(3002)
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு,
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே.
பதவுரை
|
நெஞ்சே |
– |
மனமே! |
|
கருமங்கள் வாய்க்கின்று |
– |
காரியங்கள் பலிக்குமிடத்தில் |
|
ஓர் எண் தானும் இன்றியே |
– |
(நம்முடைய) நினைவு ஒன்றுமேயில்லாமல் |
|
வந்து இயலும் ஆறு |
– |
பலித்து வருகிறபடியை |
|
கண்டாயே |
– |
பார்த்தாயோ? (எங்ஙனே யெனில்) |
|
உலகும் ஏழும் |
– |
ஏழு லோகங்களையும் |
|
உண்டானை |
– |
(பிரளயத்தில்) விழுங்கினவனும் |
|
ஓர் மூ அடி கொண்டானை |
– |
(மற்றொருகால் அவ்வுலகங்களை) மூன்றடிகளாலே அளந்து கொண்டவனுமான பெருமானை |
|
நீயும் : கண்டு கொண்டனை |
– |
நீயும் காணப்பெற்றாயன்றோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருவாய்மொழியை நிர்ஹேதுக விஷயீகாரபரமாக பட்டர் நிர்வஹித்ததற்கு இப் பாசரமே நிதானமாயிருக்கும். கீழ் இரண்டாம் பாட்டில் “எண்ணிலும் வரும்” என்று ப்ரஸ்துதமான எண் தானுமில்லாமல் அவனே மேல் விழுந்து விஷயீகரித்தபடியை நெஞ்சுக்கு முதலிக்கிறார்.
நெஞ்சமே! ஜ்ஞானப்ரஸரத்வாரமான வுனக்கு நான் சொல்லவேண்டுமோ? நான் சொன்னபடியே பலன் கைபுகுந்தமை கண்டாயே; காரியம் பலிக்கத் தொடங்கிவிட்டால் அசிந்திதமாகவே பலித்துத் தீருமென்று உலகஞ் சொல்லுகிறபடியே பலித்துவிட்டதுகாண் என்றார்: அப்படி என்ன பலித்துவிட்டது? என்ன; பின்னடிகளாலே அதனை நிரூபிக்கிறார். பிரளயங்கொண்ட ஜகத்துக்கு ‘அவன் நம்மை வயிற்றிலேவைத்து நோக்கியருள்வான் என்னும் நினைவு உண்டோ? அவன் ஒருமணிக்குறளாகி நிமிர்ந்து உலகங்களை அளக்கிறபோது நம் தலையிலே திருவடிகளை வைக்கப்புகாநின்றான்’ என்னும் நினைவுண்டோ? அப்படி நீயும் நனையாதிருக்க அவனைக் காணப்பெற்றாயே! வேறு என்ன வுதாஹரணம் வேண்டும்?
