(993)

(993)

தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட

வாயான், தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை

ஏயானிரப்ப, மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும் தாயான்.

காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே!

பதவுரை

தாய் ஆய் வந்த பேய் உயிரும்

தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும்
தயிரும் விழுதும்

தயிரையும் வெண்ணெயையும்
உடன் உண்ட வாயான்

ஒன்றுசேர்த்து அமுதுசெய்தவனும்,
ஏயான்

(யாசிப்பதற்குத்) தகாதவனானதான்
தூய வரி உருவின் குறள் ஆய்மாவலியை சென்று

பரிசுத்தமும் ஸுந்தரமுமான ரூபத்தையுடையவாமநனாகி மாவலியிடம் சென்று
இன்றே மூ அடி மண் தா என்று இரப்ப

இப்போதே (எனக்கு) மூன்றடி நிலம் கொடுஎன்று யாசிக்க,

(அவன் நீர் வார்த்துத் தந்தவுடனே)

உலகு ஏழும் தாயான்

எல்லாவுலகங்களையும் தாவியளந்து கொண்டவனும்
காயா மலர் வண்ணன் சாளக்கிராமம்

காயாம்பூப்போன்ற நிறமுடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை

நெஞ்சே!,  அடை-.

#993

தாயாய் வந்த பேய் உயிரும் * தயிரும் விழுதும் உடன் உண்ட

வாயான் * தூய அரி உருவின் குறளாய்ச் சென்று * மாவலியை

ஏயான் இரப்ப ** மூவடி மண் இன்றே தா என்று * உலகு ஏழும்

தாயான் * காயா மலர் வண்ணன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே! —(1-5-6)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * [தாயாய்வந்த.] கண்ணபிரானுக்குத் தயிர் பால் வெண்ணெய் முதலியன எப்படி போக்யமாயிருந்தனவோ, அப்படியே, தன்னைக் கொல்ல வந்த பூதனையின் உயிரும் போக்யமாயிருந்ததென்பது தோன்ற அருளிச் செய்கிற அழகு காண்மின். “***” = “தஸ்யாஸ் ஸ்தநம் பபௌ க்ருஷ்ண ப்ராணைஸ் ஸஹ நநாத ச – ஸ்தந்யம் தத் விஷஸம்மிச்ரம் ரஸ்யமாஸீத் ஜகத்குரோ என்று ஹரிவம்சத்தில் சொல்லப்பட்டது. $“பெருமாவஞ்சப் பேய்வீயத் தூய குழவியாய் விடப்பாலமுதாவமுது செய்திட்ட மாயன்” என்றார் நம்மாழ்வாரும். $ திருவாய்மொழி 1-5-9.

ஏயான் தூயவரியுருவிற் குறளாய்ச் சென்று மூவடி மண் இன்றேதாவென்று மாவலியை இரப்ப = ஏயானென்றது தகாதவனென்றபடி ; யாசிக்கத் தகாதவ னென்கை. உலகங்கட்கெல்லாம் ஒருதனி முதல்வனாயிருந்து வைத்து,* அலம் புரிந்த நெடுந்தடக்கையனாயிருந்து வைத்து யாசகனாய்ச்செல்வது தகுதியன்றே. ஆயினும் உபாயமறிந்து காரியஞ் செய்பவனாதலால் இவ்வுபாயத்தாலல்லது மாவலியின் மதத்தை அடக்க வொண்ணாமை பற்றி யாசகனாய்ச் சென்றபடி. இரப்ப என்றதற்கு மேல் ‘ அவனும் மூவடி மண் தாரைவார்த்துக் கொடுக்க’ என்று கூட்டிக் கொள்வது. ”மாவலியையே யான் இரப்ப” என்று பதம் பிரித்து உரைப்பதும் ஒன்றுண்டு. மாவலியையே நோக்கி ‘யான் இரப்ப மூவடி மண் இன்றே தா’ என்று சொல்லி உலகேழும் தாவியளந்தவன் என்றவாறு. “மாவலியை ஏ! யான் இரப்ப” என்றும் பிரிக்கலாம். ஏ!- அடா மாவலி!, என்றபடி.…….(6)

English Translation

The Lord sucked the life out of the ogress who came as a midwife. He also gulped the curds and butter of cowherd-dames. He went a-begging to Mabali and asked for three strides of land, then strode over the seven worlds. He has the hue of Kaya flowers. Go to Him in Saligrama, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top