(3003)

(3003)

நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,

நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,

தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,

வாயுமீசன் மணிவண்ணனெந்தையே.

 

பதவுரை

நெஞ்சமே

மனமே!

நீயும் நானும்

நீயும் நானுமாக

இ சேர் நிற்கின்

இந்த நிலையிலே நின்றால்

மேல்

இனிமேல்;

இ உலகினில்

இவ்வுலகத்தில்

தாயும் தந்தையும் ஆய்

மாதாவும் பிதாவுமாகி

வாயும்

அவதரித்துள்ளவனும்

மணிவண்ணன்

நீலமணிவண்ணனம்

எந்தை

எமக்கு ஸ்வாமியுமாகிய

ஈசன்

ஸர்வேச்வரன்

மாற்று ஓர் நோயும் சார் கொடான்

வேறொரு துன்பமும் அணுகவொட்டான்;

சொன்னேன்

இது உண்மையாகச் சொன்னேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “விடாது தொடர் கண்டாய்” என்ற ஆழ்வாரை நோக்கி நெஞ்சானது, நான் விடாது தொடர்கிறேன். அவன் விட்டால் செய்வதென்? என்ன; நைச்சியாநுஸந்தானம்பண்ணி நாம் அகலாதொழியில் நம்மை யொருநாளும் அவன் விடானென்கிறார்.

தாயைப்போல் ப்ரியமே நடத்துபவனாயும் தந்தையைப்போல் ஹிதமே நடத்துபவனாயும் இந்த லோகத்தி லவதரித்து வந்து தன்னுடைய நிருபாதிக ஸ்வாமித்வமே யடியாகத் தன்னுடைய நீலரத்னம் போலே யிருக்கின்ற வடிவை எனக்கு உபகரித்து அவ்வழியாலே என்னை யடிமைகொண்ட ஸ்வாமியானவன், நெஞ்சே! எனக்குக் காரணமாயிருக்கிற நீயும் உன்னைக் காரணமாகவுடைய நானும் இப்போதுள்ள நிலையிலேயே நிலை நின்றிருப்போமாயின் மேலுள்ள காலமெல்லாம் ஸ்வாநுபவமொழிய மற்றும் நோயா யிருப்பதொன்றையும் சேரக்கொடான்; இப்பரமார்த்தத்தை யுனக்குச் சொன்னேன் என்கிறார்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top