(3001)

(3001)

நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்

என்செய்யோம், இனியென்னகுறைவினம்?

மைந்தனை மலராள்மணவாளனை,

துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய்.

 

பதவுரை

நெஞ்சமே

மனமே!

நல்லை நல்லை

நீ மிகவும் நன்மையையுடையை;

உன்னைப் பெற்றால்

உன்னை உதவியாகப் பெற்றால்

என் செய்யோம்

எதைத்தான் செய்து முடிக்க மாட்டோம்; (எதையுஞ்செய்து முடிக்கலாம்)

இனி என்ன குறைவினம்

இனி என்ன குறையையுடையோம்?

மைந்தனை

நித்யயௌவன முடையவனும்

மலராள் மணவாளனை

திருமகள் நாதனுமான எம்பெருமானை

துஞ்சும் போதும்

நான் அகன்று மறந்த போதும்

விடாது தொடர்

நீ விடாமல் தொடர்ந்து நில்;

(கண்டாய்

முன்னிலையசை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே!” என்று கீழே தாஞ்சென்னவாறே மேல்விழுந்து தொழுத நெஞ்சைக் கொண்டாடி, என்றைக்காவது நான் நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பிரியப் பார்த்தவிடத்திலும் எம்பிரானை விடாமலே தொடர வேணுமென்று அந்த நெஞ்சையிரக்கிறார். சொன்ன காரியத்தையுடனே செய்த நன் மக்களைத்தாய் தந்தையர் மடியிலே வைத்துக் கொண்டாடுதல்போல இவரும் தமக்குப் பரமவிதேயமான நெஞ்சை நல்லைநல்லையென்று கொண்டாடுகிறார். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்:- “நல்லைநல்லையென்று கொண்டாடுகிறார். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்:- “நல்லை நல்லையென்கிற வீப்ஸைக்குக் கருத்து என்னென்னில்: இவர் தாம் அவன் பக்கல் தூதுவிடுமாபோலே தனக்கு இவர் தூதுவிடவேண்டும்படி இவர் தம்மைவிட்டு அவன் பக்கலிலே நிற்கவல்ல நெஞ்சாகையாலே; “என்னெஞ்சினாரைக் கண்டாலென்னைச் சொல்லியவரிடை நீரின்னஞ் சொல்லீரோ” என்னும்படி முந்துற்ற நெஞ்சாகையாலே நல்லைநல்லை யென்கிற மீமிசை.”

எம்பெருமான் பக்கலில் நாரை கொக்கு கிளி பூவை முதலியவற்றைத் தூதுவிடுதல் போலவே, அவனிடத்துச் சென்ற தமது நெஞ்சைக் குறித்தும் “அன்னஞ் செல்வீரும் வண்டானஞ்செல்வீருந் தொழுதிரந்தேன்”(திருவிருத்தம் 30)  என்று சில பறவைகளை யாசித்துத் தூதுவிட வேண்டும்படி யிருத்தலால் இத்தகைய வைலக்ஷண்யத் தோற்றுமாறு நல்லைதல்லை என்றிரட்டித்துக் கூறப்பட்ட தென்றவாறு.

உன்னைப் பெற்றால் என் செய்வோம் = நீ என்னோடு ஒத்திருந்த பின்பு எனக்குச் செய்யமுடியாததுண்டோ? பேறு தருகைக்கு எம்பெருமானுண்டு; விலக்காமைக்கு நீயுண்டு; இனிசிசெய்ய முடியாததுண்டோ? என்று சொன்னவாறே, சிறிது ஆராய்ந்து பார்த்தார்; “ஊன்னைப் பெற்றாலென் செய்வோம்” என்று சொல்லுவதற்கே ப்ரஸக்தியில்லையே; ஸாத்யமான அம்சம் ஏதாவது இருந்தாலன்றோ அங்ஙனஞ் சொல்லவேண்டும்; நெஞ்சு அநுகூலித்திருப்பதுதானே பற்றசாக எம்பெருமான் எல்லாஞ்செய்து முடிப்பானாதலால் இனியொரு குறையுமில்லையென்றுணர்ந்து அதனை வெளியிடுகிறார் இனியென்ன குறைவினம் என்று.

 

குறைவினம் = குறையுடையோம். இனிமேல் நெஞ்சுக்கு என்ன காரியமென்ன, ஒன்று விதிக்கிறார் பின்னகளில்; நான் அவனைக் கிட்டினவாறே “வளவேழுலகில் முதலாய” என்கிற திருவாய்மொழியிற்படியே நைச்சியாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதொன்றுண்டு; அப்போது அவனை நீ விடாதேகிடாய் என்கிறார்.

துஞ்சும்போதும் = துஞ்சுதலாவது உறங்குதல்; இச் சொல் விநாசபரியாயமாகவே பெரும்பாலும் பிரயோகிக்கப்படும்; ஆழ்வார் தமக்கு விநாசயமாக நினைப்பது பகவத் விச்லேஷத்தையே யாதலாலும், நிர்ஹேதுக விஷயீகார ஸக்தனாகிய பகவான் இனித்தான் அகலமாட்டானாகையாலும், நைச்சியாநுஸந்தானம் பண்ணித்தாமே அகலத் தேடுவராதலாலும் அந்த ஸமயத்திலும் நெஞ்சு அவனை விடாது தொடர வேணுமென்பதே இங்கு விவக்ஷிதமென்க.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top