திருவடிகளைச் சேருமைக்கு உறுப்பாயிருப்பதொரு ஸுக்ருதத்தைச் செய்ததுமில்லை, துஷ்க்குதல்கள் தவிர்ந்ததுமில்லை; எதையும் தோன்றினபடிச் செய்து திரிந்தேன்; இப்படிச் செய்து திரிந்து மிகவும் அற்பமான விஷயரஸங்களைப் புஜித்து உன் திருவடிகளுக்குப் புறம்பாகியே அகன்றொழிந்தேன். அனந்தகோடி ஜீவராசிகளுக்குக் கரண்களே பரப்ரதானம் பண்ணி கடத்திப் போருகின்றவுனக்கு என்னை யொருவனையும் உன் திருவடிகளுக்கு உரியேனாம்படி பண்ணியருளுகை அரிதான காரியமோ? அங்ஙனே திருவுள்ளம் பற்றியருளலாகாதோ? இந்த மஹாபாக்யம் என்றைக்கு நேருமோ என்கிறார்.
கிற்பன்கில்லேன் என்றிலன் = கிற்பன் என்றிலன், கில்லேன் என்றிலன் என்று அந்வயிப்பது. பெரியோர்கள் சில காரியங்களைச் செய்யவேண்டுபடியாக விதிப்பர்கள்; சில காரியங்களைச் செய்ய வேண்டாவென்று மறுப்பர்கள். செய் என்று விதிக்கும் காரியங்களைச் செய்ய வேண்டடாவென்று மறுப்பர்கள். செய் என்று விதிக்கும் காரியங்களை ‘அப்படிச் செய்கிறேன்’ என்று சொல்லுவதும்,செய்ய வேண்டாவென்று மறுக்கும் காரியங்களை ‘செய்வதில்லை’ என்பதும் சாஸ்த்ரவச்யர்களுக்குக் கடமையாகும். இந்தக் கடமையை நான் தவறிவிட்டேனென்கிறார் இங்கு முதலடியில். தவ்ம் மே என்று எம்பெருமான் சொன்னால் ஆமாம் என்று நான் இசைந்திருந்ததுமில்லை, ‘அஹம் மே’ என்று சொல்லாமலிருந்ததுமில்லை என்றபடி. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின் :- “ஆழ்வீர்! பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட ஓர் ஆயாஸமின்றிக்கே, பேற்றில் வந்தால் அபுநராவ்ருத்திலக்ஷண மோக்ஷமாயிருக்கும்; அதுக்கீடாக ஒன்றைச் செய்யவல்லீரே? என்றால், ஓம், அப்படிச் செய்கிறேன் என்றிலன். “இதர விஷயப்ராவண்யமாகிறது- ஆயாஸம் கனத்துப் பேற்றில் ஒன்று இன்றிக்கேயிருக்கும். அத்தைத் தவிர வல்லீரே?” என்றால், ஒம், தவிருகிறேன் என்றினை.”- என்று.
கிற்பன் – செய்ய கிற்பன்; கில்லேன்- செய்யக்கில்லேன். ஸுக்ருதத்தைச் செய்ய கிற்பன் என்னவேணும்; துஷ்க்ருதத்தைச் செய்யகில்லேன் என்ன வேணும்; இரண்டுமில்லை. என்றவிதனால், அக்ருத்யகரணமும், க்ருத்ய அகரணமும் தம்மிடத்தில் பூர்த்தியாகவுண்டென்று காட்டினபடி. இவ்விடத்தில், ‘கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய பூர்வாப்யாஸஜமல்ல” என்ற ஆசார்ய ஹ்ருதய சூர்ணையின் பொருளும் உணரத்தக்கது.
அற்பசாரங்களவை சுவைத்து அகன்றொழிந்தேன்- பெருமானே! உன் திறத்தில் ஈடுபட வொட்டாமல் தடை செய்வதற்கு நீ காட்டி வைத்தவை அபாரமாகவுண்டே; அவற்றில் ரஸபாகம் சிறிதுமில்லை. முள்ளிப்பூவில் ரஸம்போலே அற்பம் இருக்கலாம்; அப்படிப்பட்ட விஷயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல; பலபலவுள்ளன; அவற்றிலே கால் தாழ்ந்து * அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாமே அகன்று போனேன் அநாதிகாலமாக என்கிறார். இங்கே நம்பிள்ளையீட்டில்- “தன் நாவில் பசை கொடுத்து புஜிக்க வேண்டும்படியிருக்கிற விஷயங்கள் தோறும் கால்தாழ்ந்து” என்றுள்ளது. ஒரு நாய் ஒரு சுஷ்கமான எலும்பைப் பற்றிக்கொண்டு வெகுநேரம் கடித்துப் பார்த்தது; அதில் யாதொரு பசையுமில்லை; ஆனால் அதிகமாகக் கடித்ததனால் தன் பல்லிலிருந்தே ரத்தம் பெருகத் தொடங்கிற்று. அந்த ரத்தத்தைப் பருகி அந்த நாய் இன்புற்றதாம். ஆனினும் அது இந்த மருமத்தைத் தெரிந்துகொள்ள மாட்டிற்றில்லை; எலும்பிலிருந்தே ஏதோ ரஸம்பெற்ற புஜித்ததாக நினைத்துவிட்டது. இஃது இங்கு நினைக்கத்தக்கது. இதை திருவுள்ளத்திற் கொண்டே “தன் நாவில் பசை கொடுத்து புஜிக்க வேண்டும்படியிருக்கிற” என்றருளிச் செய்தார் போலும்.
பற்பல்லாயிரமுயிர் செய்த பரமா! = இப்போது இந்த விளிக்குக் கருத்து என்னென்னில்; புதிது புதிதாக விலக்ஷண ஸ்ருஷ்டிகளைச் செய்யவல்ல வுனக்கு, என்னுடைய அயோக்யதையை மாற்றி யோக்யதையை யுண்டாக்குதல் அரிதோ? என்று காட்டுகிறபடி. உன்னுடைய பரமபோக்யமான திருவடியை நான் விரைவில் கிட்டுமாறு செய்தருளாய் என்கிற பிரார்த்தனை ஈற்றடிக்கு உள்ளுறை.
“சக்திமானான நீ கிட்டுவிக்குமதொழிய, என்னைப் பார்த்தால் கிட்ட விரகில்லையென்று கருத்து” என்பது பன்னீராயிரம்.
English Translation
Then I had no power to discriminate, and lost myself in trivial pleasures. O Lord you made these countless thousand souls! O when will I reach your golden feet?
