(2935)
என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?
பதவுரை
|
என் நீர்மை கண்டு |
– |
எனது ஸ்வபாவத்தை (நேரில்) பார்த்திருந்தும் |
|
இரங்கி |
– |
(பிரிவு காலத்தில்) மனமிரங்கி |
|
இது தகாது என்னாத |
– |
இப்படி நாம் பிரிந்திருப்பது தகுதியன்று என்றிராத |
|
என் நீல முகில் வண்ணர்க்கு |
– |
நீளமேகத்தின் நிறம் போன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு |
|
என் சொல்லி |
– |
என்ன வார்த்தையைச் |
|
யான் சொல்லு கேனோ |
– |
சொல்லி நான் சொல்லப்போகிறேன்!; |
|
இனி |
– |
இனிமேல் |
|
அவர்கள் |
– |
(பராங்குச நாயகியாகிய) அவளிடத்தில் |
|
நல் நீர்மை |
– |
நல்லுயிர் |
|
தங்காது |
– |
தங்கியிருக்கமாட்டாது |
|
என்று ஒரு வாய்ச் சொல் |
– |
என்றொரு வாய்ச்சொல்லை |
|
நல் நீலம் மகன்றில் காள் |
– |
நல்ல நீலநிறமான மகன்றிற் பறவைகளே! |
|
நல்குதிரோ நல்கீரோ |
– |
(எம்பெருமானிடத்துச் சென்று) சொல்லுவீர்களோ மாட்டீர்களோ |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (என்னீர்மைகண்டிரங்கி) பராங்குசநாயகி பல பறவைகளை விளித்துச் சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்ட சில மகன்றில் பறவைகள் ‘நமக்கும் கைங்கரியம் செய்யச் சிறித அவகாசம் நேர்ந்தது’ என்று மகிழ்ந்து அருகே வந்து எங்களுக்கு ஏதேனும் நியமனமுண்டோ?, என்று கேட்பனபோல நிற்க, அவற்றைக் கண்டு, ‘அந்தோ! எனது நிலைமையைப் பலகாலும் கண்டுவைத்தும் இரங்காதே போனவர்க்கு நான் என்ன ஸமாசாரம் சொல்லியனுப்புவது?’ என்று நசையற்றவளாய், பின்னையும் வெறுமனிருக்கமாட்டாமையினாலே, ‘மகன்றில்களே! என்னிலைமையை அவர்க்குச் சொல்லுவீர்களோ? மாட்டீர்களோ? என்கிறாள்.
பிரிவில் தரிக்கமாட்டாத என்னுடைய ஸ்வபாவத்தை நன்றாகக் கண்டு வைத்தும் ‘ஐயோ? இப்படிப்பட்டவளையோ விட்டுப் பிரிவது!, ஒருகாலும் பிரியத்தகாது’ என்றிராத என்னீலமுகில்வண்ணர்க்கு என்ன ஸமாசாரம் சொல்லுவேனென்கிறாள் முன்னடிகளில். முற்காலத்தில் ஒரு தமிழன் பட்டரிடத்தில் வந்து இப்பாட்டின் முதலடியில் ஒரு ஆக்ஷேபம் செய்தானாம்; அதாவது- இது பிரிந்திருக்கும் நிலைமையில் சொல்லுகிற பாசுரமேயன்றிக் கூடியிருக்கும் நிலைமையிற் சொல்லுகிற பாசுரமன்றே; பிரிந்திருக்குங்காலத்தில் தலைவியின் தன்மைகளைத் தலைமகன் பிறர்கொல்லக் காதால் கேட்கலாகுமே தவிரக் கண்ணால் நேரில் காண முடியாதன்றோ; ஆகவே, “என்னீர்மை கேட்டிரங்கியிது தகாதென்னாத” என்று எப்படிச் சொல்லலாம்? என்று பூர்வபக்ஷம் செய்தானாம். பட்டர் அதைக்கேட்டு, ‘பண்டிதரே! நன்கு கேட்டீர்; *புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேனவ்வளவில், அள்ளிக்கொள்வற்றே பசப்பு* என்ற திருக்குறளும், *ஊருண்கேணியுண்டுறைத் தொக்கபாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே* என்று குறுந்தொகைச் செய்யுளும் உமக்குத் தெரியாதுபோலும்’ என்று சொல்லி அவற்றைப் பரக்க உபந்யஸித்து ஸமாதானப்படுத்தியருளிராம். (ஸமாதான விவரணம் வருமாறு-)
