(1046)

(1046)

வந்தாயென்மனம் புகுந்தாய் மன்னிநின்றாய் *
நந்தாத கொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ! *
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்! * இனியானுன்னை யென்றும் விடேனே.

பதவுரை

நந்தாத

ஒருகாலும் அணையாத

கொழு சுடரே

சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!

எங்கள் நம்பீ

எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே!

சிந்தாமணியே

நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே!

திருவேங்கடம் மேய எந்தாய்

திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே!

வந்தாய்

என்பக்கல் வந்தாய்;

என் மனம் புகுந்தாய்

எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்;

மன்னி நின்றாய்

உள்ளேயே பொருந்தி நின்றாய்;

இனி

இனிமேல்

யான்

அடியேன்

உன்னை என்றும் விடேன்

உன்னை ஒருநாளும் விடமாட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1046:

வந்தாய் ; என் மனம் புகுந்தாய்; மன்னி நின்றாய்

நந்தாத கொழுஞ் சுடரே! எங்கள் நம்பீ!

சிந்தாமணியே! திருவேங்கடம் மேய

எந்தாய்!- இனி யான் உனை என்றும் விடேனே. [1-10-9]

 

        * * * –[வந்தாயென்மனம்.] தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய் – என் மனம் புகுந்தாய் – மன்னிநின்றாய் ” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார்.

        வந்தாய் – பரமபதம், திருப்பாற்கடல் முதலான அஸாதாரண ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய். என்மனம்புகுந்தாய் – வந்தவிடத்திலும் ஜ்ஞாநாநுஷ்டாநங்ளிற்சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடியோடாமல் நாயினேனுடைய மனத்தைத் தேடிப்பிடித்து வந்து புகுந்தாய். மன்னிநின்றாய் – ‘இனிய இடங்களிலே நாம் சுகமாக இருப்பதைவிட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப் பட்டுக்கிடப்பானேன்’ என்று வெறுத்து நெஞ்சைவிட்டு நீங்கப்பாராமல், ‘இதனில் சிறந்த ஸ்தாநம் வேறொன்று நமக்கில்லை’ என்று கொண்டு என்னெஞ்சிலேயே ஸ்திரப்ரதிஷ்டையாக இருந்துவிட்டாய்.

        அப்ராக்ருதனான நீ மிகவும் ஹேயமான என்னெஞ்சிலே வந்து புகுந்ததனாலே உன்னுடைய தேஜஸ்ஸுக்கு எள்ளளவும் குறையில்லை; முன்னிலும் தேஜஸ்ஸு விஞ்சுகின்றது என்பார் நந்தாத கொழுஞ்சுடரே! என விளிக்கின்றார். நந்துதல் – கெடுதல் ; கந்தாத – கெடாத.

        சிந்தாமணியே!= காமதேநு, கல்பவ்ருக்ஷம் முதலானவை போலே நினைத்த மாத்திரத்தில் அபீஷ்டங்களையெல்லாம் தரக்கூடிய ஒரு மணிக்குச் சிந்தாமணியென்று பெயர்; அதுபோலே ஸர்வாபீஷ்டங்களையும் அளிப்பவனே! என்றபடி. இப்படிப்பட்டவுன்னை இனி நான் ஒரு நொடிப்பொழுதும்விட்டுப் பிரியமாட்டேனென்று தமக்குப் பரபக்தி வாய்ந்தபடியைப் பேசினாராயிற்று. …… (9)

 

English Translation

O Lord, source of eternal light, our master, wish gem, Resident of Venkatam hills! You came, entered my heart, and conquered it. Now I shall never let you go.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top