(3120)
பொருளென்றிவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல் *
மருளில்வண்குருகூர் வண்சடகோபன் *
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரத்துளிப்பத்து *
அருளுடையவன் தாள் அனைவிக்கும் முடித்தே.
பதவுரை
பொருள் என்று | – | (ஒருநாளாகிலும்) பிரயோஜனப்படுமென்று |
இ உலகம் | – | இவ்வுலகங்களை |
படைத்தவன் | – | ஸ்ருஷ்டித்த பெருமானுடைய |
புகழ் மேல் | – | திருக்கல்யாண குணங்களில் |
மருள் இல் | அஜ்ஞான மில்லாத | |
வண் குருகூர் வண் சடகோபன் -; | ||
தெருள் கொள்ள | – | (சேதநர்க்குத்) தெளிந்த ஞானமுண்டாகுமாறு |
சொன்ன | – | அருளிச் செய்த |
ஓர் ஆயிரத்துள் | – | ஆயிரம் பாசுரங்களுள் |
இப்பத்து | – | இப்பதிகம் |
முடித்து | – | ஸம்ஸார பந்தத்தைப் போக்கி |
அருள் உடையவன் தாள் | – | பரமதயாளுவான எம்பெருமானது திருவடிகளில் |
அணைவிக்கும் | – | சேர்விக்கும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
***இத்திருவாய்மொழி கற்பார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. இப்பதிகந்தானே ஸம்ஸார பந்தத்தை யறுத்துப் பரமகாருணிகனான எம்பெருமானது திருவடிகளிலே கொண்டு சேர்க்குமென்று பயனுரைத்தவாறு. இப்பதிகத்தை அநுஸந்திப்பவர்களை எம்பெருமான் திருவுள்ளமுவந்து கைக்கொள்வன் என்பது தேர்ந்த கருத்து. இஃதறியாமல் சிலர் இந்த அசேதநமான பத்துப் பாசுரம் எங்ஙனே மோக்ஷோபாயமாகும்? என்று ஆக்ஷேபிப்பர்கள், இது உபசார வழக்கு என்றுணர்க.
பொருளென்றிவ்வுலகம் படைத்தவன் = எம்பெருமான் ஜகத் ஸ்ருஷ்டி பண்ணுவதாவது இறகொடிந்த பறவைபோலே கரணகளேபரங்களை இழந்திருந்த ஆன்மாக்களுக்கு அவற்றைக் கொடுக்கை. அப்படி எத்தனை தடவை ஸ்ருஷ்டித்தாலும் பயன்படா தொழிந்தாலும், என்றேனு மொருநாள் பயன்படுமென்று கருதி மேன்மேலும் ஸ்ருஷ்டிகளைச் செய்து போருவன் என்கிறது. ‘சோம்பாது இப்பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா!’ என்றார் பெரிய திருவந்தாதியிலும்.
புகழ்மேல் மருள் இல் = எம்பெருமானது திருக்கல்யாண குணங்களில் ஸந்தேஹம், விபர்யயம், மறப்பு முதலானவை யில்லாதவர் என்றபடி. * மயர்வற மதிநல மருளப் பெற்றவராதலால் இங்ஙனஞ் சொல்லத்தகு மென்க.
பத்தாந் திருவாய்மொழி உரை முற்றுப் பெற்றது.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
English Translation
This decad, words of advice by a pure heart, in the thousand songs of Kurugur Satakopan addressing the willful creator of the Universe will secure the Lord’s feet when the end comes.
