(2936)
நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,
நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.
மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.
பதவுரை
|
மல்கு |
– |
நிறைந்த |
|
நீர் |
– |
குளிர்ச்சியாகிய ஸ்வபாவத்தையுடைய |
|
புனல் |
– |
நீர்வாய்ந்த |
|
படப்பை |
– |
பூந்தோட்டங்களிலே |
|
இரைதேர் |
– |
இரை தேடுகின்ற |
|
வண் சிறு குருகே |
– |
அழகிய சிறிய குருகே!. |
|
தான் நல்கி |
– |
தானே அநுக்ரஹித்து |
|
காத்து |
– |
அநிஷ்டங்களையெல்லாம் போக்கி |
|
பொழில் எழும் |
– |
ஏழுலகங்களையும் |
|
அளிக்கும் |
– |
ரக்ஷித்துக்கொண்டிருக்கின்றானெம்பெருமான்; |
|
வினையேற்கே |
– |
(அப்படிப்பட்ட அவன்) |
|
யோ நல்கத்தான் ஆகாது |
– |
பாபியான எனக்குமாத்திரமேயோ தான் கிருபை பண்ணலாகாது; |
|
நாரணனை கடைக்கால் |
– |
(அந்த) நாராயணனை கண்டபொழுதில், |
|
மல்கும் நீர் கண்ணேற்கு |
– |
நீர்நிறைந்த கண்களையுடைய (அழுகண்ணியான) எனக்கு |
|
ஓர்வாசகம் கொண்டு |
– |
(அப்பெருமாளிடத்தில் நின்று) ஒரு வார்த்தையைக் கொணர்ந்து |
|
அருளாய் |
– |
கிருபைபண்ணவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் எக்கேடாவது கெட்டுப்போகிறேன்; நாராயணனென்றும் ஸகல்லோக ஸம்ரக்ஷகனென்றும் விருதுசுமக்கின்ற அவர்க்கு ஒரு கெடுதல் இல்லாமலிருக்க வேண்டுமே; என்னொருத்தியை ரக்ஷியாமையினாலே, அவர் படைத்த பெயரெல்லாம் மழுங்கிப் போகுமன்றோ; அங்ஙனம் போகாமே நோக்கிக்கொள்ளும்படி சொல்லவேணுமென்று ஒரு குருகைநோக்கி இரக்கின்றாள்.
ஒருவடைய அபேக்ஷையையும் எதிர்பாராமல் உலகங்களுக்கெல்லாம் அபீஷ்டங்களை அளிக்கின்றாரே; அப்படிப்பட்டவர் பாவியான எனக்குத்தானே உதவலாகாது. அவர் நாராயணரன்றோ. நாரபதத்தின் அர்த்தத்தில் நான் சேர்ந்தவளல்லேனோ? என்னைவிட்டால் அவர்க்கு நாராயணத்வம் எங்ஙனே நிரம்பும்? என்ற கருத்து உள்ளுறையும்.
பொழிலேழும் = ஏழுதீவுகளையுடைத்தான பூமியென்றபடியாய், இவ்விபூதியைச் சொன்னது நித்யவிபூதிக்கும் உபலக்ஷணமாய் ஆக உபயவிபூதியையும் தன்பேறாக நிர்வஹித்துக்கொண்டு போருகிறவர் என்றதாயிற்று.
வினையேற்க நல்கத்தானாகாதோ = கடலில் ஏற்றமிட்டுத் தண்ணீர் ஆய்விட்டது என்னும்படி நேர்ந்தால் மஹாபாபந்தவிர வேறொன்றும் காரணமாகச் சொல்லாவதில்லை; அதுபோலே, ஸர்வக்ஷகனுக்கு வாழ்க்கைப்பட்ட நான் பிரிவாற்றாமையுற்றுக் கிடக்கிறேனென்றால் வல்வினையே யன்றோ இதற்குக் காரணம் என்கிறாள் போலும். இங்கே நம்பிள்ளையீடு காண்மின்:- “இல்லாதவன்று உண்டாக்கினாய்; உண்டாக்கினதுக்கு பலம் கர்மத்தையேறிட்டுக் கை விடுகையோ? ஸர்வஜநக்ஷணம் பண்ணுகிறவர் ஸ்வஜநரக்ஷணம் பண்ணலாகாதோ? நாட்டுக்கிட்ட நினைப்பு அந்த:புரத்துக்கு அரிதாகவேணுமோ? கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாபத்தைப்பண்ணுவேனோ?’
நாரணனைக் கண்டக்கால் = நாராயணன் என்ற சொல் நாராணனென்று சிதைந்து கிடக்கிறது; பொருள் ஒன்றே. நாரபதப்பொருளான ஸகல சேதநங்களுக்கும் தான் இருப்பிடமாய் அவற்றையும் தான் இருப்பிடாகவுடையனாயிருக்கும் பெருமானன்றோ இவர்; இவற்றில் ஒன்று குறைந்தாலும் தமக்கு இழலாம்படியிருப்பரன்றோ அவர். கள்ளிச்செடிக்கு மஹாவ்ருக்ஷமென்று பேர் இருப்பதுபோலே வெறும் ரூடியாகவோ அவர்க்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டது? திருநாமத்திற்கு அர்த்தபுஷ்டி இல்லையோவென்று கேளுங்கோள் என்பது உட்கருத்து.
