(988)

(988)

கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்*

சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து*

மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்*

தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே!

பதவுரை

கலையும் கரியும் பரிமாவும்

மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள்
திரியும் கானம் கடந்துபோய்

திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று
சிலையும் கணையும் துணை ஆக

வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு
வென்றி செருகளத்து சென்றான்

(தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும்,
அலை நீர்

அலைக்கின்ற நீரையுடைய கடலிலே
மலை கொண்டு

மலைகளாலே
அணை கட்டி

ஸேது கட்டி
மதிள் நீர் இலங்கை

மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள
வாள் அரக்கர் தலைவன்

வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய
பத்து தலை

பத்துத்தலைகளையும்
அறுத்து உகந்தான்

அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய
சாளக்கிராமம்

ஸ்ரீஸாளக்ராமத்தை
நெஞ்சே அடை

மனமே!, சென்று சேர்.

ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி – முதற்பத்து

ஐந்தாந்திருமொழி – கலையுங்கரியும்.

(திருச்சாளக்கிராமம்)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அவதாரிகை :-

வாடினேன்வாடி யென்கிற முதல் திருமொழியிலே, தமக்குத் திருமந்திரம் லபித்தபடியைப் பேசினார். அந்தத் திருமந்திரத்தின் அர்த்தத்தையும் கூடவே ஆராய்ச்சி செய்தருளி திருமந்த்ரார்த்தத்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களிலே சென்று எம்பெருமானை ஸேவிக்கவேணுமென்று திருவுள்ளம்பற்றி, திருமந்திரத்தை வெளியிட்டருளின எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமான ஸ்ரீபதரிகாச்ரமத்தைத் தேடி வடக்கே எழுந்தருளின வளவில் திருப்பிரிதி என்னும் திவ்யதேசம் நேர்பட, இரண்டாந் திருமொழியால் அதனை அநுபவித்து, அதன் பிறகு வதரியை வணங்கி, அதற்குப் பிறகு ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் ஸந்நிதி பண்ணி யெழுந்தருளியிருக்கிற ஸ்ரீமந்நாராயணமூர்த்தியைக் கீழ்த் திருமொழியால் மங்களாசாஸநஞ் செய்து, இனி எங்குச் செல்ல வேண்டுமென்று யோசித்து நின்றவளவில், ஸ்ரீஸாளக்ராம மென்னும் திவ்யதேசத்திலே தான் எழுந்தருளியிருந்து அடியார்கட்குக் காட்சி தந்தருளுகிறபடியை எம்பெருமான் ஆழ்வாரது ஞானக்கண்ணுக்குத் தோற்றுவிக்க, ஆழ்வாரும் தமது திருவுள்ளத்தை யழைத்து ‘நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேருவோம், வா’ என்கிறார் இத்திருமொழியில்.

