(3000)
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,
எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே.
பதவுரை
|
மட நெஞ்சமே |
– |
விதேயமான மனமே! |
|
எம் பிரானே |
– |
எமக்கு உபகாரகனும் |
|
எந்தை தந்தை தந்தைக்கும் தம் பிரானை |
– |
(நம்மளவில் நில்லாமல் நம் குலத்திற்கெல்லாம் நாதனாயிருப்பவனும் |
|
தண் தாமரைக் கண்ணனை |
– |
குளிரக்கடாக்ஷிக்கின்ற தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும் |
|
கொம்பு |
– |
வஞ்சிக்கொடியினும் |
|
அராவு |
– |
ஸர்ப்பத்தினும் |
|
நுண் |
– |
நுட்பமான |
|
நேர் |
– |
நேர்திபொருந்திய |
|
இடை |
– |
இடையை யுடையவளான பிராட்டியை |
|
மார்பனை |
– |
மார்பிலே உடையனுமான |
|
எம்பிரானை |
– |
எம்பெருமானை |
|
தொழாய் |
– |
வணங்குவாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-எம்பெருமானுக்கு அடியார் திறத்தில் அளவிறந்த நீர்மைக்குக் காரணம் பிராட்டி ஸம்பந்தமேயென்று அதனை யநுஸந்தித்து அந்தத் திருமாலைத் தொழாய் நெஞ்சே யென்று திருவுள்ளத்திற்கு உரைக்கிறார். எம்பெருமானுடைய விஷயீகாரம் தம்மொருத்தரோடே ப்ர்யவஸித்துவிடாமல் “கேசவன் தமர் கீழ்மேலெமரேழெழு பிறப்பும் மாசதிரிதுபெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா” (திருவாய்மொழி 2-7-1) என்னுமாபோலே ஸம்பந்தி ஸம்பந்திகளையும் ஏறிப்பாயுந் தன்மையை அநுஸந்தித்த ஆழ்வார் “எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை” என்று அழகாகப் பேச, அப்பாசுரத்தின் போக்யதையைக் கண்ட எம்பெருமான் ‘இப்படி ஏத்துகிறவன் ஆர்?’ என்று குளிரக் கடாக்ஷிக்கவே “தண்டாமரைக் கண்ணனை” என்று அக்கடாக்ஷத்திற்கு ஒரு பாசுரமிட்டார்.
குற்றமே வடிவான நம்மீது எம்பெருமான் இவ்வளவு விஷே கடாக்ஷஞ் செலுத்தக் காரணமில்லையே! என்ன காரணமென்று ஆராய்ந்து பார்த்து, கடாக்ஷிக்கச் செய்யவில்லை பெரியபிராட்டியார் அருகே யிருக்கின்ற ளென்பதுணர்ந்து அதனைப் பேசுகிறார். “கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை” என்று. மாதர்களின் இடைக்கு வஞ்சிக் கொம்பையும் அரவையும் உவமை கூறுதல் கவி மரபு.
இவ்விடத்து ஈடு முப்பத்தாறாயிரப்படியிலும் இருபத்தினாலாயிரப்படியிலும் “அரவு என்கிற வித்தை அராவு என்று நீட்டிக் கிடக்கிறது; நச்சராவணை என்னக்கடவதிறே” என்கிற வாக்கியம் காணப்படுகிறது. பெரியாழ்வார் திருமொழியில் (1-3-5.) வழுவில் கொடையான் வயிச்சிரவணன்” என்ற விடத்திற்கு நாம் உரையிடுமிடத்து எழுதியுள்ள விஷயங்கள் இங்கு நோக்கத்தக்கன. “குறியதன்கீழ் ஆக் குறுகலுமதனோடு, உகரமேற்றலுமியல்புமாந் தூக்கின” என்ற நன்னீற் சூத்திரத்தின் பொருளை ஆராய்ந்தால் மேற்குறித்த வாக்கியம் ஆசாரியர்களருளிச்செய்ததாயிருக்கத் தகுதியில்லையென்றும், காலக்ஷேபபரரர்களால் ஓலை ஸ்ரீகோசங்களில் டிப்பணியாக எழுதிவைக்கப்பட்டுப் பிறகு வியாக்கியான பங்க்தியாகவே சேர்த்தச்சிடப்பட்டது போலுமென்றும் கருதத்தக்கதாகவுள்ளது என்று பெரியோர்கள் திருவுள்ளம் பற்றுகின்றனர். மேற்குறித்த சூத்திரமடங்கிய நன்னூல் கிரந்தம் ஆசாரியர்களின் காலத்தில் இல்லாதிருக்கலாமென்னும், அந்தச் சூத்திரத்தினால் உணர்த்தப்படும் பொருள் ஒரு சாரார் கொள்கையாயிருக்கலாமென்றும் அபிப்ராயங்கொண்டு விவாதாஸ்பத வாக்கியம் உள்ளதுதானென்பாருமுளர்.
கொம்பும் அராவும் என்று உம்மைத் தொகையாகக் கொள்ளுதலின்றியே கொம்பை அராவுகின்ற நுண்ணேரிடை என்றுரைத்தலுமொன்று. வஞ்சிக் கொம்பை வென்ற என்பது தாற்பரியம்.
English Translation
O Heart, wroship the cool lotus-eyed Lord! On his chest he bears the lotus-dame Lakshmi whose hips are slender like a snake or a twig. He is the Lord of my father, his father and the forefathers before him.
