(3119)

(3119)

சூதென்றுகளவும் சூதும் செய்யாதே *
வேதமுன்விரித்தான் விரும்பிய கோயில் *
மாதுறுமயில் சேர் மாலிருஞ்சோலை *
போதவிழ்மலையே புகுவது பொருளே.

பதவுரை

 

சூது என்று 

உபாயமென்றெண்ணி

களவும் 

களவையும்

சூதும் 

சூதையும்

செய்யாதே 

செய்ய நினைக்காமல், –

முன்

 

முற்காலத்தில்

வேதம்

வேதங்களை

விரித்தான் 

(கீதை முதலியவற்றால்) 

விவரித்தருளின பெருமான்

விரும்பியகோவில்

விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடமான கோயிலாய்

மாது உறு மயில் சேர்

பேடையோடு கூடின ஆண் மயில்கள் சேர்ந்து வாழப்பெற்ற

மாலிருஞ்சோலை

மாலிருஞ்சோலை யென்கிற

போது அவிழ் மலை

புஷ்பங்கள் விகஸிக்கிற திருமலையில்

புகுவதே 

சென்று சேர்வதே

பொருள்

புருஷார்த்தம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

* * * முதலடிக்கு இரண்டு வகையான அர்த்த நிர்வாஹ முண்டு;- அற நூற் களில் சூதும் களவும் கூடாதென்று நிஷேதித்திருக்கையாலே அதனையடியொற்றி ஆழ்வாரும் அருளிச் செய்கிறார்; சூது களவு முதலிய தீய செயல்களாலே வீண் போது போக்காமல் திருமலையிலே சென்று புகுங்கோள் – என்பதாக ஒரு நிர்வாஹம். 

இனி களவாவது – “****- கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா” என்றும் “பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று கொண்டேனைக் கள்வ னென்று கூறாதே” என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமானுக்கு சேஷப்பட்டதான ஆத்ம வஸ்துவைத் தன்னதென்றிருக்கை. அதாவது – விவேகியாயிருப்பா னொருவன் ஈச்வர சேஷமான ஆத்மாவுண்டு, ஸர்வ சேஷியான ஈச்வரனுண்டு, புண்யபாப வகுப்பு உண்டு, பரலோக முண்டு’ என்றிப்படி நூற் பொருள்களை யெடுத்துரைத்தால் மாயச் சொற்களாலே ‘இவை யொன்று மில்லை’ என்று அவன் தானே கையெழுத்திடும்படி அவனை மயக்கி மிக்க நாஸ்திகனாக்கித் தன் வகுப்பில் இணக்கிக் கொள்ளுகை. ஆகிய இவ்விரண்டையும் செய்து கெட்டுப் போகாமல் ……….. என்பது மற்றொரு நிர்வாஹம். இதை நிர்வாஹ பேதமாகக் கொள்ளாமல் ஸ்வாபதேசப் பொருளாகவுங் கொள்ளலாம்.

வேதம் முன் விரித்தான் = வேதம் உரைத்தவனும் தானே, வேதம் விரித்தவனும் தானே. கண்ணுக்குத் தோற்றாதபடி நின்று வேதங்களை யுரைத்தான்; தேர்த்தட்டிலே அழகிய திருக்கோலத்தோடிருந்து கீதோபநிஷந்முகத்தாலே வேதங்களை விரித்தானென்க. கீதை யென்பது வேதங்களுக்கு வியாக்கியானம் போன்றது என்றவாறு. 

விரும்பிய கோயில் – உபதேசத்தால் திருந்தாதவர்களை வடிவழகைக் காட்டி ஆட்படுத்திக் கொள்ளுதற்கு எழுந்தருளி யிருக்குமிட மென்க. 

மாதுறுமயில் = மாது என்பது ‘மாதர்’ என்பதன் சிதைவாய், பேடை யைச் சொல்லும். மாது என்று ஸுகுமாரத் தன்மைக்கும் பெயர். அழகிய மயில்கள் என்றுமாம்.

English Translation

Seek the good, give up knavery and falsehood. The Lord who revealed the Vedas lives in Maliumsolai amid fresh blossoms and peacock pairs. Entering into his worship is the only good.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top