(2937)
அருளாத நீரருளி யவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி
யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத் தோமே?
பதவுரை
|
ஆழி வழி வண்டே |
– |
வட்டமான ரேகைகளையுடைய வண்டே! |
|
அருள் ஆழி அம்மானை |
– |
அருட்கடலான எம்பெருமானை |
|
கண்டக்கால் |
– |
காணும்பொழுது (அவரைநோக்கி) |
|
அருளாத நீர் |
– |
(இவ்வளவில்) கிருபைபண்ணாத நீர் |
|
அருளி |
– |
கிருபைபண்ணி |
|
அவர் ஆவி துவரா முன் |
– |
அவருடைய (ஆழ்வாருடைய) உயிர் நீர்மை கெடுவதற்கு முன்னே |
|
அருள் ஆழி புள் |
– |
கருணைக்கடலான பெரிய திருவடியை |
|
அவர் வீதி |
– |
அவரிருக்கிற வீதியில் |
|
ஒருநாள் |
– |
ஒருநாளாயினும் |
|
கடவீர் என்று |
– |
நடத்துவீராக என்று |
|
இது சொல்லி |
– |
இந்த வார்த்தையைச் சொல்லி |
|
அருள் |
– |
கிருபை பண்ணவேணும்; |
|
யாமும் |
– |
நாமும் |
|
என் பிழைத்தோம் |
– |
என்ன குற்றம் செய்தோம்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்னுடைய வருத்தத்தைப் பரிஹரியாதொழிந்தாலும், தம்முடைய நாராயணத்வத்தையாவது காப்பாற்றிக்கொள்ளச் சொல்ல வேணுமென்றாள் கீழ்ப்பாட்டில்; இதற்கு எம்பெருமான் ‘நம்முடைய நாராயணத்வம் தொலைந்தாலும் தொலையட்டும்; ஒருவிதத்திலும் நமக்கு ஈடல்லாத இந்தப் பராங்குசநாயகியோடு கலந்து அவத்யம் பொறுவதிற்காட்டிலும் நாராயணத்வம் அழிய நிற்பதே அமையும் என்று திருவுள்ளமாகக் கூடுமென்று கருதிய தலைவி, அவருக்கும் அவத்யம்வராமல் எனக்கும் ஸத்தை கிடக்கும்படியாக ஒரு வழியுண்டு; தாம் திருவீதி உலாவப்புறப்படுதல், ஆனைக்கு அருள் செய்ப்புறப்படுதல், என்றிப்படிப் சில யாத்திரைகள் செய்வதுண்டே; அப்படி ஏதேனுமொரு வியாஜங்கொண்டு எங்கள் தெருவே போனால் தமக்கும் அவத்யம் வாராது. நானும் சாலகவாசல்பற்றி நோக்கி ஜீவிப்பேன்; இதை அவர்க்குச் சொல்லாய் என்று ஒருவண்டை இரக்கிறாள்.
“அருளாத நீரருளி அவராவி துவராமுன் அருளாழிப் புட்கவீர் அவர் வீதியொருநாள்” என்னுமளவும் எம்பெருமானிடத்தில் வண்டு சொல்ல வேண்டிய வார்த்தை. பரமதயாளுவென்று பேர்பெற்றிருக்கின்ற எம்பெருமானை ‘அருளாத நீர்’ என்பது என்ன ஆற்றாமையின் கனத்தினாலோ அறியோம். “அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம.” என்று உலகுக்கெல்லாம் அருள்செய்ய தீக்ஷைபண்ணிக் கொண்டிருக்கிறவர் தன் விஷயத்தில் மாத்திரம் அருளாமைக்கு தீக்ஷைபண்ணிக் கொண்டிருப்பதாகப் பராங்குச நாயகியின் கருத்துப்போலும். இங்கே நம்பிள்ளையீடு;- “மயர்வற மதிநலம் அருளினன் என்று நெஞ்சுருகிக் கிடக்குமிவர் அருளாத நீர் என்கிறது என்ன தசாவிசேமென்றறிகிறிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருநாமம் சாற்றுகிறாள்” என்பதாம்.
