(964)
கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம்பரவிநின்ற டிதொழும் பிரிதிசென்றடைநெஞ்சே.
பதவுரை
| கனம் வரை |
– |
அழகிய தாழ்வரைகளில் |
| கார்கொள் வேங்கைகள் |
– |
மேக மண்டலத்தை ஆகரமித்து வளர்ந்த வேங்கை மரங்களை |
| தழுவிய |
– |
தழுவிக்கொண்டிரா நின்ற |
| கறிகொடி |
– |
மிளகுகளின் கொடிகளானவை |
| துன்னி வளர் |
– |
நெருங்கிப் படரப்பெற்றதும் |
| புனம் வரை |
– |
கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளிலே |
| போர்கொள் வேங்கைகள் தழுவிய |
– |
யுத்தத்திற்கு ஸித்தமான வேங்கைப் புலிகள் ஸஞ்சரிக்கப்பெற்றதுமாய் |
| பூ பொழில் |
– |
அழகிய சோலைகளை யுடையதான |
| இமயத்துள் |
– |
இமயமலையின் கண்-, |
| இமையோர்கள் |
– |
தேவர்கள் |
| ஏர் கொள் பூ சுனை தடம் படிந்து |
– |
அழகிய புஷ்பங்களையுடைய தடாகங்களின் துறைகளிலே தீர்த்தமாடி |
| இனம் மலர் எட்டும் இட்டு |
– |
சிறந்த எட்டுவகைப் பூக்களையும் கொண்டு ஸமர்ப்பித்து |
| பேர்கள் ஆயிரம் |
– |
ஸஹஸ்ர நாமங்களையும் |
| பரவி நின்று |
– |
வாய்வந்தபடி சொல்லி |
| அடி தொழும் |
– |
எம்பெருமான் திருவடிகளைப் பணியுமிடமான |
| பிரிதி |
– |
திருப்பரிதியை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறிவளர் கொடிதுன்னி*
போர்கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம்பொழி லிமயத்துள் *
ஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந்து இனமல ரெட்டுமிட் டிமையோர்கள் –
பேர்க ளாயிரம் பரவிநின் றடிதொழும் பிரிதி சென்றடை நெஞ்சே!
***-(கார்கொள் வேங்கைகள்.) இமயமலையின் தாழ்வரைகளிலே மேக மண்டலத்தளவும் ஓங்கி வளர்ந்த வேங்கைமரங்கள் மிளகு கொடிகளாலே தழுவப்பெற்றுநிற்கும்; வெளி நிலங்களிலுள்ள சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியாநிற்கும் ; இப்படி எங்கும் வேங்கை மயமாகவேயிராநின்ற இமய மலையின் கண் தேவர்கள் வந்து செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை என்னப்படுகிற எண்வகைப் புஷ்பங்களையும் தடாகங்களிலிருந்து கொணர்ந்து ஸமர்ப்பித்து ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லிக்கொண்டே நமஸ்கரிக்குமிடமாகிய திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே !.
கார்கொள் வேங்கைகள் = வேங்கை மரங்களில் பல வர்ணங்களிருப்பதால் கரிய நிறமுள்ள வேங்கை மரங்களை இங்குச் சொல்வதாகவுங் கொள்ளலாம். கார் – கருமைநிறத்தை, கொள்- கொண்டிருக்கிற என்றபடி. கறி-மிளகு. (எ)
English Translation
Sky-tall Vengai trees, growing on the high steps with the pepper creepers trailing below, Fearsome Vengai-tigers roaming in the low steeps of the Resident of Himavan peaks,– Gods in sky above gather in the lakes for a holy dip and flower-worship, chant the thousand holy names and bow to his feet in that Piriti,– O, Go to, my heart!
