(1126)
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன்
அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
பதவுரை
|
தஞ்சம் |
– |
நிச்சயமாக |
|
என் வளையும் |
– |
எனது கைவளைகளும் |
|
இவர்க்கு நில்லா |
– |
இவரை நோக்கி (என் கையில்) நிற்கின்றன வில்லை; |
|
சிந்தித்தேற்கு |
– |
நான் ஆராயுமளவில் |
|
நெஞ்சமும் |
– |
எனது மனமும் |
|
தம்மதே |
– |
இவருடையதேயாம்; |
|
வஞ்சி மருங்குல் |
– |
வஞ்சிக்கொடிபோன்ற(எனது) இடையானது |
|
நெருங்க |
– |
துவளும்படியாக |
|
நோக்கி |
– |
கடாக்ஷித்து |
|
வாய் திறந்து |
– |
தனது திருப்பவளத்;தைத் திறந்து |
|
ஒன்று பணித்தது உண்டு |
– |
ஒருவார்த்தை சொன்னது முண்டு; |
|
இவர் நோக்கும் நோக்கம் |
– |
இவர் பார்க்கிற பார்வையானது |
|
நஞ்சம் உடைத்து |
– |
விஷங்கலந்ததுபோலே கொடிதாயிருக்கின்று; |
|
நான் இவர் தம்மை அறிய மாட்டேன் |
– |
நான் இவருடைய படியை அறிகின்றிலேன்; |
|
இவர் ஆர் கொல் என்ன |
– |
இவரார் என்று கேட்கவும் |
|
அஞ்சுவன் |
– |
பயப்படுகின்றேன்; |
|
(ஆயினும் தாமே) |
||
|
அட்டபுயகரத்தேன் என்றார்–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்னுடைய கைவளைகளும் என்னுடைய நெஞ்சமும் என் பக்கலில் சிறிதும் தங்குகின்றன வில்லை; அவரிடத்திலேயே சென்று சேர்ந்துவிட்டன; (அதாவது–உடம்பு மெலிந்து மூர்ச்சையுமடைந்தேன் என்றவாறு.) இப்படி என்னிடத்திலுள்ளவற்றையெல்லாம் கொள்ளைகொண்ட பின்பும் ‘ இவளிடத்தில் இன்னமும் ஏதாவது தங்கிகிருப்பதுண்டாகில் அதையும் கொள்வோம்’ என்றெண்ணி என் இ;டையை உற்றுநோக்கி ஏதோவொரு வார்த்தையும் வாய்விட்டுச் சொன்னார்; அவர் பார்க்கிற பார்வையோ கண்ணாலே கொளுத்துவதுபோல் கொடிதாயிராநின்றது; இவர் நம்மை ரக்ஷிக்க வந்தவரா? அல்லதுபக்ஷிக்க வந்தவரா என்று எனக்கு விளங்கவில்லை; இவரார் கொல்? என்று கேட்கவும் எனக்கு அச்சமுண்டாகிவிட்டது; என்னுடைய அச்சத்தைத் தெரிந்துகொண்டு அவர் தாமே ‘என்னை வேற்றுருவாக நினைத்து அஞ்சவேண்டர் நீ அஞ்சவேண்டாதபடி அட்டபுயகரத்திலே எனியனாய் வந்து நிற்கிறவனன்றோ நான்’ என்றார்–என்கிறாள்,
“என்வளையும் இவர்க்கு நில்ல!” என்றது – இவர்க்காகி, என்னிடத்திலே நில்லா என்றபடி. “இங்கே குடியிருப்பாய் அவர்க்காக வர்த்திக்கின்றனவா யிருந்தன” என்பது வியாக்கியான வருளிச்செயல். – (சத்தியம்) என்ற வடசொல் தஞ்சமெனத் திரிந்தது; உண்மையாக என்கை.
English Translation
My bangles left my hands, seeking his refuge. My heart too became his. He looked hard at my Vanji-like slender waist and opened his mouth to speak a word. The glance he gave was full of sweet poison. I did not know who he was. Who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram!”, he said.
