(987)
வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை,
கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல்,
வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன் மருவி,
இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே.
பதவுரை
|
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் |
– |
(பெரிய வேகத்தோடு) வருகிற அலைகளை யுடைத்தாய் தெளிந்த ஜலத்தை யுடைத்தான |
|
கங்கையின் கரை மேல் |
– |
கங்கையின் கரை மேலே |
|
வதரியாச்சிராமத்து உள்ளானை |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிருக்கிற |
|
கரு முந்நீர் கடல் வண்ணனை |
– |
கறுத்த மூன்று வகைப்பட்ட நீரையுடைய கடல் போன்ற நிறத்தனான ஸ்ரீமந் நாராயனனை. |
|
எண்ணி |
– |
அநுஸந்தித்து |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
வாய் ஒலி செய்த |
– |
திருவாய்மலர்ந்தருளிய |
|
பனுவல் |
– |
பாசுரமாய் |
|
வரம் செய்த |
– |
சிறந்ததான |
|
ஐந்தும் ஐந்தும் |
– |
இப்பத்துப்பாசுரங்களையும் |
|
வல்லார்கள் தாம் |
– |
ஓதவல்லவர்கள் |
|
வெண் குடை கீழ் |
– |
வெண் கொற்றக் குடையின் கீழ் வாழ்ந்து கொண்டு |
|
இரு கடல் உலகம் ஆண்டு |
– |
பெரிய கடல்சூழ்ந்த இப்பூமியை ஆண்டபின் |
|
உடன் |
– |
அடுத்தபடியாக |
|
வானவர் உலகு மருவி |
– |
ப்ரஹ்மலோக நிர்வாஹகராக இருந்து |
|
இமையவர் ஆகுவர் |
– |
(அதன் பிறகு) நித்யசூரியளாகவும் ஆவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
வருந்திரைமணிநீர்க்கங்கையின்கரைமேல் * வதரியாச்சிராமத்துள்ளானை * கருங்கடல் முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல்* வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன்மருவி * இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே.
***-(வருந்திரைமணிநீர்.) இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டும் பாசுரம் இது. பெரிய வேகத்தோடு வருகிற அலைகளையுடைத் தாய் தெளிந்த தீர்த்தத்தையுடைத்தான கங்கையின் கரைமேலே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே யெழுந்தருளியிருக்கிற கடல்வண்ணனான ஸ்ரீமந்நாராயணமூர்த்தியைச் சிந்தித்துத் திருமங்கையாழ்வாரருளிச்செய்த சிறந்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், கடல் சூழ்ந்த மண்ணுலகத்தை நெடுநாள் ஆண்டபின் ப்ரஹ்மபதத்தை நிர்வஹித்து அதன்பிறகு நித்யஸுரிகளோடே ஒரு கோஷ்டியாக இருக்கப் பெறுவர்.
“ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேசனடியாரே”, “வைகுந்தமேறுவரே” என்றாற்போலே பரமபுருஷார்த்தத்தையே பலனாகச் சொல்லவேண்டி யிருக்க, இருங்கடலுலகமாள்வதான க்ஷுத்ர புருஷார்த்தத்தைப் பலனாகச் சொல்வதேன்? என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டார்; அதற்கு அவர் ரஸோக் தியாக ஒரு உத்தரம் அருளிச்செய்தாராம் ; அதாவது- “திருமங்கையாழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐச்வர்யமும் பரம புருஷார்த்தமாய் விட்டது காணும்; பணமுள்ள விடங்களிற் சென்று கொள்ளையடித்து பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணுகிறவராகையாலே ஹேயமான ஐச்வரியமும் இவ்வாழ் வார் திருவுள்ளத்தால் உத்தேச்யமாய் விட்டதிறே” என்றாராம். ஆரார் எந்த எந்த பலன்களை விரும்பினாலும் அந்த அந்த பலன்கள் இவ்வருளிச் செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள். “ இத்தால் சொல்லிற்றாய்த்து– இவன் அபிஸந்தி பண்ணின வற்றை யெல்லாம் தருமென்றபடி.” என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸுக்தியும் காண்க.
கருங்கடல் முந்நீர்வண்ணனை என்றவிடத்து முந்நீர் என்பது கருங்கட லுக்கு விசேஷணம். முந்நீர்–ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் (மழைநீர்) என்னும் மூன்றுவகை நீரையுடையது எனப்பண்புத்தொகையன் மொழியாகிய காரணப்பெயரென்பது பழைய கொள்கை. இதனைமறுத்துக் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். ஆற்று நீரென்பது மழைநீரே யாகையாலும், இவ்விரண்டு மில்லாதபோது ஊற்றுநீருமில்லையாகையாலும் இவற்றை முந்நீரென்பது பொருந்தாது என்று சொல்லி வேறு பொருள் கூறுகிறார் ; அதாவது- முச் செய்கையையுடைய நீர் முந்நீரென்பதாம். முச்செய்கையாவது- மண்ணைப் படைத்தலும் மண்ணை யழித்தலும் மண்ணைக் காத்தலுமாம். நீரினின்று நிலம் பிறந்ததென வேதமோதுதலால் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையாதாதலால் காத்தலும், இறுதியில் நீரினால் மூடப்பட்டு உலகம் அழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும் கடலுக்கு உரியனவாம். நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே. நம் பூருவாசாரியர்கள் முன்றுவகை நீரையுடையதென்னும் பொருளையே ஆதரிப்பர். முன்னீர் என றன்னகரமாகப் பாடமோதி, பழைய நீர் என்றுரைப்பாருமுண்டு: ஆதியிற் கடவுள் நீரையே படைத்தாரென்று புராணங்கூறும்.
பனுவல்- சாஸ்த்ரம்; சொல்லுமாம். வரஞ்செய்த-வரமென்று பகவத் ப்ரஸாதத்தைச் சொல்லிற்றாய், தம்முடைய கவனஸாமர்த்தியத்தாலன்றிக்கே எம்பெருமானுடைய – இன்னருளால் செய்யப்பட்ட பாசுரமென்றபடி. வட மொழியில் வரமென்று ச்ரேஷ்ட்ட வாசகமுமாகையாலே சிறந்ததாகச் செய் யப்பட்ட என்ற பொருளும் கொள்ளற்பாலதே. ….. … … (௰)
அடிவரவு- ஏனம் கானிடை இலங்கை துணிவு பேய் தேர் வெந்திறல் மான் கொண்டல் வருந்திரை கலை.
நான்காந்திருமொழி உரை முற்றிற்று.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
English Translation
This garland of songs sung by Kaliyan recalls the Lord of dark ocean-hue residing in Vadari-Ashrama on the banks of the river Ganga’s pure gushing waters. Those who master it will rule the Earth under a white parasol, then also go to the world of eternals and be counted among gods.