ஸௌபரி என்கிற ஒரு மாமுனிவன் நீர்நிலையிலிருந்து கொண்டு தவம் புரியா நின்றவளவில் அங்கு மீன்களெல்லாம் கூடிக்களித்து விளையாடா நின்றமையைக் கண்ணுற்று ‘நாமும் இப்படி குடும்ப வாழ்க்கையிற் கூடி நின்று சிற்றின்பம் நுகர்ந்து களிக்கவேணும்’ என்று ஆவல் கொண்டு மாந்தாதா என்னும் அரசனுக்குப் பல பெண்கள் இருப்பதாக உணர்ந்து அவனிடஞ்சென்று தனக்குக் கன்னிகாதானஞ் செய்யுமாறு வேண்ட, அரசன் இவருடைய கிழத் தனத்தையும் குரூபத்தையுங் கண்டு இசையகில்லாமல் ‘பெண் கொடுக்கமுடியாதென்று நம் வாயாற் சொன்னால் முனிவர் முனிந்து சபித்துவிடக்கூடும்; பெண்களிருக்குமிடத்திற்கு இவரை அனுப்புவோம்; இவரைக் கண்டு பெண்கள் காமுற்றார்களாகில் விவாஹம் செய்து கொள்ளட்டும்; இல்லையாகில் அவர்களே மறுத்து விடட்டும்; நம் தலையில் பழி வேண்டா’ என்றெண்ணி முனிவரைப் பெண்களிருக்குமிட மனுப்ப, முனிவர் அங்குச் செல்லும்போதே தமது தவ வலிமையால் திவ்ய ஸுந்தரமான ரூபத்தை ஏன்று கொண்டு போய் அவர்கள் முன்னே நின்றவளவில் அங்கிருந்த ஐம்பது பெண்களும் நானே இவரை மணந்து கொள்வேன், நானே இவரை மணந்துகொள்வேன் என்று போட்டி போட்டுக்கொண்டு மேல்விழுந்தவாறே, முனிவர் அத்தனை பெண்களையும் மணந்து கொள்ள விரும்பித் தமது தவவலிமையால் ஐம்பது வடிவமெடுத்து அப்பெண்களனைவரையும் விவாஹஞ் செய்துகொண்டு மகிழ்ந்திருந்தாரென்று புராணங்களில் இதிஹாஸ முண்டு. அதுபோலவே எம்பெருமானும் ஆச்ரிதர்களான அஸ்மதாதிகளை அநுபவிப்பதற்காகப் பல பல திவ்யமங்கள விக்ரஹங்களைப் பரிக்ரஹித்து, திவ்ய தேசங்கள் தோறும் ஸந்நிதி பண்ணியிருக்கிறானாகையாலே ஆழ்வார் எங்கும் புகுந்து மங்களாசாஸநம் செய்ய விரும்பி ஸ்ரீஸாளக்ராமத்திலே செல்லுகிறாராயிற்று.

988

கலையும் கரியும் பரிமாவும் * திரியும் கானம் கடந்து போய் *

சிலையும் கணையும் துணையாகச்* சென்றான் வென்றிச் செருக்களத்து**

மலை கொண்டு அலை நீர் அணை கட்டி * மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் *

தலை பத்து அறுத்து உகந்தான் * சாளக்கிராமம் அடை நெஞ்சே! —(1-5-1)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * –(கலையுங்கரியும்.) நெஞ்சே! நீ ஸ்ரீஸாளக்ராமமென்னும் திவ்ய தேசத்தை அடைந்திடு. அத்திருப்பதி யாருடையது ? – இராவணனது தலைகள் பத்தையும் அறுத்துகந்த இராமபிரானுடையது. இராவணன் தலைகளை யறுப்பதற்காக அப்பெருமான் என்னகாரியஞ் செய்தான்? – பலபல மிருகங்கள் நிறைந்து கிடந்த கொடிய காட்டைக் கடந்து சென்று வில்லையும் அம்புகளையும் துணையாகக் கொண்டு யுத்த பூமிக்கு வருமளவில் கடலைக் கடந்து வரவேண்டிற்றான படியால் மலைகளைக்கொண்டு கடலிலே ஸேதுகட்டி அவ்வழியாலே இலங்கை வந்து சேர்ந்தானாயிற்று. இப்படி ஆச்ரிதவிரோதிகளை அழிப்பதற்கு அருந்தொழில்கள் செய்யுமவனான பரமபுருஷன் நம்போல்வாருடைய விரோதிகளையும் தொலைப்பதற்குச் சாளக்கிராமத்திலே வந்து நிற்கிறான்; அங்குச் செல் வோம், வா நெஞ்சே ! என்றாராயிற்று.