மல்குநீர்ப்புனல் படப்பை இரைதேர்வண் சிறுகுருகே! = நீர் நிறைந்திருக்கும் படியான கொடித்தோட்டங்களிலே இரைதேடுகின்ற குருகே! என்றதனால், தேடுகின்ற இரை தனக்காகவன்றியே தன் குட்டிக்காக என்பது விளங்கும். தனக்காகவாகில் இரைதேடிவேவேண்டா; பெருப்பெருத்தகயல்கள் அங்குத் ததும்பிக் கிடக்குமாகையாலே கொள்ளை கொள்ளையாகக் கிடக்கும்போது ஏதுக்குத்தேட வேண்டும்! குட்டிகளுக்காகத் தேடவேண்டுமோவென்னில்; பெருத்த கயல்கள் குட்டிகளின் வாய்க்கு அடங்கமாட்டாவாகையாலே சிறிய பார்த்துத் தேட வேண்டுமே.
பெரிய திருமொழியில் (5-1-2) “பள்ளச்செறுவில் கயலுகளப் பழனக் கழனியதனுட்போய்ப், புள்ளுப்பிள்ளைக்கிரைதேடும் புள்ளம் பூதங்குடி தானே” என்றொரு பாசுரமுள்ளது முற்காலத்தில், ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப்பாட்டில் ஒரு கேள்வி கேட்டான்;- ‘பள்ளச்செறுவில் கயலுகள’ என்றபோதே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுக்கிடக்கின்றமை வெளிவந்துவிட்டது; அப்படியிருக்க, ஈற்றடியில் “புள்ளுப்பிள்ளைக்கு இரைதேடும்” என்று எங்ஙனே சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தாலன்றோ இரைதேட வேண்டும்; கொள்வார் தோட்டமாம்படி குறையற்றுக்கிடக்கும்போது தேடிப்பிடிப்பதாகச் சொல்வது பொருந்தாதன்றோ? என்று கேட்டான்; – இதற்கு பட்டர் அருளிச்செய்ததாவது. பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்திலை; பிள்ளைக்கு இரை தேடும் என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்கள் நிலமிதியாலே தூணும் துலாமும் போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குட்டிகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறுமீன்கள் தேடிப்பிடிக்க வேண்டுமத்தனையன்றோ? என்றாராம். அஃது இங்கு நினைக்கத்தக்கது. தம் பக்கல் அர்த்தம் கேட்கிற சிஷ்யர்களின் யோக்யத்தைக்குத் தக்கவாறு அவர்கள் கிரஹிக்கக் கூடிய அர்த்தங்களை சாஸ்திரங்களிலிருந்து கண்டுபிடித்து உசிதமாக உபதேசிக்கிற ஆசிரியர்கள் ஸ்வாபதேசத்தில் விவஷிதர்கள்.
மல்கு நீர்க்கண்ணேற்கு = எப்போதும் நீர் வெள்ளமிட்டுக்கொண்டேயிருக்கின்ற கண்களையுடைவளான எனக்கு என்றபடி. ஆழ்வார்க்குக் கண்ணீரே நிரூபகம் போலும்; கூடியிருக்குங்காலத்திலோ ஆனந்தக்கண்ணநீர்; பிரிந்திருக்குங்காலத்திலோ சோகக்கண்ணீர்.
ஒர்வாசகங்கொண்டு = உண்டு இல்லையென்பவற்றில் ஏதேனுமொரு ஸமாசாரத்தைக் கொண்டுவந்தாலும் போதுமென்கிறாள்போலும். எம்பெருமான் பக்கலிலிருந்து கிடைக்கும் ஸமாசாரம் எதுவானாலும் போய்கமாமிவர்கட்கு. அருளாய் என்று கௌரவந் தோற்றச் சொன்னதனால், பகவத் விஷயத்தை உபகரிப்பவர்கள் எந்தச் சாதியரானாலும் விஷய வைக்ஷண்யமே காரணமாக மரியாதை செய்யத் தக்கவர் என்பது பெறுவிக்கப்படுகின்றதென்ப. பட்டர் காலத்தில் ‘நம்பி ஏறுதிருவுடையான்’ என்று ஒரு சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர் இருந்தார்; அவர் பரமபதிக்க அந்தச் செய்தியைப் பட்டா ஸந்நிதியில் விண்ணப்பஞ்செய்ய வந்தவர் ‘ஏறு திருவுடையதாஸர் திருநாட்டுக்குச் சென்றார்’ என்றாராம். பட்டர் அதைக்கேட்டு அந்தோ! அவருடைய பெருமைக்குத் தக்கவாறு ‘திருநாட்டுக் கெழுந்தருளினார்’ என்ன வேண்டாவா? என்றருளிச் செய்தாராம்.
English Translation
O Strong heron searching for worms in the watered groves! If you see my Lord Narayana, would you give him my message, Pray? He made the seven garden-worlds and tended them with love. Only this hopeless maiden tearfully stands unworthy of his touch.
