(1006)
ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்,
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்,
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே.! திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்!,
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
பதவுரை
| தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே |
– |
தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே! |
| திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய் |
– |
அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே! |
|
நைமிசாரணியத்துள் எந்தாய்!-; |
||
| ஊன் |
– |
மாமிசத்தை |
| இடை சுவர் வைத்து |
– |
நடுநடுவே சுவராக வைத்து |
| என்பு |
– |
எலும்புகளை |
| தூண் நாட்டி |
– |
கம்பங்களாக நட்டு |
| உரோமம் வேய்ந்து |
– |
மயிர்களை மேலே மூடி |
| ஒன்பது வாசல் தான் உடை |
– |
நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட |
| குரம்பை |
– |
குடிசை போன்ற இந்த சரீரத்தை |
| பிரியும் போது |
– |
விட்டுப்பிரியுங்காலத்தில் |
| உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன் |
– |
உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்; |
| நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன் |
– |
(இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
#1006
ஊன் இடைச் சுவர் வைத்து, என்பு தூண் நாட்டி, உரோமம் வேய்ந்து, ஒன்பது வாசல் –
தான் உடைக் குரம்பை பிரியும்போது, உன்-தன் சரணமே சரணம் என்று இருந்தேன்;
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே! திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் -நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-9]
ஊனிடைச்சுவர் வைத்துதம்முடைய அத்யவஸாயத்தை வெளி யிடுகிறாரிதில். சரீரத்தை ஒரு குடிசையாக உருவகப்படுத்துகின்றார். குடிசையில் இடையிடையே சுவர்கள் வைக்கப்பட்டிருக்கும்; இவ்வுடலில் மாம்ஸபிண்டங்கள் சுவர்போலிருக்கின்றன; குடிசையில் தூண்கள் நாட்டப்பட்டிருக்கும்; இதில் எலும்புகள் தூண்கள் போன்றுள்ளன. குடிசையில் பல வாசல்களுண்டு; உடலிலும் நவத்வாரங்கள் ப்ரத்யக்ஷமே. குடிசை ஓலைக்கொத்து முதலியவற்றால் மூடப்பட்டிருக்கும்; இதுவும் உரோமங்களால் மூடப்பட்டிராநின்றது. ஆக இவ்வகைகளாலே ஒரு குடிசை யென்னலாம்படி யிராநின்றதிறே இவ்வுடல்; குடிசையிலே நாம் வாழ்வதுபோல் இவ்வுடலில் ஆத்மா வாழ்கின்றான்; இவ்வுடலைவிட்டு ஆத்மா வெளிக்கிளம்புங்காலமே மரணமெனப்படும். அப்படி மரணம் நேர்ந்தபிறகு இவ்வாத்மா போய்ச் சேரவேண்டிய இடம் எம்பெருமான் திருவடிகளே – என்கிற அத்யவஸாயம் தமக்கு இருக்கிறபடியை முன்னடிகளால் அருளிச் செய்தாராயிற்று. யமபடர்கள் வந்து என்னைப்பற்றியிழுத்துக் கொண்டு போய்ப் பலவகையான ஹிம்ஸைகளைச் செய்வதற்கு உறுப்பான பாவங்களை நான் வேண்டியபடி செய்து வைத்திருந்தாலும், இன்று தேனுடைக்கமலத்திரு வாகிய பெரியபிராட்டியாரை முன்னிட்டு உன்னைச் சரணமடையும்படியான பாக்கியம் எனக்கு நேர்ந்ததனால் இனி நான் யமபுரம் சென்று வருந்த வேண்டிய ப்ரஸக்தியில்லை; உன் திருவடிகளையே கிட்டி ஆநந்திக்க வழி ஏற்பட்டுவிட்டது என்று தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டாரென்றுணர்க.
“நானுடைத் தவத்தால்”என்றது என்னுடைத்தவத்தால் என்றபடி. இவருடைய தவமாவது என்ன? என்றால், எம்பெருமானுடைய திருவருளையே தம்முடைய தவமாகச் சொல்லிக்கொள்வர்கள் ஆழ்வார்கள். உன்னருளாலே உன்னடி வந்து பணிந்தேனென்றபடி.
English Translation
Building a house with mortar of flesh and bones as the beams to support it, Thatched by the hairs and having openings nine, Self, is the resident you left there. O Lord of nectared lotus-dame Lakshmi, lying in the ocean, my refuge! Through my penance O, I have come to your feet, Naimisaraniyam-living Lord, O!
