(1025)

(1025)

அம்பர மனல்கால் நிலம் சலமாகிநின்ற வமரர்கோன் *

வம்புலா மலர்மேல் மலிமட மங்கை தன் கொழுநனவன்* 

கொம்பினன்ன விடைமடக் குறமாதர் நீளிதணந்தொறும்* 

செம்புனமவை காவல்கொள் திருவேங்கடமடை நெஞ்சமே !

பதவுரை

அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற

ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும்

அமரர் கோன்

நித்ய ஸூரிகட்குத் தலைவனும்

வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன்

பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு

கொழுநன் அவன்

நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும்,

நீள் இதணம் தொறும்

உயர்ந்த பரண்கள் தோறும்

கொம்பின் அன்ன இடை

வஞ்சிக் கொம்போடு ஒத்த (நுண்ணிய) இடுப்பையுடைய

மட குற மாதர்

மடமை தங்கிய குறப்பெண்கள்

செம்புனம் அவை காவல் கொள்

செவ்விய வயல்களைக் காவல் செய்து கொண்டிருக்கப் பெற்றதுமான

திருவேங்கடம் நெஞ்சமே! அடை-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

 #1025

அம்பரம், அனல், கால், நிலம், சலம் ஆகி நின்ற அமரர்-கோன்,

வம்பு உலாம் மலர்மேல் மலி மடமங்கை -தன் கொழுநன்-அவன், 

கொம்பின் அன்ன இடை மடக் குறமாதர் நீள் இதணம்தொறும் 

செம் புனம்-அவை காவல் கொள் திருவேங்கடம் அடை, நெஞ்சமே! (1-8-8)

        * * *-(அம்பரமனல்கால்நிலம்.) கீழ்ப்பாட்டில் “பாரு நீரெரி காற்றினோடு ஆகாயமுமிவையாயினான்” என்ற முதலடியிற் சொன்ன அர்த்தமே இப்பாட்டிலும் முதலடியிற் சொல்லப்படுகிறது. அம்பரம் – ஆகாயம்; தற்சம வடசொல். பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதஸ்வ ரூபியானவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே!. 

        அஃது எப்படிப்பட்டதென்னில்; கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும் செம்புனமவை காவல்கொள்ளப்பெற்றது. குறத்திகள் மலைகளிலே வாஸஞ் செய்பவர்கள்; புனங்காத்தல் அவர்களது தொழிலாகும்; (அதாவது- பட்டிமேய வொண்ணாதபடி நிலங்களைக் காப்பாற்றுதல்.) உயரமான பரண்களை அமைத்துக்கொண்டு அவற்றிலே கிடந்து காப்பர்கள்; இதனை ஸ்வபாவோக்தியாக இங்கு அருளிச் செய்தாராயிற்று. ‘இதணம்’ என்றும் ‘ இதண் ‘ என்றும் காவற்பரணுக்குப் பெயர். ….. ….. …. (8)

 

English Translation

 

He is manifest in Earth, Water, Fire, Wind and space. He is the king of gods, the bee-humming lotus dame Lakshmi’s spouse. Thin waisted gypsy women sit on lofts in the treetops and watch over the tracts of red soil in Tiruvenkatam,- thitherward, o Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top