காட்டின் கொடுமையைச் சொல்ல வேண்டில், யானை சிங்கம் புலி முதலிய துஷ்ட மிருகங்களையன்றோ முன்னே கூற வேண்டும்; கலையும் என்று ஸாதுவான மான்களை முன்னே கூறுவானேன்? என்னில்; மாரீசன் மாயமானாக வந்து செய்த கொடுமை வலிதாயிருந்ததனால் அந்த மான்சாதியை முன்னே கூறினரென்க. பிராட்டி இராமனைப் பிரிந்து பட்ட வருத்தங்கட்கெல்லாம் மூலகாரணம் மாரீசனாகிற மாயமானே யாதலால் கொடிய மிருகங்களில் மான் முற்படவுரியதேயாம்.

இங்கு மானை முற்கூறியதற்கு வேறொரு வகையான காரணமுங்கூறலாம். அதாவது–மான் சாதியில் மிக நன்றி பாராட்டி முற்கூறுகின்றாரென்னலாம். மஹாத்ரோஹியான மாரீசனிடத்தில் நன்றி பாராட்டுதல் ஏதுக்கென்னில்; கேண்மின். சூர்ப்பணகை மூக்கறுப்புண்டு, ஜனஸ்தானத்திலிருந்த தன் தமையனாகிய கரன்பக்கல் சென்று இச்செய்தியைச் சொல்லிப் புரண்டழுது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கினவளவில் அக்கரன் பதினாலாயிரம் சேநாதிபதிகளையும் ஸேனைகளையும் இராமபிரானோடு போர் செய்ய அனுப்ப, இராமன் அவர்களத்தனை பேரையும் தாம் ஒருவராகவே கொன்று வென்றிட்டு, பிறகு வந்த கரனையும் கொன்றுவிட்டு ஜனஸ்தானத்தை சூந்யமாக்கின போது அங்கு இராமபாணத்துக்குத் தப்பிப்பிழைத்து ஒளித்து ஓடிப்போன அகம்பநன் இலங்கைக்குச் சென்று ஜநஸ்தான மடங்கலும் பாழ்பட்ட செய்தியையும் இராமன் ஒருவராலும் வெல்ல முடியாதவனென்பதையும் சொல்லி ‘ஸீதையை அபஹரித்துக் கொண்டு வந்தால் அந்த வருத்தத்தினால் இராமன் முடிந்து விடக் கூடும்’ என்று தெரிவிக்க, இராவணன் அவனது சொற்படியே ‘ஸீதையைக் கொள்ளை கொள்ள உபாயமென்?’ என்று யோசித்து அங்கு நின்றும் புறப்பட்டு மாரீசனிருக்குமிடத்திற்கு வந்து நீ எனக்கு ஓருதவி செய்யவேணும்’ என்று சொல்லித் தன் கருத்தை வெளியிட, அதுகேட்ட மாரீசன் ‘அப்பா இராவணா! அந்த மஹாநுபாவனுடன் உனக்கு த்வேஷம் உதவாது; இந்த இராமன் சிறுபிள்ளையாயிருக்கும் பொழுதே விச்வாமித்ரயாகத்தில் அவருடைய பாணத்துக்கு இலக்காகி நான் பட்டபாடு இன்னும் மறக்கமுடியவில்லை; அத் திருநாமம் செவிப்படும்போதே என் உடல் நடுங்குகின்றது; இப்பேச்சை விட்டு விடு ; இதை நெஞ்சிலும் நினையாதே’ என்று யுக்தமாக உபதேசிக்க அதைக் கேட்டு இராவணன் இலங்கைக்குப் போய்விட்டான். பிறகு சூர்ப்பணகை இலங்கைக்குச் சென்று, தான் மூக்கறுப்புண்டபடியையும் தாசரதிகளுடைய ஸௌந்தர்ய பராக்ரமாதி குணங்கள் எல்லையற்றிருக்கிறபடியையும் ஸீதையின் இருப்பையுஞ் சொல்லி ‘இராகவனை நீ எவ்விதத்திலாவது பங்கஞ் செய்யாவிடில் நீ ஆண்பிள்ளையே அல்ல’ என்று கூறி இராவணனை நிந்தித்துக் கீழே விழுந்து புரண்டு அழ, இராவணன் மறுபடியும் மாரீசனிடஞ்சென்று நயபயங்களினால் அவனைத் தன் சொல்வழிப்படுத்திக் கொண்டு அம்மாரீசனும் தானுமாய்ப் புறப்பட்டு வந்து தான் ஓரிடத்தில் ஒளித்திருந்தான். மாரீசன் இராவணனுடைய வலிகட்டாயம் பொறுக்கமாட்டாமல் மனம் நொந்து கொண்டே உடன்பட்டு வந்தானேயன்றி இராமபிரானிடத்தில் கறுக்கொண்டு வந்தானில்லை; படுபாவியான இவ்விராவணனுக்கு உடன்பட்டு நாம் காரியஞ் செய்யாவிடில் இவன் நம்மைக் கொலை செய்யப்போகிறான். இவனுக்கு உடன்பட்டுக் காரியஞ்செய்தோ மாகில் இராமபிரான் நம்மைக் கொன்றுவிடப்போகிறார்; இப்பாவியின் கையில் நாம் கொலையுண்பதிற்காட்டிலும் அப்பரமபுருஷன் கையிற் கொலையுண்பது நற்கதிக்கு ஹேதுவாம்’ என்றெண்ணித் தன் மரணத்தைத் தீர்மானித்துக் கொண்டே வந்தானத்தனை. பிறகு மாரீசன் பொன்மானின் வடிவெடுத்துக் கொண்டு ஸீதையின் பார்வையில் மேயத்தொடங்கி அக்காட்டில் நெடுந்தூரம் இராகவனை இழுத்துக்கொண்டு போய்விட்டான். அப்பொழுது இராகவன் ‘இவன்யாரோ அரக்கன்’ என்று தெளிந்து அம்புகளை அவன் மீது எறிந்தார். அதனால் அடியுண்ட மாரீசன் மானுருவைவிட்டு நிஜ ரூபத்துடன் கீழே விழுந்து ‘ஹா லக்ஷ்மணா! ஹா ஸீதே ! கெட்டேன்’ என்று இராகவனைப் போல் கூச்சலிட்டுக்கொண்டு மரணமடைந்தான். இங்கு நாம் ஆலோசிக்கவெண்டிய தென்ன வென்றால், இப்படி இவன் கூச்சலிட்டது இராவணனுக்கு உபகாரஞ் செய்ய வேணுமென்கிற எண்ணத்தினாலா? அல்லது அபகாரஞ் செய்யவேணுமென்கிற எண்ணத்தினாலா? என்று ஆராய வேண்டும். ‘இராவணன் கையாற் கொலை யுண்பதை விட இராமபாணத்தாற் கொலையுண்டு முடிதல் நன்று’ என்கிற எண்ணத்தோடு வந்த மாரீசனுக்கு இராவணன் திறத்தில் உபகாரஞ் செய்ய வேணுமென்கிற எண்ணமுண்டாக ப்ரஸக்தியில்லை; நாம் மாண்டொழிவது போல் அவனையும் மாண்டொழியச் செய்துவிடவேண்டு’ மென்ற எண்ணங் கொண்டே இராகவனைப்போல் கூச்சலிட்டான்; மாரீசன் இப்படி கூச்சலிடாமல் வெறுமனே செத்திருப்பானாகில், பிராட்டி லக்ஷ்மணனைப்பிரிய நேர்ந்திராது; இராவணன் பிராட்டியைக் கவர்ந்து கொண்டு போகவும் அது நிமித்த மாகத் தான் மாண்டுபோகவும் நேர்ந்திராது; தேவர்களின் பிரார்த்தனை ஈடேறவும் வழியிராது. மரணகாலத்தில் மாரீசன் போட்ட கூச்சலே ராவணஸம்ஹாரத்திற்கு மூலகாரணமாக நின்றமையால் ஸ்ரீராம விஷயத்திலே மாரீசன் உபகாரகனேயன்றி அபகாரகனல்லன் என்று நினைக்கத் தக்கது. இப்பெருநன்றியைப் பாராட்டி இங்குக் “கலையும்” என்று மான் சாதியை முற்படக் கூறுகின்றார் ஆழ்வார் என்று கொள்க.

