(2199)

(2199)

கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,

ஒண்டிற லோன் மார்வத் துகிர்வைத்தது – உண்டதுவும்

தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,

வான்கடந்தான் செய்த வழக்கு.

 

பதவுரை

குறள்உரு ஆய்

வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து

உலகம்

பூமி முதலிய லோகங்களை

கொண்டது

ஆக்ரமித்துக் கொண்டதும்,

கோள் அரி ஆய்

மிடுக்கையுடைய நரசிங்கமாகி

ஒண்திறலோன் மார்வத்து

மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே

உகிர் வைத்தது

தனது நகங்களையழுத்திக் கீண்டொழித்ததும்

ஒருநாள்

ஒருகாலத்திலே

தான் கடந்த

தான் அளந்து கொண்ட

ஏழ் உலகே

எல்லாவுலகங்களையும்

உண்டதுவும்

(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்

(ஆகிய இச்செயல்கள்)

வான் கடந்தான்

ஆகாசத்தையளவிட்டாலும் அளவிடவொண்ணாதபடியுள்ள பெருமையையுடையவனும்

தாமரை கண்

செந்தாமரைக் கண்ணனுமாகிய

மால்

எம்பெருமான்

செய்த

செய்தருளின

வழக்கு

நியாயமான செயல்களாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீமந் நாராயணனே ஸர்வஸமாகரயணீயனென்று கீழ்ப்பாட்டிற் கூறியதை நிலைகாட்டுதற்காக அப்பெருமான் தன்னை அழியுமாறியும் ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறபடியைப் பாருங்களென்கிறாரிதில் உலகத்தில் குள்ளனைக் கண்டால் கண்டவர்களும் ஏசிப் பேசுவது வழக்கம்; அப்படிப்பட்ட குள்ள வடிவைக் கொண்டான் இந்திரன் குறையைத் தீர்ப்பதற்காக அன்றியும் உடல் ஒருபடியும் முகம் ஒருபடியுமாக வடிவெடுப்பதும் பரிஹாஸாஸ்பதம்; அப்படிப்பட்ட வடிவையும் கொண்டான் மூவுலகங்களின் துயர் தொலைக்க.  அன்றியும் தன் காலிலேபட்ட வஸ்து அசுத்தமென்று அதை எவனும் உட்கொள்ளமாட்டான்; எம்பெருமானோ வென்னில், த்ரிவிக்ரமாவதாரத்தில் தன்னடிக் கீழ்ப்பட்ட உலகங்களையே (மற்றொரு கால் பிரளயங் கொள்ளாதபடி) உட்கொண்டான்.  ஆகவே இவ்வளவுஞ் செய்தது தன்னுடைமையைத் தான் நெருக்கிக் கொள்வதற்காகவே யாதலால் இவனே ஸர்வ ஸ்வாமியென்பது திண்ணமன்றோ.

“வான்கடந்தான் செய்தவழக்கு” என்ற ஈற்றடிக்கு இருவகையாகக் கருத்தாகலாம்; தன்னுடைய ரக்ஷகத்வத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிச்செய்த காரியங்களாகையாலே இவையெல்லாம் நியாயமான காரியங்கள் என்பதாகவொரு கருத்து; இனி, வழக்கு என்றது எதிர்மறை இலக்கணையால் வழக்கல்ல என்றபடியாய், சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே உலகங்களை அளந்து கொள்வதும், உலகத்தில் எங்கும் என்றுங் கண்டறியாதவொரு விஜாதீயமான வடிவத்தையெடுத்து இரணியனைப் பிளந்தொழிப்பதும்; தன் காலில்பட்டு அசுத்தமான வுலகத்தைத்தானே உட்கொள்ளுதலும் நியாயமல்லவே!  என்றவாறாம்.  ப்ரேமத்தின் “கனத்தாலே” பக்தர்கள் இப்படி பரிஹாஸமுறையிலே பேசுவதும் பொருந்தும்.

வான் கடந்தான் = வானத்தை அளவிடிலும் அளவிட வொன்ணாத பெருமையை யுடையவனென்றும் ஸ்வர்க்கத்தை யளந்தவனென்றும் பொருளாகலாம்.

 

English Translation

A graceful manikin received the Earth; a fierce lion fore into Hiranya’s chest; a child swallowed the seven worlds, these are some of the wonders of my lotus-eyed Earth-stradding Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top