(2956)

(2956)

ஈடு மெடுப்புமி லீசன்

மாடு விடாதென் மனனே

பாடுமென் நாவலன் பாடல்

ஆடுமெ னங்கம ணங்கே.

 

பதவுரை

என் மனன்

எனது மனமானது

ஈடும் எடுப்பும் இல்

குற்றம்பார்த்துத் தள்ளிவிடுதலும் குணம் பார்த்துக் கைக்கொள்ளுதலுமில்லாத

ஈசன்

ஸர்வேச்வரனுடைய

மாடு

ஸமீபத்தை

விடாது

விடுகிறதில்லை

என் நா

எனது நாவானது

அவன்

அந்த ஸர்வேச்வரன் விஷயமான

பாடல்

துதிகளை

பாடும்

பாடுகின்றது;

என் அங்கம்

எனது உடம்பு

அணங்கு ஆடும்

தைவாவேசங்கொண்டதுபோல் ஆடுகின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் விஷயத்தில் அடிமைசெய்கைக்கு அதிகாரி நியதியில்லையென்று காட்டப்பட்டது கீழ்ப்பாட்டில்; அஃது எதனாலென்ன; அடிமை செய்கையில் விருப்பமுடையவர்களை ஜாதி குணம் தொழில் முதலியவற்றால் நிஹீநரென்று கைவிடும் ஸவபாவம் எம்பெருமானுக்கில்லாமையாலே என்கிறது இப்பாட்டில்.

ஈடும் எடுப்பும் இல் ஈசன் = இவர்கள் நிஹீநஜாதியர்கள், இவர்கள் அறிவில்லாதவர்கள், இவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று சிலரை யுபேக்ஷித்தலும் இவர்கள் நற்குலத்தவர்கள், இவர்கள் நல்லறிவினர் இவர்கள் சிறந்த அநுஷ்டாத ஸம்பந்நர்கள் என்று சிலரை அங்கீகரித்தலுமாகிற ஈடு எடுப்புகளில்லாதவன் ஸர்வேச்வரன். தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்தயமதிதைவதம்” என்கிறபடியே தேவர்களோடு அசுரர்களோடு வாசியற எல்லார்க்கும் பொதுவாகவுள்ளவன் என்றபடி. இப்படியாகில் “அமரர்கட்கிடர்கெட அசுரர்கட்கு இடர்செய்” என்று அமரரை வாழ்விப்பதாகவும் அசுரரை மாய்ப்பதாகவும் சொல்லப்படுகிறதே, இதுவென்? என்னில்: தேவஜாதியிலே அநுக்ரஹமும் அஸுர ராக்ஷஸ ஜாதியிலே நிக்ரஹமும் இயற்கையாக எம்பெருமானுக்குக் கிடையாது. அஸுரஜாதியிலே ப்ரஹலாதன் போல்வாரும் ராக்ஷஸ ஜாதியிலே விபீஷணன் போல்வாரும் வாழ்ந்து போகவில்லையா? ஆதலால், எல்லாருடைய உபயோகித்திற்குமாக அமைத்த தடாகத்திலே சிலர் தாமாக விழுந்து மடிகிறப்போலே அஸுர ராக்ஷஸாதிகளும் எம்பெருமானாகிற தடாகத்திலே வாழகில்லாது மடிந்து போவது எம் பெருமானுடைய குற்றமாகாதென்க. இப்படிப்பட்ட ஈசன்மாடு என் மனன் விடாது ‘மாடு பொன் பக்கஞ் செல்வம்” என்ற நிகண்டின்படி, ஈசன்மாடு என்றது ஈசனிடத்திலே என்றபடி. என்மனமானது எப்போதும் அவனைவிட்டு நீங்காது.

இப்போது இது எதற்காகச் சொல்லுகிறாரென்றால், எம்பெருமான் ஆராதனைக்கு எளியன்’ என்பதை ஸம்ஸாரிகளுக்கு விரிவாக உபதேசிக்க ஆரம்பித்த தமக்கு மனமொழி மெய்கள் ஸ்வாதீநமாயிருக்கவேண்டுமே; அப்படியில்லையாகில் உபதேசிக்க முடியாதே அப்படி உபதேசிக்க முடியாதபடி நெஞ்சு ஈசன்மாடு குடிகொண்டது; நாவும் அவனுடைய பாடலிலேயே ஆழ்ந்தது; சரீரமும் அவ் விஷயத்திலேயே ஆவேசங்கொண்டது. இனி என்ன வுபகரணங்கொண்டு உங்களுக்கு உபதேசிப்பேனென்றவாறு.

“சூரமணங்குத் தெய்வப்பெண்ணே” என்பது நிகண்டு ‘அணங்காடும்’ என்றது அணங்குபோல் ஆடும் என்றவாறு.

 

English Translation

The Lord is beyond likes and dislikes. My heart never parts from him, my tongue forever sings of him, my body dances like a-ghoul!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top