(1472)
மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப் பெற்றேன்,
பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான்,
வற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச்
செற்றாய், கொற்றவனே. திருவிண் ணகரானே
பதவுரை
| வற்றா நீள் கடல் சூழ் |
– |
ஒருநாளும் வற்றாத பெரியகடலால் சூழப்பட்ட |
| இலங்கை |
– |
லங்காபுரியில் |
| இராவணனை |
– |
ராவணனை |
| செற்றாய் |
– |
கொன்றொழித்தவனே!, |
| கொற்றவனே |
– |
தேவாதிதேவனே! |
| திருவிண்ணகரானே!- |
– |
|
| மற்று ஓர் தெய்வம் எண்ணேன் |
– |
வேறொரு தெய்வத்தை நெஞ்சிலும் நினைப்பேனல்லேன்; |
| எம்பெருமான் |
– |
ஸ்வாமிந்! |
| உன்னை |
– |
உன்னை |
| என் மனத்து வைத்து |
– |
எனது நெஞ்சில் இருத்தி |
| பெற்றேன் |
– |
ஒரு பேறுபெற்றேன்; |
| பெற்றதுவும் |
– |
அப்படி நான் பெற்ற பேறாவது |
| பிறவாமை |
– |
இனிப் பிறப்பில்லாமையே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஒருவராலும் அழிக்கவொண்ணாத அரணையுடைத்தான இலங்கையை நீறுபடுத்தி இராவணனையும் வேரோடே களைந்தொழித்தாப்போலே அடியேனுடைய பிரதிபந்தகங்களையெல்லாம் தொலைத்தருளின பெருமானே! நான் ஆச்ரயிக்கத்தகுந்த தெய்வம் வேறொன்று இருப்பதாக நெஞ்சிலும் நினையேன்; ஸர்வஸ்மாத்பரனானவுன்னையே நெஞ்சில் தாங்கி அலப்யலாபம் பெற்றேன்; என்ன பேறுபெற்றேனென்னில், தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதற்கு ஒருகால் காரணமாகக்கூடிய ஜன்மமும் தொலையப்பெற்றேன்; திருவிண்ணகரிற் கண்ட காட்சியிலே பெற்ற பேறுகாண் இது.
English Translation
O Lord of Tiruvinnagar! O Lord who destroyed the ocean-girdled Lanka city’s king Ravana! My Liege! I seek no other god. I have placed you firmly in my heart, in doing so, I have found my freedom from birth.
