(1329)
சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா, அந்த ணாலி மாலே சோலை மழகளிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ,என்
எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே.
பதவுரை
|
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவ இனிய மைந்தா |
– |
நெஞ்சிலே ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாமலிருக்கிற செல்வமே! |
|
மருவ இனிய மைந்தா |
– |
அநுபவிக்க அநுபவிக்க போக்யனாயிருக்கிற நித்யயுவாவே!, |
|
அம் தண் ஆலி மாலே |
– |
அழகிய குளிர்ந்த திருவாலி நகர்ப்பெருமானே!, |
|
சோலை மழகளிறே |
– |
சோலைக்குள்ளே வளர்ந்தஒரு யானைக்குட்டி போன்றவனே! |
|
நந்தா விளக்கின் சுடரே |
– |
ஒரு நாளுமணையாதவிளக்குச் சோதிபோல் திகழுமவனே! |
|
நறையூர் நின்ற நம்பீ |
– |
திருநறையூரில் எழுந்தருளியிருக்கிற பரிபூர்ணனே! |
|
இந்தளுராய் என் எந்தாய் |
– |
திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானே! |
|
ஆடியேற்கு இறையும் இரங்காயே |
– |
அடியேன் விஷயத்தில் சிறிதும் கிருபைசெய்கிற யில்லையே! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாசுரம் மிக்க தீநஸ்வரத்தோடே பேசியிருக்கச் செய்தேயும் இந்த;ரெம்பிரான் திருவுள்ளமிரங்கக் கண்டிலர்; பிரானே! கடலிலே நீர் வற்றுவதுண்டோ? உன் திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? இப்படியும் என்னைப் படுகொலையடிக்கலாமோ? பாவியேனுக்குச் சிறிதும் இரங்கியருள மாட்டாயோ? என்கிறார்.
சோலைமழகளிறே! – சோலைக்குள்ளே வளர்ந்தவொரு இளவானைக்கன்றுபோலே இனியனா யிருப்பவனே!. திருமாலிருஞ் சோலையில் திகழும் யானைக்குட்டியே! என்றுமுரைக்கலாம்.
நந்தாவிளக்கின் சுடரே! – விளக்கில் திரியும் எண்ணெயும் புகையுமான அழுக்கு இன்றியே புகர்தான் ஒருவடிவு கொண்டதோ என்னும்படியாக ஜ்ஞாநஸ்வரூபனாய்ப் பிரகாசிப்பவனே! என்கை. இறையும் இரங்காய் – சிறிதேனும் இரங்கவேணும் என்றும் பொருளாம்.
English Translation
O Lord of indolur! O Precious one remaining in my heart! O Prince sweet to approach! O Lord-adorable of Tiruvalil O Elephant roaming in Tirumalirumsolai! O Lamp-eternal of Manimadakkoyil! O Lord standing in Naraiyur! My own sweet Lord! See, you have no pity for me.