*புல்லிக்கிடந்தேன்* என்ற குறள் திருக்குறளில் பசப்புறு பருவரல் என்னுமதிகாரத்தில் ஏழாவதாகும். இது நாயகியின் பேச்சு; முன்பொரு நாள் காதலரை அழுந்தத் தழுவிக்கிடந்தேன்; கை மாறுவதற்காகச் சிறிது புடைபெயர்ந்தேன்; ஒரு நொடிப்பொழுது விலகினபமாத்திரத்திலும் பசலைநிறம் வந்து உடம்பெல்லாம் மூடிக்கொண்டது என்பது இதன் கருத்து. *ஊருண்கேணி* என்ற செய்யுள் குறுந்தொடிகைச்யயில் முந்நூற்றுத் தொண்ணூற்றொன்பதாவது. இதக் கருத்தாவது- ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப்பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கின்ற பாசியைப்போன்றது பாலைநிறம்; தண்ணீரில் நாம் கைவைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்; கையை எடுத்துவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும்: அதுபோல, கணவனுடைய கைபடுமிடங்களில் பசலைநிறம் நீங்கும்; அணைத்தகை நெகிழ்ந்தவாறே அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசி போன்றது பசலைநிறம் என்றபடி. (தொடுவுழித்தொடுவுழி- தொட்டவிடங்கள்தோறும். வீடுவுழிவீடுவுழி- விட்டவிடங்கள்தோறும். பரந்தலான்- வியாபிக்கிறபடியினாலே.) பிரிவாற்றாமையினால் ஸ்த்ரீகளின் மேனியில் தோன்றும் நிறவேறுபாடு பசலைநிறமெனப்படும். நாயகனை விட்டுப் பிரிந்தகாலத்தில் நாயகியினுடலில் இந்த நிறவேறுபாடு தோன்றுவது ஆச்சரியமன்று; ஒரு படுக்கையிலேயே படுத்துக் கூடியிருக்கும்போதே க்ஷணகாலம் கைநெகிழ்ந்தவளவில் இந்தப் பசலைநிறம் படர்கின்றதென்றால் பிரிந்த நிலைமையிற் கேட்க வேண்டியதில்லையன்றோ.
பட்டரிடத்தில் ஆக்ஷேபம் செய்த தமிழனுக்கு இப்போது என்ன ஸமாதானமாயிற்றென்னில் இப்பாட்டு பிரிவுகாலத்திற் சொல்லுவதானாலும் கூடியிருந்த காலத்தில் நிகழ்ந்த ஸம்பவத்தையே நினைப்பூட்டுவதாதலால் கேட்டிரங்கி என்னவேண்டியதில்லை; கண்டிரங்கி என்றே சொல்லத்தகும் என்றதாயிற்று.
என் நீலமுகில்வண்ணர்க்கு = என்னோடு முன்பு கலந்ததனாலே மேனி நிறம் பெற்றவர்க்கு என்றபடி. எம்பெருமான் இயற்கையிலேயே நீலமுகில் வண்ணனானயிருந்தாலும் அன்பர்களோடு கலக்கப்பெறாதவளவில் வைவர்ணியமடைந்தேயிருப்பனென்க. ‘என்னைவிட்டுப் பிரிந்தபின்பும் குறியழியாதே நீலமுகில் வண்ணராமேயிருக்கின்றவர்க்கு’ என்று உரைக்கவுமாம். இப்போதும் அவர் நீலமுகில்வண்ணராயேயிருப்பது இவளுக்கு எங்ஙனே தெரியுமென்னில்; வைவர்ணியமடைந்திருப்பானாகில் பதறி ஓடிவரமாட்டாளோ? அங்ஙனம் வாராமையினாலே அவர்க்குப் பிரிவாற்றாமையுமில்லை, அதனாலாகக்கூடிய வைவர்ணியமுமில்லை என்று அறுதியடத்தட்டில்லையே
என் சொல்லி யான் சொல்லுகேனோ = என்ன பாசுரத்தையிட்டு எதை உங்களுக்கு நான் சொல்லிவிடுவது? நான் சொல்லியனுப்பவேண்டம்படியாக இருக்கிறவரோ உங்கள் வார்த்தைகேட்டு வரப்போகிறார்? என்று நசையற்றுக்கையொழிந்தவன் பின்னையும் நப்பாசையினால் ஒன்று சொல்லத் தொடங்குகின்றான்.