“அருளாதநீர் அருளி’ என்பதற்கு மற்றொருவகையாகவும் பொருள் கொள்ளலாம்; அருநாத- அருளுக்கு விஷயம் (இலக்குப்) பெறாத என்றபடி. இந்த விபூதியிலே * உண்டியே உடைய உகந்தோடுமவர்களே மலிந்திருப்பதனால் அவர்கள் உம்முடைய அருளை வேண்டுவாரன்றே; நானொருத்தியேயன்று உமது அருறை வேண்டுபவள்; ஆகையாலே, வேறிடத்தில், அருளுக்கு அவகாசம் பெறாத நீர் அதனை என்திறத்திலே செய்யவேணுமென்றவாறு.
அவராவி துவராமுன் = என்றேனுமொருநாள் நீ அருள் செய்யவே போகிறீர்; ஆனால், ஆவி போன பின்பு வீணாக அருள் செய்வதிற்காட்டிலும் முந்துற முன்னமே அது செய்வது நலமென்க. “ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்/: தத் த்வயா ஹநுமந் வாச்ய: வாசா தர்மமவாப்நுஹி.” என்ற ஸ்ரீ ராமாண ச்லோகத்தின் விசேஷார்த்தம் இங்கு நினைக்கத்தக்கது. இது பிராட்டி அனுமானைக் குறித்துச் சொன்ன ச்லோகம்: இதற்கு மேலெழுந்தவாரியாய்ச் சிலர் பொருள் கூறுவர்- அவரைப் பிரிந்த பின்பு நான் மரணமடைந்துவிட்டதாக அவர் நினைத்து வாளா இருக்கக்கூடும்; அப்படி நான் மரணமடையவில்லை, இன்னமும் பிழைத்தே யிருக்கின்றேனென்று அவர் தெரிந்து கொள்ளுமாறு நீ தெரிவிக்க வேணும்- என்று பிராட்டி அனுமனிடம் சொல்லியனுப்புவதாகச் சொல்லுவர்கள். இது உசிதமான பொருளன்று. உத்தம நாயகி நாயகிகளின் தன்மை எப்படிப்பட்டதென்றால், இருவரின் ஒருவருடைய உயிர்போயிற்றென்றால் அப்போதே மற்றொருவருடைய உயிரும் ஒழிந்தே தீரும்: நாயகன் தான் ஜீவித்திருந்தால் நாயகியும் ஏதோவோரிடத்தில் ஜீவித்துத் தானிருக்கிறாளென்று நிச்சயத்துக் கொள்ளலாம். ஒருவரையொழிய ஒருவர்: ஜீவித்திருக்கமாட்டாரென்பது கொள்கை. இவ்விஷயம் இராமபிரானுக்கும் தெரியுமாகையாலே அவன் தான் ஜீவித்திருக்கும்போது பிராட்டியும் ஜீவித்தேயிருக்கின்றாளென்று திடமாகத் தெரிந்து கொள்ள இடமுண்டாதலால் ‘நான் ஜீவித்திருப்பதாகச் சொல்’ என்று பிராட்டி தெரிவிக்கத் தேவையில்லையென்றோ? ஆதலால் இது பொருளன்று. பின்னை ஏதென்னில்: “ராம: ஜீவந்தீம் மாம் யதா ஸம்பாவதி ததா வாச்ய:” இங்கே ஸம்பாவநையாவது க்ருபைபண்ணுதல்; அவர் எனக்கு என்றெனுமொருநாள் அருள் செய்யவே போகிறார்; ஆனால் நான் உயிரோடிருக்கும்போதே அந்த அருளைச் செய்தாலன்றோ அது நிறம் பெறும்; நான் முடிந்த பிறகு யார் திறத்து அருள் செய்வது? அது பழுதாகாமே நான் ஜீவித்திருக்கும்போதே அருள் செய்யச் சொல்லாய் என்பதே உசிதமானபொருள் அங்ஙனமே இங்கும் அவராவி துவராமுன் எனப்பட்டதென்க.
