(991)
ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான்,
பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே.
பதவுரை
| ஊரான் |
– |
திருவூரகமென்னும் திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும் |
| குடைந்தை உத்தமன் |
– |
திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும், |
| ஒருகால் |
– |
முன்னொரு காலத்தில் |
|
(ஸ்ரீராமாவதாரத்தில்) |
||
| சிலை இருகால் வளையதேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் |
– |
வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து அவிவேகிகளான ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்தவனும் |
| வற்றா வருபுனல் சூழ் பேரான் |
– |
ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண்வளர்ந்தருள்பவனும் |
| பேர்ஆயிரம் உடையான் |
– |
ஸஹஸ்ரநாமங்களை யுடையவனும் |
| பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் |
– |
நெருங்கி யிருக்கிற சிறகுகளை யுடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற (திருத்துழாய்) மாலையையுடை யவனுமான எம்பெருமான் |
|
(எழுந்தருளியிருக்கிற( |
||
| தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் |
– |
தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தை |
|
நெஞ்சே!, அடை-. |
||
#991
ஊரான் குடந்தை உத்தமன் * ஒரு கால் இரு கால் சிலை வளையத் *
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்* வற்றா வரு புனல் சூழ் பேரான் **
பேர் ஆயிரம் உடையான் * பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் *
தாரா வயல் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே! —(1-5-4)
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
* * * -(ஊரான் குடந்தை.) ‘ஊரகம்’ என்கிற சொல் ஊர் என்று விகாரப்பட்டதாகக்கொண்டு ஊரகமென்கிற திவ்ய தேசத்தைத் தனக்கு இருப்பிடமாகவுடையவன் என்று பொருளுரைப்பது ஒருவழி. கச்சியில் உலகளந்த பெருமாள் ஸந்நிதிக்குத் திருவூரக மென்று திருநாமம். ஊரான் என்பதைக் குடந்தையோடே அந்வயித்துக் குடந்தையூரான் என்று கொண்டு திருக்குடந்தையை இருப்பிடமாகவுடையவன் என்றுரைத்தலும் ஒரு வழி. உத்தமன் – இப்படி திவ்ய தேசங்களிலே வந்து அனைவர்க்கும் எளியனாக எழுந்தருளி யிருப்பது காரணமாகத் திருக்குணங்கள் சிறப்புறப் பெற்றவன் என்றவாறு.
தேரா அரக்கர்=தேர்தலாவது ஆராய்தல் ; ஆராய்ச்சியற்ற அரக்கர் என் றது – ‘ஸாக்ஷாத் பரமபுருஷனான பெருமானோடு நாமோ எதிரிடுவது’ என்று விவேகிக்கமாட்டாமல் அறிவு கெட்டு எதிரிட்ட அரக்கர் என்றபடி. அவர்களுடைய தேர் வெள்ளங்களைச் செற்றானென்றது – ஜநஸ்தானத்திற் செய்த கரவதத்தைச் சொல்லவுமாம்; இலங்கையிற் செய்த ராவணவதத்தைச் சொல்லவுமாம்.
வற்றாவருபுனல் சூழ்பேரான் = பேர் – திருப்பேர்நகர்; அப்பக்குடத்தான் ஸந்நிதி எனவும் ‘கோயிலடி’ எனவும் வழங்கப்படும். இத்தலம் காவிரிக்கரையிலுள்ளமை பற்றி ‘வற்றா வருபுனல் சூழ்’ எனப்பட்டது. உள்ள நீர் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற நீர் சூழ்ந்த திருப்பேர் நகரைத் தனக்கு வாஸஸ்தலமாக வுடையவன் என்கை. பேராயிரமுடையான் – தன்னுடைய குணங்களையும் சரிதங்களையும் விளக்குகின்ற பல பல திருநாமங்களையுடையவன் என்கை.
பிறங்குசிறைவண்டறைகின்றதாரான்–பிறங்குதல் – பிரகாசித்தலும் நிறைந்திருத்தலும். பிறங்கு என்பதை சிறைக்கு விசேஷணமாக்கி உரைக்கவுமாம், தார்க்கு விசேஷணமாக்கி உரைக்கவுமாம்.
தாராவயல் சூழ்ந்த = தாரா என்று ஒரு பக்ஷிஜாதி; அது நீர் நிலங்களில் வாழ்வது . வடநூலார் பொதுப்படையாக ஸாரஸபக்ஷியென்பர். …… (4)
English Translation
The supreme Lord of Urakam, and of Kudandai, once bent his bow and killed the many Rakshasas who came battling in a sea of chariots. He is surrounded by ever-flowing waters in Tirupper. He has a thousand names. He wears a garland of bee-humming Tulasi. He resides amid fertile fields with water birds. Go to Him in Saligrama, O Heart!
