(2955)
மதுவார் தண்ணந் துழாயான்
முதுவே தமுதல் வனுக்கு
எதுவே தென்பணி என்னா
ததுவே யாட்செய்யு மீடே.
பதவுரை
|
அம் |
– |
அழகிய |
|
மது வார் |
– |
தேன் ஒழுகுகின்ற |
|
தண் |
– |
குளிர்ந்த |
|
துழாயான் |
– |
திருத்துழாய்மாலையை அணிந்துள்ளவனும் |
|
முதுவேதம் முதல்வனுக்கு |
– |
பழமையான வேதங்களால் முழுமுதற்கடவுளாகச் சொல்லப்பட்டவனுமான பெருமானுக்கு |
|
எது பணி |
– |
(தகுதியாகச் செய்யக் கூடிய) கைங்கரியம் ஏது? |
|
என் பணி ஏது |
– |
(அதிலும்) நான் செய்யக் கூடிய கைங்கரியம் ஏது? |
|
என்னாததுவே |
– |
என்று சிந்தியாமலிருப்பதே |
|
ஆன் செய்யும் டுஈ |
– |
அடிமை செய்தற்கொப்பாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுக்கு இடுவதற்கு இன்னபொருள்தானென்கிற நியதியில்லையென்றார் கீழ்ப்பாட்டில்; பொருள் நியதியில்லாததுபோலவே அதிகாரி நியதியுமில்லையென்பது இப்பாசுரம்.
அந்தாதித் தொடையான இப்பிரபந்தத்தில், பூவே என்று கீழ்ப்பாட்டில் முடித்துவிட்டு அங்குள்ள சொல்லையோ எழுத்தையோ இங்குக் கொள்ளாமல் மதுவார் என்று தொடங்கியிருப்பது அந்தாதித்தொடைக்கு எங்ஙனேபொருந்து மென்னில்; இங்குச் சொற்றொடையந்தாதியாகக் கொள்ளாமல் பொருட்டொடையந்தாதியாகக் கொள்ளலாம்; அதாவது – கீழ்ப்பாட்டில் முடிந்த பூவுக்கும் இப்பாட்டில் தொடங்குகிற மதுவுக்கும் சேர்த்தியுண்டாதலால் (அதாவது – பூவும் தேனும் விட்டுப் பிரியாதிருத்தலால் இப்படிப்பட்ட பொருட் சேர்த்தியையிட்டு அந்தாதித் தொடை பொருத்தலாம் என்பது ஒருவகை நிர்வாஹம். “மதுவார்” என்று பாடமின்றியே “வதுவார்” என்று பாடமாகக் கொள்வது முண்டாதலால் கீழ்ப்பாட்டில் வகரவீற்றதாக முடித்ததற்குச் சேர இப்பாட்டு வகரமுதலதாகத் தொடங்கப்படுதல் மிகப் பொருந்தும் என்பது மற்றொரு நிர்வாஹம்.
“மதுவார் தண்ணந்துழாயான்” என்ற பாடத்தில் தேன் வெள்ளமிடுகின்ற தண்ணந்துழாய்மாலை யணிந்தவன் என்று பொருள்; வதுவார் என்ற பாடத்தில் பரிமளம் மிகுந்த தண்ணந்துழாய் மாலையையுடையவன் என்றபடி. “வதுவை என்று மணம்; இங்கே வது என்றது கடைக்குறை” என்பது ஆன்றோர்களின் வியாக்கியானம். மது என்பதுபோலவே வது என்பதும் தேனுக்குப் பேராக வுண்டென்பர் நவீனர்.
“ஒரு வாடல் மாலையைக் கொண்டுவந்து திருக்குழலிலே வளையமாக வைத்தால், திருக்குழலோட்டை ஸ்பர்சத்தாலே செவ்விபெற்று மது நிரம்பிச் சினையாறுபட்டு வார்ந்து வெள்ளமிடாநிற்கும்” என்ற நம்பிள்ளையீட்டு ஸ்ரீஸூக்திகளின் இனிமைநோக்கத்தக்கது.
முதுவேதமுதல்வனுக்கு = எம்பெருமானை அநுமாநம் முதலிய ப்ரமாணங்களாலே ஸாதிக்கிற இதர தர்சநஸ்தர்களைப் போலல்லாமல், ப்ரஹமஸூத்ரகாரரான வியாஸர் ‘சாஸ்த்ரயோநித்வாத்” என்று சாஸ்த்ரங்களைக் கொண்டே எம்பெருமான் ஸாதிக்கத்தகுந்தவன் என்று நிர்கர்ஷித்ததை அடியொற்றி ஆழ்வார் இங்ஙனம் அருளிச்செய்தபடி. “உளன்சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே” என்றார் முதல் திருவாய்மொழியிலும், புராதனங்களான வேதாந்தங்களாலே முதல்வனென்ற முதலிக்கப்பட்ட ஸர்வேச்வரனுக்கு என்றபடி.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எது பணி? என் பணி எது? என்னாததுவே ஆட்செய்யுமீடு = நித்யஸூரிகளன்றோ அவனுக்குத் தகுதியாக அடிமை செய்யவல்லவர்களே அற்பனான நான் செய்யக்கூடிய பணிவிடை உண்டோ என்று நெகிழாததுவே ஆட்செய்கைக்கு அதிகாரமாவது என்றபடி இத்தால், அடிமைசெய்வது ஸர்வாதிகாரமென்றதாயிற்று.
என்னாத + அதுவே, என்னாததுவே; தொகுத்தல் விகாரம். இயலில் என்னாது என்று நிறுத்துவது தகுதியற்றதென்க.
English Translation
The cool fragrant Tulasi-wearing Lord is the Lord spoken of in the Vedas. Whole heartedness in devotion alone is the qualification to serve him.
