(992)

(992)

அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்

விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன்*

கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்

தடுத்தான், தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே!

பதவுரை

அடுத்து ஆர்த்து எழுந்தாள்

மேல் விழுந்து வந்துகிட்டி ஆரவாரஞ்செய்து கிளர்ந்தவளான சூர்ப்பணகை.
பிலம் வாய் விட்டு அலற

பிலம்போன்ற வாயைத்திறந்து கொண்டு கதறும்படியாக
அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்

அவளுடைய மூக்கை கூர்மையான வாளாலே (இளையவனைக் கொண்டு) அறுத்தவனும்
விளங்கு சுடர் ஆழி

பிரகாசிக்கின்ற ஒளியையுடைய திருவாழியையுடையவனும்
விண்னோர் பெருமான்

நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை நண்ணார்முன் இனம் நிரைக்காகல் ஒன்று ஏந்திதடுத்தான்

வேகத்துடன் ஆரவாரஞ்செய்துகொண்டு கிளர்ந்து வந்த  கனத்த மழையை எதிரிகளான இந்திராதிகளின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை ரக்ஷிப்பதற்காக, (கோவர்த்தனமென்கிற) ஒரு மலையை ஏந்தித்தடுத்தவனுமான எம்பெருமான்(எழுந்தருளியிருக்கிற)
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம்

தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை

நெஞ்சே!,  அடை-.

#992

அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற * அவள் மூக்கு அயில் வாளால்

விடுத்தான் * விளங்கு சுடர் ஆழி * விண்ணோர் பெருமான் நண்ணார் முன் **

கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்* கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத்

தடுத்தான் * தடம் சூழ்ந்து அழகாய* சாளக்கிராமம் அடை நெஞ்சே! —(1-5-5)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *- (அடுத்தார்த் தெழுந்தாள்.) அடுத்தார்த்தெழுந்தாளவள். பிலவாய் விட்டலற அவள் மூக்கை அயில் வாளால் விடுத்தான் என்று! சூர்ப்பணகையின் மூக்கறுத்தமை சொல்லுகிறது. ஸ்ரீராமன் ஒரு வருஷகாலம் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் போது ஹேமந்தகாலத்தில் சூர்ப்பணகை என்றொரு அரக்கி அழகிய வடிவமெடுத்து வந்து இராகவனைக்கண்டு காமவிகாரமடைந்து தன்னை மனைவியாகக் கொள்ளுமாறு விரும்ப, இராகவன் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள்; என் தம்பியாகிய லக்ஷ்மணனை அடைந்தாயாகில் ஸுகமடையலாம்’ என்று சொல்ல, அப்படியே அவள் லக்ஷ்மணனிடம் செல்ல, நான் ஒருவர்க்கு வேலைக்காரன், என்னை யடைந்தால் நீயும் வேலைக்காரியாவாய்; ஆகையால் அவரையே அடைவது உனக்கு நலம்’ என்று லக்ஷ்மணன் சொல்ல; இப்படி அங்குமிங்குமாய்த் திரிந்து இஷ்டத்தைப் பெறாமல் ‘நம் இஷ்டத்தை இந்த ஸீதை நிறைவேற வொட்டாமல் செய்கிறாளாகையால் இவளைத் தின்று விடுவோம்’ என்று அவ்வரக்கி ஸீதா தேவியிடம் ஓட, உடனே இலக்குமணன் இராமபிரானது ஆஜ்ஞையினால் அவளைத் தகைந்து காதையும் மூக்கையும் அறுத்து அங்கபங்கஞ் செய்திட்டார் என்ற வரலாறு அறியத் தக்கது. இவளை அங்கபங்கஞ் செய்தது இளையபெருமாளின் செய்கையாயினும் இதனை இராமபிரான் மேலேற்றி ஆழ்வார்கள் அநுஸந்திப்பர்கள். உலகில் ஒரு காரியம் செய்வித்தவனை, அது செய்தவனாகவே சொல்லுவதுண்டு; அது போலக் கொள்க. அன்றியும், ‘ராமஸ்ய தக்ஷிணோ பாஹு” என்றபடி இராம பிரானுக்கு லக்ஷ்மணன் வலக்கை யெனப்படுதலால் அங்ஙனம் கையாகிய லக்ஷ்மணனுடைய செயலை அவயவியான இராமன் செய்ததாகச் சொல்லுதலும் தகுதியே. பலராமன் செய்தருளிய ப்ரலம்பாஸுரவதத்தைக் கண்ணபிரான் செய்தருளியதாக அநுஸந்திப்பதும் இது போன்றதேயாம்.

பிலவாய்விட்டலற = முதலில் ஜனஸ்தானத்திற் சென்றும், பிறகு இலங்கையிற் சென்றும் வாய்விட்டுக் கதறியழுதபடியைச் சொல்லுகிறது. கலையலங்குமகலல்குலரக்கர் குலக்கொடியைக் காதொடு மூக்குடனரியக்கதறியவளோடித், தலையில் அங்கை வைத்து மலையிலங்கை புகச்செய்த தடந்தோளன்” என்று மேலே அருளிச் செய்வது காண்க. அயில்–கூர்மை.

கடுத்து ஆர்த்து எழுந்த பெருமழையை இனநிரைக்கா கல்லொன்றேந்தித் தடுத்தான் – இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடா மழை பெய்விக்க, கண்ணபிரான் கோவர்த்தனத்தைக் குடையாக வெடுத்துக் கோநிரைகளைக் காத்தபடி சொல்லுகிறது. கோவர்த்தனம் பெரியமலையா யிருக்கச் செய்தேயும் அதனைச் சிறியவொரு கல் எடுப்பது போலவே எளிதில் எடுத்தானென்பது தோன்றக் கல்லொன்றேந்தி என்றார். இப்படிப்பட்ட எம்பெருமானுடைய சாளகிராமத்தை நெஞ்சே ! அடை , … … … … (5)

English Translation

The Lord of discus is the Lord of the celestials. When the demoness approached him with lewdness, he cut off her nose and sent her howling through her gaping mouth. When the dark clouds gathered with thunder, He lifted the Govardhana mount and stopped the rains to save the cows, putting his detractors to shame. He resides amid beautiful lakes. Go to Him in Saligrama, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top