கரியும் – கரீ என்ற வடசொல் யானைக்குப் பெயர். பரி என்றும் பரிமா என்றும் குதிரைக்குப் பெயர். கலை, கரி, பரிமா என்பன பால்பகா அஃறிணைப் பெயர்களாதலால் கலைகளும் கரிகளும் பரிமாக்களும் எனப் பன்மைப் பொருள் படும். காநநம் என்ற வடசொல் கானம் எனச் சிதைந்தது

கானங்கடந்து போய் என்ற சொல்லாற்றலால் – ஒரு காட்டிலிருந்து மற்றொரு காடு, அந்தக் காட்டிலிருந்து மற்றொருகாடு என்றிப்படி காடுகளின் மேற் காடாக எழுந்தருளினமை தோற்றும். வழியில் ஒரு குக்ராமமும் இல்லை யென்ற படி. “***” = “தேவநேந வநம் கத்வா” என்றார் வான் மீகியும்.

சென்றான் வென்றிச் செருக்களத்து = அயோத்தியை விட்டுப் புறப்பட்ட பிறகு யுத்தம் நடந்த இடங்களெல்லாவற்றையும் நினைத்து “செருக்களத்துச் சென்றான்” என்கிறார். கரதூஷண யுத்தம் முதலிய இடைப்போர்கள் பல வுண்டே. ஒவ்வொரு யுத்தத்திலும் பெருமாளுக்கு விஜயமே கிடைத்தது பற்றி வென்றிச் செரு” என்றார். யுத்தங்களில் இளையபெருமாளும் மற்றும் வானர வீரர்களும் துணைவர்போல இருந்தாலும் தனிவீரனான தாசரதிக்கு எந்தத் துணையும் அபேக்ஷிதமல்ல என்பது தோன்ற “சிலையுங்கணையுந் துணையாக என்றார்!! சிலையும் கணையுந் துணையாகக் கானம் கடந்து போய் மலைகொண்டலை நீரணைகட்டி வென்றிச் செருக்களத்துச் சென்றான்” என்றும் அந்வயிக்கலாம்.

வாளரக்கர்தலைவன் தலைபத்தறுத்து உகந்தான் = “ஒரு தேவதையை ஆச்ரயித்து அதன் பக்கலிலே ஒரு வாளைப் பெற்று அதைத் தனக்கு அரணாக நினைத்திருப்பானாய் துர்வர்க்கத்துக் கெல்லாம் நியாமகனாயிருக்கிற ராவணனுடைய தலைகள் பத்தையுமறுத்து ‘தேவர்களும் தந்தாமுடைய குடியிருப்புப் பெற்றார்கள்; ரிஷிகளும் தந்தாமுடைய ஆச்ரமங்களிலேயிருந்து தபஸ்ஸு பண்ணப்பெற்றார்கள்’ என்று உகந்தவன்; அப்படி ஆச்ரிதவிரோதியைப் போக்கிப் பிற்பட்டார்க்குமுதவுகைக்காக வந்து வர்த்திக்கிற ஸ்ரீஸாளக்ராமத்தை ஆச்ரயிக்கப் பாராய் நெஞ்சே யென்கிறார்” என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸுக்தி அறிக. … … …. …. (1)

English Translation

With bow and arrow, the Lord went through the forest roamed by wild deer, elephants and horses, then made a bridge of rocks over the lashing sea, entered the fortified Lanka city. He stood in the battlefield, and reserved the ten heads of the demon-king victoriously. Go to Him in Saligrama O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top