(3121)
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.
பதவுரை
|
திருமாலே |
– |
ச்ரியாபதியான எம்பெருமானே! |
|
உனது முகம் சோதி |
– |
உன்னுடைய திருமுகமண்டலத்தின் ஜ்யோதிஸ்ஸானது (உயர்முகமாகவளர்ந்து) |
|
முடிசோதி ஆய் |
– |
திருவபிஷேக ஜ்யோதிஸ்ஸாய் |
|
மலர்ந்ததுவோ |
– |
விகஸிதமாயிற்றோ? |
|
அடிசோதி |
– |
திருவடிகளின் காந்தியானது |
|
நீ நின்ற தாமரை ஆய் அலர்ந்ததுவோ |
– |
நீ யெழுந்தருளியிருக்கும் ஆஸன பத்மமாய்ப் பரவியதோ? |
|
நின் பைம்பொன் கடி சோதி |
– |
உனது விசாலமாயும் ஸ்ப்ருஹணீயமாயு மிருக்கின்ற திருவரையின் காந்தியானது |
|
படி சோதி ஆடையொடும் பல் கலன் ஆய் |
– |
இயற்கையான சோதியையுடைய பீதாம்பரமென்ன, பலவகைப்பட்ட ஆபரணங்களென்ன ஆகிய இவையாய் |
|
கலந்ததுவோ |
– |
வியாபதித்ததோ? |
|
கட்டுரை |
– |
தெரியவருளிச் செய்ய வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருமாலிருஞ்சோலையழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய பூஷணங்களுக்குமுண்டான மிக்க பொருத்தத்தைக் கண்டு உள்குழைந்து பேசுகிறார். இவ்வடிவழகைக் கண்டவளவிலே தமக்கொரு ஸந்தேஹம் விளைந்தபடியை விண்ணப்பஞ் செய்து-, பிரானே! இந்த ஸந்தேஹந்தீர மறுமாற்றமருளிச் செய்யவேணுமென்கிறார்.
உனது முகச்சோதி முடிச்சோதியாய் மலர்ந்ததுவோ? = திருமுக மண்டலத்தின் காந்திஸமூஹம் மேல்முகமாகக் கிளர்ந்து கிரீட ஜ்யோதிஸ்ஸாக ஆயிற்றோ? என்பது கேள்வி. உண்மையில் திருமுகமண்டலத்திக்குமேல் திருவபிஷேகமென்று தனியே இல்லை; திருமுகச் சோதிதான் மேலே படர்ந்து திருமுடியாகத் தோற்றுகிறது என் கை இங்கு ஆழ்வாருக்கு விவக்ஷிதம். பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்வத்தில் இப்பாசுரத்தின் முதலடியை ஒரு சிறுச்லோகமாக அருளிச் செய்தார்; அதாவது * கிரீடசூடரத்தராஜி: ஆதிராஜ்ய ஜல்பிகா, முகேந்தகாந்திருந்முகம் தரங்கி தேவ ரங்கிண: * என்பதாம்.
திருமுடியில் நின்றும் திருவடியிலே கண்வைத்தார்; அடிச்சேரி தீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? என்கிறார். ஆஸனபத்மமென்று கீழே தனியே ஒன்று இல்லை; கீழ்நோக்கிக் கிளர்ந்த திருவடியின் தேஜ: புஞ்சமே ஆஸநபத்மமாகத் தென்படுகின்றது என்கை இங்கு விஷக்ஷிதம்.
அர்ச்சவதாரங்களில் எம்பெருமானுடைய திருவடிகளுக்கு ஆதாரமாக ஒரு பத்மபீடம் அமைந்துள்ளது; அதுவே ஆஸந பத்மமெனப்படுகிறது. மேல் நாலாம் பத்தில் “தண்டாமரை சுமக்கும் பாதப்பெருமானை” என்றருளிச் செய்திருப்பதும் இங்கு அநுஸந்தேயம். ஆழ்வான் ஸுந்தரபாஹுஸ்தவத்திலருளிச் செய்த * ஸௌந்தர்ய மார்த்த ஸுகந்த ரஸப்ர வாஹை: ஏதேஹி ஸுந்தரபுஜஸ்ய பதாரவிந்தே: அம்போ ஜடம்ப பரிரம்பணமப்யஜைஷ்டாம் தத்வை பராஜிதமிமே சிரஸா பீபர்த்தி * என்ற ச்லோகமும் நோக்கத்தக்கது.
(படிச்சோதியாடையொடும் இத்யாதி) இங்கு இரண்டுவகையான நிர்வாஹமுண்டு; படிச்சோதி (யானது) பல்கலனாய்க் கலந்ததுவோ? நின்பையம் பொற்கடிச்சோதி ஆடையாய்க் கலந்ததுவோ? என்று இரண்டு கேள்வியாக வைத்து ஒரு நிர்வாஹம். அன்றியே, நின் பைம்பொறிகடிச்சோதி (யானது) படிச்சோதியாடையாயும் பல்கலனாயும் கலந்ததுவோ* என்று ஒரு கேள்வியாகவே வைத்து மற்றொரு நிர்வாஹம். முதல் நிர்வாஹத்தில், படிச்சோதி யென்பது எழுவாயாக நிற்கும்; இரண்டாவது நிர்வாஹத்தில் அது ஆடைக்கு விசேஷணமாக நிற்கும். தேவரீர் தனியே திருவாபரணங்களும் பீதாம்பரமும் சாத்திக்கொண்டிருக்கவில்லை; திருமேனி யொளியும் கடிப்பிர தேசத்தின் ஒளியும் பரவித் திருவாபரணங்களாயும் திவ்ய பீதாம்பரமாயும் புலப்படகின்றவத்தனை – என்ற உத்ப்ரேக்ஷை பின்னடிகட்குத் தேர்ந்த பொருள். பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்தில் * கடீகாந்தி ஸம்வாசி நீவீலஸத்ரத்நகாஞ்சீ கலாபாது லேபம்* என்றருளிச் செய்தது இப்பின்னடிகளைத் தழுவியே யென்க.
இப்பாட்டில் ஆழ்வார் தமது திருவுள்ளத்தில் தோன்றின ஸம்சயங்களை விண்ணப்பம் செய்தார்; ஸம்சயங்கள் இரண்டு கோடிகளை யுடையனவாயிருக்குமாதலால் ஒவ்வொரு வாக்யத்தையும் திருப்பியும் யோஜித்துக்கொள்ளவேணும். உனது முடிச்சோதி மகச்சோதியாய் மலர்ந்ததுவோ என்பதாகவும் ஆக்கவேணும். இங்ஙனமே மற்ற அடிகளிலுங் கொள்க. இத்தால் பலித்தது என்னென்னில்; ஒவ்வொரழகில் ஈடுபடுங்காலத்தில் அஃதொன்றே சிறந்ததாய்த் தோன்றிநிற்குந்தன்மை தெரிவித்தவாறு. கடி – வடசொல். இடுப்பு.
English Translation
Did the radiance of your face blossom into a radiant crown over you Did the radiance of your lotus feet blossom into a lotus pedestal below you? Did the radiance of your golden frame transform itself into the robes and ornaments all over you? O Tell me, Lord!