கண்ணபிரான் கோபிமார்களைவிட்டுப் பிரிந்து மதுரைக்குச் சென்று பலநாள் வரையில் மீண்டுவாராதே அவ்விடத்தே தாமதித்திருக்க, ‘ஆய்ச்சிகள் மிகவும் ரோஷங் கொண்டிருப்பர்களாதலால் இப்போது முந்துற நாம் நேரில் செல்லலாகாது: நம்பி மூத்தபிரானை (பலராமனை) அனுப்பிச் சிறிது சீற்றமாற்றிப் பிறகு செல்வோம்’ என்று கருதின கண்ணபிரான் அப்படியே பலராமனைத் திருவாய்ப்பாடிக்கு அனுப்ப, அவனும் வந்து சேர்ந்தவளவிலே சில ஆய்ச்சிகள் பெரும்பசியன் சோற்றைக்கண்டு பதறுமாபோலே பதறி அவனருகிற்சென்று ப்ரணயரோஷத்தையும் மறந்து கண்ணபிரானைப் பற்றி விசாரித்து உடனே *அதவாகிம் ததாலாபை: க்ரியந்தாமபரா: கதா:* என்று அந்த க்ருஷ்ணனைப்பற்றின பேச்சு நமக்கு ஏதுக்கு? அதை விட்டுத் தொலையுங்கள்; வேறு பேச்சு ஏதாகிலும் எடுப்பது நமக்கு ஏதுக்கு? அதை விட்டுத்தொலையுங்கள்; வேறு பேச்சு ஏதாகிலும் எடுப்பது நல்லது என்று ஆசைவிட்டமை தோன்றச் சொன்னவர்கள் உடனே * அப்ய்யஸெள ம தரம் த்ரஷ்டும் ஸக்ருதப்யாகமிஷ்யதி* என்று நப்பாசை தோற்றப்பேசினார்கள். அதாவது- க்ருஷ்ணன் நமக்காக இங்கே வாரானாகிலும் பெற்ற தாயைக் காணவேண்டியாகிலும் ஒருகால் வாராமற்போவனோ? என்றார்கள். அவர்களுக்குப் போலவே பராங்குசநாயகிக்கும் நப்பாசை பின்னாட்டுகிறபடி.
தலைவனுக்குச் சொல்லியனுப்புகிற செய்தி யாதெனில்; நன்னீர்மை இனி அவர் கண்தாங்காது = நன்னீர்மையாவது நல்லுயிர்; இது இன்றளவும் ஒருவாறு தங்கியிருந்தாலும் இனி ஒரு நொடிப்பொழுதும் தங்காதென்று சொல்லவேணுமென்கிறாள். அசோகவனத்தில் வந்து முகங்காட்டின அனுமானைப் பிராட்டிக்கண்ட பிறகு ஸ்ரீராமபிரான் பக்கல் ப்ரணயரோஷத்தாலே ‘அவரனுப்பின ஆளன்றோ இவன் என்று சீறிச் சிலவார்த்தை அருளிச்செய்ய, அதற்கு அனுமான் ஸீதே! பெருமான் தேவரீருடைய போக்கிடமறியாமலிருந்தாரித்தனையல்லது அன்பு குறையப்பெற்றாரென்பதுண்டோ? நீர் இங்ஙனே இலங்கையிலிருக்கிறீர் என்றறிந்த பின்பு இனி தாமதித்தாராகிலன்றோ அவர்மேல் குற்றஞ் சொல்லலாம்’ என்று பிராட்டியின் ரோஷம் ஆறும்படி சில வார்த்தைகள் விண்ணப்பஞ்செய்து, அவ்வளவோடு நில்லாமல் ‘நீரும் பெருமானைப் பிரிந்து பத்துமாஸ காலமாகத் தரித்திருப்பதுண்டே; பெருமாள்மீது நீர் ஏறிட்டுச் சொல்லுங்குற்றம் உம்மிடத்திலும் உள்ளதன்றோ’ என்றுதான் கருதி யிருப்பதாகக்காட்ட. அதற்குப் பிராட்டி சொன்னாள்- ‘ஓ ராமதூதனே! இப்படியோ நீ நினைத்திருக்கிறாய்? நாட்டார்க்குத் தாய் என்றும் தந்தை யென்றும் உற்றாரென்றும் உறவினரென்றும் ப்ரீதிக்குப் போக்கிடம் பல தலைத்திருக்கையாலே அவர்களுடைய ஸ்நேஹம் எங்கும் பாலிபாய்ந்திருக்கும்; பெருமாள் அப்படியல்லாமல் எல்லார் பக்கலிலும் பண்ணக்கூடிய ஸ்நேஹகத்தை என்னொருத்தி பக்கலிலே ஒரு மடமையாகச் செய்து வைக்கையாலே சிறிது தாமதித்தாகிலும் கடலை அணைசெய்து விரோதிகளையும் தொலைத்து அளவுகடந்த ஆவலோடே வருவது தவிரமாட்டார்; வந்தே தீருவர்; வெய்யிலில் அடிபட்டவன் பெருவிடாய்ப்பட்டுத் தண்ணீர்பந்தலண்டை வந்து சேர்ந்தவாறே தண்ணீர்ச்சால் உருண்டு கிடந்தால் ஐயோவென்று உயிர் துறக்குமாபோலே அவர் பெரு முயற்சிகள் செய்து இங்கு வந்து சேர்ந்தவாறே நான் முடித்துக் கிடந்தேனாகில் பின்னை அவர் பிழைக்கும் வகையுண்டோ? உலகமெல்லாம் அநாமாய்விடுமன்றோ? அங்ஙனமாகாமற் பொருட்டு அவர்க்காக என்னுயிரைக் காத்துக்கொண்டிருக்கிறேன் காண் என்றாளாம். அப்படியே இப்பராங்சநாயகியும் ‘அவரைவிட்டுப் பிரிந்தவன்றே என்னுயிரை நான் மாய்த்துக் கொண்டிருக்கவேணும்; அப்படியானால் அவர் முடிந்திடுவரே, உலகு அநீச்வரமாகுமே! என் நினைத்தே இதுவரை ஒருவாறு உயிர்தரித்திருந்தேன் என்பதான கருத்தை உள்ளடக்கி, இனித் தரிக்கும் விரகு இல்லாமையாலே முடிந்தேபோமித்தனை யென்கிறாள்.
ஒருவாய்ச்சொல் = “வாசா தர்மமவாப்நுஹி” என்று பிராட்டி அனுமனை நோக்கிச் சொன்ன சொல்லின்பொருள் இதில் உறையும். (மகன்றில்- ஓர் பக்ஷி விசேஷம். “அன்றிலிலே ஓர் அவாந்தரபேதம்” என்று ஆசார்யஹிருதய வியாக்கியானத்திலுள்ளது. கணவனைப் பிரிந்தவாறே கதறியழுது உயிர்துறப்பது அன்றில்; அதுபோல எம்பெருமானுடைய விச்லேஷத்தில் உயிர்மாயுமளவான நிலைமையைப்பெறும் ஆசிரியர் ஸ்வாபதேசத்தில் விவக்ஷிதர்கள்.)
“ஒருவாய்ச்சொல் நல்கவேணும்” என்னாதே “நல்குதிரோ நல்கீரோ என்றது ஆற்றாமையின்கனம்.
English Translation
My cloud-hued lord does not notice my plight, nor take pity on me and say, “Oh, this is not proper”, what more can I say? O Blue Curlews, go tell him that he has no goodness left in him, Would you, or would you not?