அங்குப்போய் விண்ணப்பஞ்செய்தால் உடனே அவர் இங்கு வந்து சேருமாறு அவரைக் கொணர்தற்குக் கருடாழ்வான் அருகேயுளன் என்று அவனை நினைப்பூட்டுகின்றாள் அருளாழிப்புள் என்று. கீழ் முதற்பாட்டில் வெஞ்சிறைப்புள் என்று வெவ்விதாகச் சொன்ன வாயினால் இங்கு அருளாழிப்புள் என்று கொண்டாடிச் சொல்லுகிறாள். அருள்கூர்ந்து அக் கருடனே எழுந்தருளப்பண்ணிக் கொண்டவரவேண்டுமென்ற கருத்தினால்.
அவர் வீதி ஒருநாள் கடவீர் = பராங்குசநாயகி இருக்கிற வீதிவழியாகக் கருடனை ஒருநாள் செலுத்தவேணுமென்று சொல்லவேணுமென்கிறாள். அடிக்கடி ஒரு வீதி வழியாகச் சென்றால் யாரேனும் பார்த்து ஏதேனும் சங்கை கொள்ளமாட்டார்களோ வென்னும் வார்த்தைக்கு இடமறும்படி ஒருநாள் எனப்பட்டது. ஒருநாள் எழுந்தருளினால் இவளுடைய ஆசை தணிந்து விடுமோவெனில்; பெருவிடாய்ப்படட்வர்கள் ‘துளி நாக்கு நனைக்கத் தண்ணீர் தந்தால் போதும்’ என்னுமாபோலே சொல்லுகிறபடி.
அருளாழியம்மானை = ஆழியென்று கடலுக்கும் சக்கரத்துக்கும் பெயராதலால் அவ்விருபொருளும் இங்கு ஏற்கும்; அவளுக்குக் கடல்போன்றவம்மான் என்றாவது அருள்மிகுந்த திருவாழியாழ்வானைப் படையாகவுடைய அம்மான் என்றாவது பொருள் காண்க. கண்டக்கால் என்றதனால் காட்சியின் அருமை கூறியவாறே. என்னைப்போலே இரங்குதற்குரியோர் அவர்க்கு எத்தனையோ பேர்கள் உண்டே; யாரையேனும் கடாக்ஷிக்க எங்கேனும் எழுந்தருளியிருந்தால் காணக்கிடையாரே; ஒரு கால் அத்ருஷ்டவசத்தினால் காணப்பெறின் என்றபடி.
இச்சொல்லியருள் = ‘அருளாழிப்புட்கடவீர் அவர் வீதியொருநாள்’ என்கிற வார்த்தையைச் சொல்லியருளவேணும். ‘சொல்’ என்னாதே ‘சொல்லியருள்’ என்று கௌரவந்தோற்றக்கூறினது ஸ்வாபதேசத்தில் ஆசார்யரே விவக்ஷிதர் என்பதை விளக்குதற்கென்ப. ஆழிவரிவண்டே= கம்பீரத்தன்மையும் அழகும் பொருந்திய வண்டே! என்றவாறு.
யாமும் என்பிழைத்தோம் = எம்பெருமான் இப்படி உபேக்ஷிக்கும்படி என்ன பாவம் பண்ணினோம்!; அவரைப் பிரிந்து ஆறியிருக்கமாட்டாதே துவள்கின்றவிதனைப் பிழையாக நினைத்தாரோ? என்னைப்போலே ஒருத்தியான ஸீதாபிராட்டியைப் பிரிந்த காலத்து உண்ணாது உறங்காது வானரத்தின் வாயில் தூதுமொழிந்து இப்படியெல்லாம் துவண்டவர் தாமாயிருக்க, அந்தத் துவட்சியையெல்லாம் இப்போது நான் அடைந்துகிடப்பது பிழையாயிற்றுப்போலும்.
English Translation
O Clever bees! If you see my compassionate Lord, pray speak to him thus; “You are unjust. Before her life withes, direct your good Garuda bird to walk through her street”. Alas! What crime have we committed?
